5/19/08

இளையராஜா-தமிழ் மண்ணின் இசை......





வணக்கம் தோழர்களே....
சமீபநாட்களாகவே இசைஞானி இளையராஜா குறித்து பலவித விமர்சனங்கள் எழுந்து வருவதன் நீட்சியாக இக்கட்டுரை அமைகிறது...

இளையராஜா என்ற உன்னத இசையமைப்பாளனின் தனி மனித வாழ்வியலில் நுழைந்து எட்டிப் பார்த்து அதை விமர்சிக்கிற உரிமை எனக்கில்லை என்ற அடிப்படை கருதுகோளோடு துவங்கும் நான் அவரின் இசை சித்திரங்களில் நான் அறிந்த ,உணர்ந்தவைகளை நிறுவுவதன் மூலம் அந்த மாமேதை எப்படி மற்ற இசை வல்லுனர்களை விட தனித்து நிற்கிறார் என்பதற்காகவும் ,அவரின் தனித்துவமான இசைக் கூறுகள் எப்படிப்பட்ட உச்சங்களை தொடுகின்றன என்பதை நான் உணர்ந்தவைகளை உங்களிடத்தில் பதிவு செய்ய கடமைப்பட்டவன் என்பதற்காகவும் இந்த இக் கட்டுரையை எழுதுகிறேன்..

தமிழ்சினிமாவின் ஆரம்ப கால இசைக் கூறுகள் மேட்டிமைத் தனம் வாய்ந்த ,கர்நாடக இசை அறிவு உடைய மேலோருக்கும் உடையதாக இருந்தது என்பதும்,நாடகத்தின் நவீன வடிவமாய் சினிமா தோன்றியதால் இசை என்ற அம்சம் முழுக்க நாடகத் தன்மை நிறைந்ததாக விளங்கியது என்பதில் யாருக்கும் எவ்வித சந்தேகமுமில்லை...

சினிமா என்ற அம்சம் மெல்ல மெல்ல பாமர மனிதர்களை ஈர்க்க துவங்கியதன் விளைவுகள் திரையசையிலும் எதிரொலிக்க துவங்கியது..

தமிழ்த்திரையுலகில்சி.ஆர்.சுப்பாராமன்(தேவதாஸ்),
எஸ்.வி.வெங்கட்ராமன்(மீரா),எஸ்.ராஜேஸ்வரராவ்(மிஸ்ஸியம்மா),
கண்டசாலா(பாதாளபைரவி,மாயாபஜார்),ஜி.ராமநாதன் (ஹரிதாஸ்,உத்தம புத்திரன்,அம்பிகாபதி) போன்ற இசைமேதைகள் மின்னத் துவங்கினர்.

திருவிளையாடல் ,வசந்தமாளிகை போன்ற படங்களுக்கு இசையமைத்த கே.வி.மகாதேவன் அவர்களும் திரையிசையில் மறக்க இயலாத உச்சத்தை தொட்டவர்தான்.
1957-ல் மாலையிட்ட மங்கை படத்தில் அறிமுகமான மெல்லிசை மன்னர்கள் விஸ்வநாதன் –ராமமூர்த்தி என்ற இரட்டையர் தமிழ் திரையிசையின் போக்குகளை மாற்றத் துவங்கினர்.பாமர மக்களும் ,எளிய மக்களும் திரை இசை சுகத்தை அனுபவிக்க துவங்கினர்.
மெல்லிசை மன்னர்கள்,ஏ.எம்.ராஜா,போன்றோர் திரையிசையின் திரைக் கட்டுகளை மெதுவாய் நெகிழ்த்தி அதை சாதாரண மக்களின் உணர்வு தளத்திற்கு கடத்தினர்....மக்கள் திரையிசையை தன் சாதாரண வாழ்க்கையின் மறுக்க முடியாத அம்சமாய் வரையறுத்துக் கொண்டதும் இந்த காலக் கட்டதில்தான்...

தமிழ் திரையுலகில் பாபி,குர்பானி,சத்யம் சிவம் சுந்தரம் உள்ளிட்ட இந்தி திரையிசையின் தாக்கம் மிகுதியாக இருந்த காலக் கட்டத்தில் ,நவ நாகரீக தூதுவர்கள் என்று தன்னை அறிமுகப் படுத்திக் கொள்ள துடித்த இளைஞர்களின் உதட்டில் இந்திப் பாடல்களே உட்காரத் துவங்கியது.
அந்த நேரத்தில்தான் அன்னக் கிளி படம் மூலம் ஒரு குக்கிராமத்தில் இருந்து,தாழ்த்தப் பட்ட குடும்பத்தில் பிறந்து,கருத்த நிறத்தில்,சினிமா உலகிற்கென வகுக்கப் பட்ட எந்த ஒரு இலக்கணத்திற்கும் உட்படாத ,
சாஸ்திரீய சங்கீத நுணுக்கங்கள் ஏதும் அறியாத,எளிய மக்களின் அடையாளமாய் நுழைந்த இளையராஜாவின் பிரவேசம் நடந்தது.

