6/11/10

முத்துக்குமாரும்…முடிவற்ற ஒரு கவிதையும்


நித்யானந்தாவை நித்தமும் பழிக்கும்
என் மனைவிக்கு இன்று வரை தெரியாது
முத்துக்குமார் என்றொருவன்
மரித்துப்போனது.
என்றாவது ஒருநாள்
எனது நாட்குறிப்பிலுள்ள
அவன் புகைப்படத்தைக் காட்டிக் கேட்பாள்
அப்போது சொல்லிக்கொள்ளலாம்...
நம்மையெல்லாம் ஏமாற்றினானே
ஒரு நித்யானந்தா
அவனைப்போல
நம் எல்லோராலும் ஏமாற்றப்பட்டவன்தான்
இந்த முத்துக்குமாரென்று!

- என் மனைவியும் ,நித்யானந்தாவும் – சொல்வனம் பகுதி- ஆனந்த விகடன் - முத்துரூபா


கடந்த வார ஒரு நள்ளிரவில் இக்கவிதையை நான் படித்தேன். பொதுவாக கவிதைகள் என்பவற்றை படைப்பாளனின் உச்சக்கட்ட உணர்வாக மட்டும் உணரும் என்னால் இக் கவிதையை மிக எளிதில் கடக்க இயலவில்லை. வலி மிகுந்த குற்ற உணர்வால் அந்த இரவில் நான் அழுத்தப்பட்டு கண்கலங்கி விழித்துக் கிடந்தேன்.

முத்துக்குமார் – நம் வாழ்நாள் முழுக்க ஏதோ தருணங்களின் மிச்ச சொச்சத்தில் ஒட்டிக் கொண்டே வரப் போகின்ற உணர்வாய் நம்முள் சுரந்துக் கொண்டே இருக்கின்றான். முத்துக்குமாருக்கு பின்னால் பல உணர்வுள்ள தமிழர்கள் அவனது பாதையை பின்பற்றினாலும் முத்துக்குமாரின் ஈகை தனித்துவ உணர்வாய் ஒவ்வொரு தமிழனின் மனசாட்சியையும் உலுக்கியது.

தான் சாகப்போகிறோம் என்பதை உணரும் தருணங்களில் அந்த இளைஞன் மிகவும் யோசித்து இருக்கிறான். தற்கொலை என்பது கோழைகளின் முடிவென்றாலும்…இது உணர்ச்சி வயப்பட்ட ஒரு இளைஞனின் தற்கொலையாக நம்மால் கணிக்கப்பட்டு விடக்கூடாது என்பதில் மிக கவனமாக இருந்திருக்கின்றான் அவன். காலநதியின் சீரற்ற ஓட்டத்தில் ஏதோ ஒரு நொடியில் சட்டென்று எடுக்கப்பட்ட ஒரு முடிவல்ல அது. மாறாக காலம் காலமாய் இறையாண்மை என்ற பெயரினால் அடக்கி வைக்கப்பட்ட தொன்மமிக்க ஒரு தேசிய இனத்தின் பொங்கி பாய்ந்த பிரவாகமாய் பிறீட்டு கிளம்பிய முத்துக்குமாரின் ஈகை நம்மை மிச்சம் இருக்கின்ற இந்த வாழ்நாட்களில் நிம்மதியாக இருக்கவிடாது.

என்னைப் பொறுத்தவரை நான் என் வாழ்நாளில் சுமக்கும் மிகப்பெரிய குற்ற உணர்வு முத்துக்குமார். அவனது தியாகம் நம்மைப் போன்றோர் சமூக இயல்பாக கொண்டிருக்கும் சுயநல, சுக நுகர்வு உள்ளத்தினை சுட்டுப் பொசுக்கிறது. நாம் தமிழர் கூட்டங்களில் கலந்துக் கொள்ளும் முத்துக்குமாரின் தந்தை , அப்பா குமரேசன் அருகில் அமரும் போது என்னால் இயல்பாக அமர இயலவில்லை. அவரின் கைகளினை நான் ஒரு சமயம் பற்றிய போது அக்கரங்கள் முத்துக்குமாரினை சுமந்திருக்கும் என்ற உணர்வே என்னை மிகவும் உணர்வு வயப்படுத்தியது.

