5/19/08
புத்திசாலி ஞாநிக்கு ஒரு கடிதம்.....
---------------------------------------------------------
திருவாளர்.ஞாநி அவர்களுக்கு.....
வணக்கம். குமுதம் 09-04-08 இதழில் பேராசிரியர் சுப.வீ .அவர்களுக்கு ஒ..பக்கங்கள் பகுதியில் தாங்கள் எழுதியுள்ள கடிதத்திற்கு பதில் எழுத தமிழனாய் தன்னை உணருகிற எவருக்கும் பதில் சொல்ல உரிமை உண்டு என்ற நியாயமான பார்வையில் இந்தக் கடிதத்தை நான் எழுதுகிறேன்...
நமக்குள் ஏற்கனவே அறிமுகம் உண்டு.தந்தை பெரியாரையும்,அறிஞர் அண்ணாவையும் மிகத் தவறான முறையில் ஒப்பிட்டு ஆனந்த விகடன் இதழில் தாங்கள் எழுதிய ஒ..பக்க கட்டுரைக்கு எதிர்வினையாக நான் எழுதியவிமர்சனங்களுக்கு– ஞாநி தி ரைட்டர் என்ற ஆர்குட் குழுமத்தில் தாங்கள் நேரிடையாக வந்து என்னோடு விவாதித்தீர்கள்.மீண்டும் அதே போன்ற ஒரு காரணத்திற்காக தங்களின் பழித் தூற்றல் கருத்துக்களுக்காக நான் என்னுடைய விமர்சனங்களை முன் வைப்பது என்னுடைய இனக் கடமையாக நான் நினைக்கிறேன்.
பேரா.சுப.வீ அவர்களுக்கு தனிப்பட்ட முறைமையில் எழுதப் பட்ட கடிதமாக நான் அதை கருத வில்லை.பேராசிரியர் இயங்கி வருகின்ற தமிழ் உணர்வாளர்கள் தளத்தில் இயங்கி வருகின்ற அனைவரும் மீதும் வீசப்பட்ட, அவதூறு என்ற விஷம் தோய்ந்த கத்தியாகவே நான் அதை பார்க்கிறேன்.
என் மொழிக்காகவும், என் இனத்திற்காகவும் தாங்கள் அய்யா சுப.வீ அவர்களோடு இணைந்து பணியாற்றியதை நான் மிக்க நன்றியுடன் நினைவு கூறுகிறேன்....ஆனால் இந்த ஒரு தகுதி மட்டுமே எங்கள் உணர்வு மிக்க செயல்பாடுகளின் மீது அவதூறு பூசி விட முயற்சிக்கும் உரிமையை தங்களுக்கு தந்து விடாது என்பதனையும் தங்களிடம் நான் பதிவு செய்கிறேன்.
முதலில் தங்களுக்கு நான் தெளிவாக ஒன்றை கூறி விடுகிறேன்...என் தாய்மொழிக்காகவும்.,என் இனத்திற்காகவும் போராடவும்.., ஓங்கிக் குரல் கொடுக்கவும் எனக்கு உரிமை உண்டு.என் இனத்தின் மாண்பை குலைக்கும் வகையில் தவறான முறையில் ,உள்நோக்கத்தோடு திரைப்படம் ,பத்திரிக்கை ஆகிய ஊடகங்களில் கருத்தால் தாக்கும் சிங்கள பட இயக்குனர் தூசாரா பெய்ரிஸ் மற்றும் தங்களைப் போன்றவர்களை எதிர்த்து போராட...குரல் கொடுக்க...என் கருத்தை பதிவு செய்ய எனக்கு பரிபூரண உரிமையூண்டு.
ஒரு இனத்தின் மீது தாக்குதலை நாம் இரண்டு வகைகளாக பிரிக்கலாம்.
1.யுத்தக் களத்தில் நின்றும், நிலம்,வான்,கடல் பரப்புகளில் நின்றும் ஒரு இனத்தின் மீது ...அந்த இனத்தை சேர்ந்த மக்கள் , அமைப்பினர் மீது தாக்குதல் நடத்துவது...
2.ஒரு இனத்தின் வரலாற்றை,அடையாளங்களை அழிப்பது அல்லது தவறான கற்பிதங்களால் மாற்றி நிறுவ முயற்சிப்பது. மற்றும் பத்திரிக்கை,நூல்கள்,,இணையம்,திரைப்படங்கள்,கல்வியியல் சார்ந்த பாடப் புத்தகங்கள் போன்றவற்றில் தவறான கற்பிதங்களை திணித்து.., அதன் மூலம் ஒரு குறிப்பிட்ட இனம் சார்ந்த மக்களை தங்கள் இனம் சார்ந்த பற்றை பலவீனப் படுத்துவது.