இளையராஜாவின் இசை துவக்கம் முதலே மனித உணர்வின் தளத்தின் ஊடே நுழையும் வித்தையை தெரிந்துவைத்திருந்தது தான் இன்றளவும் எனக்குள்ள ஆச்சர்யம்.
முதல் பாடல் அன்னக் கிளியே உன்னை தேடுதே என்ற பாடலில் அவர் நம் தமிழ் மண்ணுக்கே உரிய நாட்டுப் புறத்தன்மையும்,வளைவும் நெளிவும் நிறைந்த புல்லாங்குழல் இசையோடு கூடிய ,ஒரு கிராமத்து வாழ்வியலை நினைவுக் கூறும் ,மெல்லிய மேற்கத்திய இசை வடிவங்களின் அடிப்படையோடு கலந்த புதுமையான இசையை வழங்கினார்...

கோரஸ் என்ற கூட்டுப் பாடல் உத்தியை மிகவும் அழகாக தன் பெரும்பாலான பாடல்களில் கையாளுகின்ற இளையராஜா அதற்கென பாடலோடு இழைகின்ற சின்னச் சின்ன உத்திகளால் அந்தப் பாடலை ஒரு அழகான கவிதையாய் மலர்த்துவதில் தனித் திறமை கொண்டவராக இருக்கிறார்..

இளையராஜாவின் ஆரம்பகால படங்களான , சிட்டுக்குருவி,கவிக்குயில் பத்ரகாளி போன்ற பாடங்களில் தனக்கேரிய தனி முத்திரை எதுவென தேர்ந்தெடுக்க இளையராஜாவிற்கு எந்த ஒரு குழப்பமும் இருந்ததில்லை.

கவிக்குயில் என்ற திரைப் படத்தில் சின்னக் கண்ணன் அழைக்கிறான் என்ற பாடல் இன்றும் கவனித் தக்க இசையை கொண்டிருக்கிறது...அந்தப் பாடல் முழுக்க நீரோடை போன்ற ஒட்டத்தை கொண்டது...குறிப்பாக அந்த பாடலை பெண் குரலில் கேட்கும் போது ...முதலில் அதிர்ச்சி அம்சத்துடன் துவங்கும் சோக உணர்வை ஏற்படுத்தும் வயலின் இசையையும், இனிய புல்லாங்குழல் குரலோடு,பனி இரவில் பெளர்ணமி நிலவில் தனியாய் ஒடும் ஒற்றை நீரோடை காண்பதில் உள்ள சுகத்தை ஏற்படுத்தும்.

அதே போல சிட்டுக்குருவி என்ற படத்தில் வரும் என் கண்மணி என்று துவங்கும் பாடல் மிகவும் வித்தியாசமான முயற்சி..இரட்டை குரலோடு ஒலித்தாலும், அந்த குரல்களின் இடைவெளி தூரத்தை இளையராஜா வகுத்திருக்கும் தன்மை பிரமிக்க வைக்கக் கூடியது. அந்த பாடலின் ஊடே பேருந்து பயணச் சுவடுகளை விதைத்து அந்த பாடலை அழகானதாக ,அபூர்வமான ஒன்றாக வடிவமைத்து இருப்பார் ராஜா.

சக்களத்தி படத்தில் வாடை வாட்டுது என்ற பாடல் இரவின் தனிமையும்,தன்னிரக்கத்தையும் நம்மிடையே விதைக்க வல்லது.
இதே போன்ற பாடல்தான் மலைக்கிராமத்தின் இரவினைப் பற்றிப் பேசும் ரோசாப்பூ ரவிக்கைக்காரி படத்தில் வரும் உச்சி வகுந்தெடுத்து என்ற பாடல்.

கல்லுக்குள் ஈரம் படத்தில் வரும் சிறு பொன்மணி துவங்கும் பாடல் சரணமும் ,பல்லவியும் நீண்ட தொடர்களாக அமையும் வண்ணம் அமைத்திருப்பது புதுமை.இதே உத்தியை அவர் ஆறிலிருந்து அறுபது வரை படத்தில் வரும் கண்மணியே ...காதல் என்பது என்ற பாடலிலும் ,கேளடி கண்மணி படத்தில் மண்ணில் இந்த ..என்ற பாடலிலும் ,புதிய வார்ப்புகள் படத்தில் தம் தன தம் தன தாளம் வரும் என்ற பாடலிலும் பயன்படுத்தி இருப்பார்.