நமக்கெல்லாம் வாய்க்காத ஒரு மனத்தினை பெற்றிருந்தான் முத்துக்குமார்.நமக்கெல்லாம் வாய்த்திருக்கின்ற சுக வாழ்விற்கான அனைத்து வாய்ப்புகளும் முத்துக்குமாருக்கும் கிடைத்து இருந்தன. ஆனால் நாமெல்லாம் பிழைப்பதற்காவும்,சோற்றுக்காகவும் ஏதோ ஒரு வேலையில் சேர்ந்து பொருளீட்டி , மனைவி மக்களுக்கு வீடு கட்டி , பிறக்க இருக்கின்ற பேரன் பேத்திகளுக்காக சொத்து சேர்த்து வாழ்கின்ற காலத்தில் தான் முத்துக்குமார் இவ்வாறு சிந்தித்தான்….முத்துக்குமாரால் இவ்வாறு சிந்திக்க முடிந்த கணத்தில் துவங்கி அவன் தமிழனின் மங்காப் புகழாய் மாறிப் போனான். வாழ்வதற்கான போராட்டம் தான் வாழ்க்கை என்பதை மறுதலித்து வாழ்வதற்கான புதிய இலக்கணத்தினை உரத்தக் குரலில் ஒவ்வொரு உணர்வு மிக்க தமிழனின் உள்ளத்தில் சொல்லிக் கொண்டு இருக்கின்றான் முத்துக்குமார்.

முத்துக்குமாரின் ஈகை தமிழ்நாட்டு அரசியல் தலைவர்களால் மூன்றாம் தர அரசியலாக மாற்றப்பட்ட அவலத்தினை கற்றது தமிழ் இயக்குனர் ராம் சாட்சியாக நின்று ஏற்கனவே எழுதி இருக்கிறார். தமிழீழ விடுதலைக்கான துருப்புச் சீட்டாக மாறி இருக்க வேண்டிய முத்துக்குமாரின் தியாக உடல் , அவனது இறுதி உள வேட்கைக்கு மாறாக மிக சாதாரண நிகழ்வொன்றில் எரியூட்டப்பட்டது.

இருந்தாலும்..முத்துக்குமார் இது நாள் வரை சாகவில்லை .

தமிழக வீதிகளில் திரிந்துக் கொண்டே இருக்கின்றான். ஈழ கனவிற்கான வெப்ப பெருமூச்சாய் புழுதியடிக்கும் தமிழக வீதிகளில் திரிகின்றான் அவன். எவ்விதமான அரசியல் லாபமின்றி.. உணர்வின் பெருக்கால் ..தேசியத் தலைவர் பிரபாகரன் நீடுழி வாழ்க என அடி வயிற்றில் இருந்து முழங்கும் எளிய தமிழின இளைஞனின் குரலில் தொனித்துக் கொண்டே இருக்கின்றான். தலைவர் உயிருடன் இருக்கிறார் என்ற செய்தியை ஆர்வமாகவும், ஆசையாகவும் பகிர்ந்துக் கொள்ளும் மனங்களாய் மாறிக் கிடக்கின்றான் முத்துக்குமார். இன துரோக அரசியலின் உச்சக்கட்ட கொடுமையாக நடக்க இருக்கும் ஆடம்பர மாநாட்டின் விளம்பரத்தினை கண்டு கூட காறி உமிழும் இளைஞனின் கோபத்தில் இருக்கின்றான் முத்துக்குமார். இனம் முள்வேலி கம்பிக்குள் அடிமைப்பட்டு கிடக்கையில் அம்பத்தூரில் கக்கூஸ் கழுவவில்லை போராட்டம் அறிவிக்கும் பித்தலாட்ட அரசியலினை இடது காலால் எட்டி உதைக்கும் இறுமாப்பு இதயங்களில் இருக்கின்றான் முத்துக்குமார்.ஒரு சீட்டுக்காக ஒற்றைக் கால் ஒடிய தவமிருந்து தள்ளாடிக் கொண்டிருக்கும் பதவி அரசியலின் பம்மாத்துத் தனத்தினை கண்டு பரிகசிக்கும் வார்த்தைகளில் வழிகிறான் முத்துக்குமார்.

முத்துக்குமாரின் ஈகை யாரும் கடக்க இயலா வெப்ப பாலைவனமாய் நம்முன் விரிந்து கிடக்கின்றது. அது பசித்த வேட்டை நாயைப் போல பின்னிரவு கனவுகளில் வேகமாய் துரத்துகின்றது. புரையோடிய புண்ணாய் …குத்திக் கிழிக்கும் வலியாய்.. சதா ஈழத்தினை நினைவூட்டி நிற்கும் அது.