மேற்கண்ட இரண்டு தாக்குதல்களில் இரண்டாவதாக சொல்லியுள்ள தாக்குதலையே நான் மிகவும் ஆபத்து நிறைந்ததாக கருதுகிறேன்.
வரலாற்று கருத்தியல் தளத்தில் ஒரு இனம் சார்ந்த பற்றை ,அடையாளங்களை,நடவடிக்கைகளை பலவீனப் படுத்துவதன் மூலம் அந்த இனம் சார்ந்த அனைத்தையும் மாசுப் படுத்தி , இறுதியில் அந்த இனத்தை அழிப்பதற்கான அத்தனை வழிகளையும் சாத்தியப் படுத்துவது...மேலும் இனத்தை அழிப்பதற்கான தங்களது முயற்சியை சமூகத் தளத்தில் நியாயப் படுத்துவது.ஆகியவற்றையும் உள்ளடக்கிய அந்த இரண்டாம் வகை தாக்குதலைதான் திருவாளர் .ஞாநி அவர்களாகிய தாங்களும், அந்த சிங்கள இயக்குனரும் செய்து வருகிறீர்கள்.
அந்த சிங்கள இயக்குனரின் நடவடிக்கைக்காகவாது அவரது இனம் சார்ந்த நியாயம் இருக்கிறது...ஆனால் தொடர்ந்து கருத்தியல் ரீதியாக தாக்கி வரும் தங்களுக்கு எவ்விதமான நியாய,தர்மங்களும் இல்லை.
நீங்கள் மிகவும் சாமர்த்தியசாலி ஞாநி அவர்களே...அதனால் தான் ஈழப் போராட்டத்தையும்,சாதியம் சார்ந்த அமைப்பையும் தங்களால் புத்திசாலித்தனத்தோடு முடிச்சிப் போட முடிகிறது.ஆனால் ஈ.வே.ரா என்று கருப்புச் சட்டைக்காரரால் இரண்டு தலைமுறைகளாகத்தான் நாங்கள் கல்வி கற்க முடிகிறது.எனவே தான் தங்களது புத்திசாலித் தனங்களை புரிந்துக் கொள்ளவும்,மென்று விழுங்கி சீரணிக்கவும் சற்று கடினமாக உள்ளது.
இந்த்துவா,பஜ்ரங் தள்..,தாங்கள் கட்டுரையில் சொன்ன அந்த வேதாந்தி ஆகியோர் தாங்கள் குறிப்பிட்டுள்ள படி முட்டாள்களே. உங்களைப் போன்று .இதயத்தில் உள்ளவற்றை உதட்டிலும் ,நடவடிக்கைகளிலும் நிறுத்தி வைக்க அவர்களால் முடியவில்லை.தங்களின் புத்திச்சாலித் தனம் இல்லாத அவர்களை தாங்கள் முட்டாள் என்று வருணித்தது தங்களைப் பொறுத்தவரையில் நியாயமே.ஆனால் எங்களால் முட்டாள்களை எளிதில் சமாளிக்க முடிகிறது.ஆனால் தங்களைப் போன்ற புத்திசாலிகளை தான்
அடையாளம் காணுவதில் தமிழ் மண்ணிற்கு தாமதம் ஏற்பட்டு விடுகிறது.