நிறம் மாறாத பூக்கள் படத்தில் ஆயிரம் மலர்களே மலருங்கள் என்ற ஒரு பாடலுக்காகவே தனிக் கட்டுரை எழுதலாம்...இசைக் கலவையின் உச்சம் அது.ஜென்ஸி என்ற மயக்கும் குரல் உடைய பாடகி தன்னால் முடிந்த அளவிற்கு அந்த பாடலை கிளாசிக் என்ற வகையில் சேர்த்திருப்பார்...
இதே போன்ற பாடல்தான் கரும்பு வில் திரைப்படத்தில் வரும் மீன் கொடி தேரில் மன்மதராஜன்..என்ற பாடல் மற்றும் பூபாளம் இசைக்கும் பூமகள் ஊர்வலம்.....என்ற பாடல்களும்...

அதே போல் உதிரிப் பூக்கள் படத்தில் கேட்கும் போதெல்லாம் நம்மை உள்ளுக்குள் கலங்க வைக்கும் அழகிய கண்ணே என்ற பாடலின் தனித்துவத்தை உணர்ந்து காட்சியமைப்பில் கவிதையாக்கி இருப்பார் மகேந்திரன்...தாயின் வாசனையையும், தனிமையின் துயரத்தையும் அந்த பாடல் இன்றளவும் கசிய விட்டுக் கொண்டிருக்கிறது.இதே போன்ற மற்றொரு பாடல் மூன்றாம் பிறை படத்தில் வரும் கண்ணே கலைமானே...என்ற பாடல்.

அலை அலையாய் துவங்கும் 16 வயதினிலே திரைப்பட பாடல் செந்தூரப் பூவே என்ற பாடலில் நாட்டுப் புற இசை வடிவங்களை கொண்டு பருவத்தின் கனவுகளை மெல்லிய சோகத்துடன் வடிவமைத்து இருப்பார்....

மெல்லிய ராகமாய் ,ஒரு பூ அவிழ்வது போல உச்சத்தை எட்டும் மற்றொரு பாடல் ஜானி திரைப்படத்தில் காற்றில் எந்தன் கீதம் என்ற பாடல்...அதில் முதல் முதல் பல்லவிக்கு முன்னர் சேர்க்கப் பட்டிருக்கும் இசைக் கோர்வை மிகவும் பிரசித்தமானது. அதே படத்தில் வரும் மற்றொருப் பாடலான என் வானிலே என்ற பாடலும் மிகவும் நல்ல உணர்வுகளை நம்மில் எழுப்பக் கூடியது.

ஜாஸ் வகை பாடல்கள் என்ற வரிசையில் ஒலிக்கும் சிவப்பு ரோஜாக்கள் பாடலான இந்த மின்மினிக்கு ...என்ற பாடலில் துவக்கத்தில் மற்றும் நடுவில் வரும் பெண்ணின் கோரஸ் குரல் கேட்க மிகவும் சுவாரசிய தன்மையை உடையது.விக்ரம் படத் தலைப்பு பாடலான விக்ரம் என்ற பாடலில் வரும் பெண்களின் கோரஸ் குரல் கோர்வைகளும் இத்தகையதே...

காதலாகட்டும், காமம் ஆகட்டும் ,கோபம் ஆகட்டும், விரக்தி ஆகட்டும் இளையராஜா மனித உணர்வுகளை இசை மொழியாக வகுக்கும் விதமே அலாதி.அவரின் மிகுதியான உற்சாகத்தை வழங்கக் கூடிய பாடல்களிலும் மாலை இருட்டினை பேசும் தனிமையான சோக உணர்வினை வழங்கக்கூடிய இசையினை மெலிதாக கசிய விட்டிருப்பார்.

(தொடர்ந்து எழுதுவேன்...)

2 comments:

  1. இளையராஜாவுக்கு பத்ம விருதுகள் கிடைக்காததற்க்கு காரணம் வைரமுத்துவும் கருணானிதியும் தான். எம் எஸ்விஸ்வனாதன் இளையராஜா செய்யாததையா ரகுமான் செய்தார். ஆனால் ரகுமானுக்கு கருணானிதியின் சிபாரிசில் பத்மஸ்ரீ விருது.

    ReplyDelete
  2. நல்ல பதிவு நண்பரே

    உங்கள் அடுத்த பதிவையும் ஆவலோடு எதிர்பார்க்கின்றேன்

    ReplyDelete