6/10/10

தமிழன் என்று பதியுங்கள்: தமிழன் என்றே உணருங்கள்


நன்றி- பட உதவி- வினவு தளம்

தமிழன் என்று பதியுங்கள்: தமிழன் என்றே உணருங்கள்

நாடெங்கும் நடைப்பெற்றுக் கொண்டிருக்கிற மக்கள் தொகை கணக்கெடுப்பில் திராவிடன் என்ற இனமாக தமிழர்கள் தங்களை குறிக்க வேண்டும் என நாய் ஆளுங்கட்சியாக இருந்தால் கூட நா கூசமால் ஜால்ரா அடிக்கும் தி.க. தலைவர் வீரமணி கூறியுள்ளார். இது போன்ற விஷயங்களை வீரமணியும், அவரது தி.கவும் சமீப காலங்களில் பேசுவது இல்லை. ஆனால் தூக்கத்தில் இருந்து திடீரென எழுப்பப்பட்டவன் எச்சில் வடிய எகத்தாளம் பேசுவது போல இந்த இத்துப் போன பழைய ரேடியோ பெட்டி திராவிட ராகம் பாடியுள்ளது . வீரமணியின் இல்லாத திராவிடத்தினை மீண்டும் தூக்கி நிற்க முயற்சிக்கும் இந்த துரோக அரசியல் புறங்கையால் புறக்கணிக்கத் தக்கது.

ஒரு தொன்ம தேசிய இனத்தின் மக்கள் எதற்காக தங்களை வேறு ஒரு இனமாக பதிவு செய்ய வேண்டும் என்ற கேள்விக்கு வீணாய்ப் போன வீரமணியிடம் எந்த பதிலும் இருக்கப் போவதில்லை. ஆனால் இந்த வார்த்தையை திராவிடர்களின் தலைவராக இருக்க கூடிய வீரமணி தெலுங்கர், கன்னடர், மலையாளிகளிடம் சொல்வதற்கு துணிவு பெற்றிருக்கிறரா என்பதற்கு வீரமணியின் மனசாட்சிதான் பதில் சொல்ல வேண்டும். வேறு எந்த மலையாளியோ, கன்னடனோ, தெலுங்கனோ தன்னை திராவிடன் என்று பதிந்துக் கொள்ள வேண்டும் என்று அறைகூவல் விடுக்கின்ற அரசியல் வாதிகள் அந்த மாநிலங்களில் இருக்கிறார்களா என நாமும் சற்று சிந்தித்துப் பார்ப்போம். நம் காலக் கொடுமை..வீரமணி போன்றவர்களை நாம் தலைவர்களாக அடைந்திருக்கிறோம். நடந்து முடிந்த ஈழ இன அழிப்பில் துணைப் போனவர்களில் இந்தியர்களை விட வீரமணி அடையாளம் காட்டும் திராவிடர்கள் தானே அதிகம் இருந்தார்கள்..? மலையாளிகள் ஈழ அழிப்பில் துணை நின்ற செயல் அவ்வளவு எளிதாக மறக்க கூடியதா என்ன..? .நம் நதி நீர் உரிமைகளில் கேரளாவும், கர்நாடகாவும் செய்கிற கொடுமைகளை எந்த திராவிடப் பட்டியலில் வைத்து இந்த வீரமணி தீர்க்கப் போகிறார்..?

தந்தை பெரியார் தமிழனுக்கு என ஒரு நாடு கேட்டவர். தமிழின இறையாண்மையை நிலைநிறுத்த பாடுப்பட்டவர். தனது சொற்களை கூட சிந்தித்து பார்த்து முடிவு செய்ய சொன்னவர். திராவிடம் என்ற சொல் பார்ப்பன மேலாண்மையை தகர்க்கும் ஆயுதமாக தந்தை பெரியார் பயன்படுத்தினார். அவருக்கு பின்னால் வந்த திராவிட இயக்கங்கள் இன்று பார்ப்பன மேலாண்மையை முழுவதுமாக இன்று ஏற்றுக் கொண்டு விட்டன. திராவிட இயக்கத்தின் தலைமையை ஒரு பார்ப்பன பெண்மணியால் மிக எளிதாக கையாளமுடிகிறது .

எதற்காக தொன்ம தமிழின மக்கள் தங்களை திராவிடனாக அடையாளப்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதற்கு வீரமணியிடம் எவ்வித பதிலுமில்லை. தமிழன் எதன் பொருட்டு திராவிடனாக அடையாளப்படுத்தப்பட வேண்டும்

இதே சொல்லை தெலுங்கர்களிடம், மலையாளிகளிடம், கன்னடர்களிடம் சொல்லி விட்டு நம்மிடமும் சொல்லட்டும் இந்த வீணாய் போன வீரமணி.

வீரமணியிடம் இருந்து இன்றைய தினம் தந்தை பெரியாரை விடுதலை செய்துள்ள பெரியார் தி.க உறவுகளுக்கு பாராட்டுக்களும்..வாழ்த்துக்களும்.


தமிழன் என்றே பதியுவோம்- தமிழன் என்றே உணருவோம்.