சாதீயம் சார்ந்த நடவடிக்கைகளில் அய்யா சுப.வீ அவர்களின் நடவடிக்கையை பற்றி வினா எழுப்பி உள்ளீர்கள்.....தந்தை பெரியாரின் கருத்துக்க்களை மேடை தோறும் பேசி,எழுதி ,என்னைப் போன்ற இளைஞர்களுக்கு வாழும் உதாரணமாக இருந்து வரும் பேராசிரியரின் சாதி ஒழிப்பு நிலைப்பாடு அனைவரும் அறிந்த ஒன்று.பார்ப்பனீய நிலைகளை கருத்தியல் ரீதியாக தகர்ப்பதன் மூலம் சாதி,சமயமற்ற சமூகத்தை படைத்து விடலாம் என்ற கொள்கை அடிப்படையில் செயல்பட்டு வரும் பேராசிரியரின் நடவடிக்கைகள் தங்களைப் பொறுத்தவரையில் கவலைப் படத் தக்க அம்சமே..தந்தை பெரியார், அண்ணல் அம்பேத்கார் ஆகியோர் தோன்றிய பிறகுதானே பார்ப்பனீய ஆலமரத்தின் விழுதுகளான சாதி நிலைகளால் தாழ்ந்துக் கிடந்த மனிதனுக்கு சுய உணர்வு வந்தது....இப்போதுதான் மீள துவங்கி உள்ளோம்...இன்னும் சில காலங்களில் சாதி,சமய நிலைகள்,இரட்டைக் குடுவை முறைகள் அனைத்தும் தமிழ் மண்ணை விட்டு அகன்று விடும் என்ற உன்னத நம்பிக்கையோடு பேராசிரியரும் ,தமிழ் உணர்வாளர்களும் செயல்பட்டு வருகின்றனர்.
தங்களின் கவலைகளை என்னால் புரிந்துக் கொள்ள முடிகிறது..எங்கள் ஈழ உறவுகளை கொன்று குவிக்கும்.சிங்கள பேரினவாத அரசின் தலைவர் ராஜபக்சே வை தன் வீட்டு மணவிழாவிற்கு அழைத்து கொண்டாடிய,எங்கள் ஓட்டு வாங்கி வென்ற மணி சங்கர் அய்யர் கூட இப்போது கவலை அடைவார்தான் .என்ன செய்வது..? தமிழன் விழிக்க துவங்கி விட்டானே,,,,,,,
தமிழக முதல்வர் கலைஞர் அவர்களை தொடர்ந்து தாக்கி எழுதி வருகின்ற தாங்கள் ‘முட்டாள் வேதாந்தி’ குறித்து கவலைக் கொள்வதும் நியாயம்தான்...உங்கள் புத்திசாலித்தனங்களை உங்கள் ஆட்களுக்கு சொல்லிக் கொடுங்கள் ஞாநி அவர்களே....
தங்கள் சொந்த நாடு இழந்து....உறவுகளை பலிக் கொடுத்து அகதிகளாய்...நெஞ்சம் முழுக்க வலிகளோடும் ,வடுக்களோடும் திரியும் எங்களது ஈழ உறவுகளுக்கு எங்களது ஆதரவை ,எங்களது பரிவை,எங்களது கண்ணீரை பகிர்ந்துக் இந்த நாட்டில் எங்களுக்கு உரிமையில்லை.எங்களது ஈழ உறவுகளின் போராட்டத்தை, அவர்களது வாழ்விற்கான விடுதலைப் போரை கொச்சைப் படுத்தி,கருத்தியல் ரீதியாக ஈழப் போராட்டத்தை உலக அளவில் மாசுப் படுத்த துடிக்கின்ற சிங்கள பேரினவாத அரசின் தூதுவனாக படம் எடுத்து,அதையும் தமிழ் மண்ணிலே பிரிண்ட் போட வந்திருக்கும் சிங்கள இயக்குனரிடம் நியாயம் கேட்க சென்ற இடத்தில் என் சகோதரர்கள் உணர்ச்சி வயப் பட்டு உடல் ரீதியாக செயல்பட்டது தங்களக்கு தவறாக தெரிகிறது...
ஆனால் கிட்டத் தட்ட 35 வருடங்களாக கொன்று குவிக்கப் பட்டு வரும் எங்கள் ஈழ உறவுகளை பற்றி அவதூறாக படம் எடுத்து வெளியிட முயலும் சிங்கள இயக்குனருக்கு பரிந்து வர ஞாநிக்கு எவ்வாறு உரிமையுள்ளதோ அதே உரிமை அந்த இழிவை தட்டிக் கேட்கும் உரிமை எங்களுக்கும் உண்டு.
எங்களால் எங்கள் தொப்புள் கொடி உறவுகளை கொன்று குவிக்கும் சிங்கள பேரினவாத அரசிற்கு ஆதரவாக படம் எடுத்து தமிழ் மண்ணிலே வெளியிட துணியும் சிங்கள இயக்குனருக்கு ஆதரவாக இந்த மண்ணிலே ஞாநிகளும்,சாமிகளும் இருக்கின்றார்கள்.ஆனால் கடல் கடந்து கொன்று குவிக்கப் பட்டு வரும் எம் ஈழ உறவுகளை நினைத்து கண்ணீர் விட இந்த நாட்டில் தடை..
எங்கள் அண்ணன் சீமானை வைத்து ‘படம் எடுக்கத் துணியுங்கள் என்று சொல்கிறீர்கள்...ஏற்கனவே ஜான் என்பவர் எடுத்த ஆணிவேர் என்ற படத்தின் வரலாறு தங்களுக்கு தெரியும்.புகழேந்தி எடுத்து 'காற்றுகென்ன வேலி'க்கு இன்னும் தடையாய் ஆயிரமாயிரம் வேலிகள்...
ஜனநாயகம் என்ற அம்சம் ஒரு இனத்திற்கு எதிரான கருத்து தாக்குதலை ஆதரிக்கிறதா என்ன..? உங்கள் ஜனநாயகக் கருத்துக்களை வாட்டாள் நாகராஜிடம் போய் சொல்லுங்கள்....
எங்கள் சொந்த உறவுகளை பற்றி அப்பட்டமாக,அட்டூழியமாக படம் எடுத்தவர் மீது கூட உணர்ச்சி வேகத்தில் பலம் குறைந்த வகையில் தாக்குதல் நடத்தி விட்டு,புத்தாடை அணிவித்து சகல பாதுகாப்புடன் இந்த மண்ணை விட்டு பாதுகாப்பாக வெளியேற அனுமதித்துள்ள நம் தமிழர்களின் உணர்வு ஞாநிக்கு எப்படி தெரியாமல் போகுமா...?
இயக்குனர் சீமான் உள்ளிட்ட என் அண்ணன்களுக்கு படமெடுப்பதை பற்றியும், அதில் கொள்கைகளை பேசுவது பற்றியும் ஞாநிக்கு திடீரென்று ஏற்பட்டுள்ள அக்கறைக்கு நன்றி.
பக்கத்து கர்நாடகத்தின் கதை இந்நேரம் ஞாநிக்கு தெரிந்திருக்கும்...கருத்தை கருத்தால் சந்திப்போம் என்ற கருத்து தமிழக மண்ணிலே இருப்பதால் இங்கே ஞாநிகளும்,சாமிகளும், சர்வ சுதந்திரத்துடன் நடமாடி விஷம் கக்க முடிகிறது..
தற்போதைக்கு அண்ணன் அறிவுமதி கவிதையோடு விடை பெறுகிறேன்...
“கசக்கிப் பிழிந்து ...ருசித்து சுவைத்தப் பின்.. தூக்கி எறியப் படுகின்ற
மாங்கொட்டைகள் மரங்களாய் விசுவரூபம் எடுக்கும்
என்பதை இவர்கள் மறந்து போயிருக்கிறார்கள்......
கோழிக் குஞ்சிகளை காப்பாற்றுவதற்காகக்
கழுகுக் கூடுகளை கலைக்கத் துடிப்பது குற்றமா ..என்ன..?
சூரிய முகங்களை சுமந்த என் தோழர்களே...
புறப்படுங்கள் ..தொடரட்டும் ...நம் மக்கள் பணி.....
-பாவலர் அறிவுமதி...
மீண்டும் வருவேன்...
(இக்கடிதம் கீற்று.காம் இணையத்தளத்தில் வெளியிடப் பட்டுள்ளது)
Subscribe to:
Post Comments (Atom)
சரியான நெத்தியடி. ஞானிகள் சாமிகள் திருந்த வேண்டும் அல்லது திருத்தபடுவார்கள் என்பதை சொல்லிவைக்கிறோம்.
ReplyDeleteஅன்புடன்
மகாராஜா
புதிதாக ஒன்றும் இல்லை.. ஒருவர் சங்கடமான கேள்வி கேட்டால் உடனே சாதியைக்கொண்டு அவர் வாயை அடைக்கும் அதே பழய டெக்னிக். உங்கள் பேரா.சுபவீ கூட முற்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவர்தான் என்பதை மறந்துவிட வேண்டாம்..
ReplyDeleteநண்பரே, தொடரட்டும் உங்கள் இந்த பணி. நம் தமிழனின் மானம் காக்க இப்படியாக ஒன்றினைவோம். கவிஞர் அறிவுமதியின் கணீர் கவிதை நம் இரத்தத்தை சூடாக்கும் வெப்ப உரை. நம்மிடையே உறங்கிகொண்டிருக்கும் நம் சகோதர தமிழன் விழித்தெழும் வரை ஊதுவோம் சங்கை, நம் உயிருள்ளவரை.
ReplyDelete