5/20/08
நினைவின் சருகில்...
காலம் கண்ணிமைக்கும் நேரத்தில் சுடர் விட்டு மறைகிற மின்னலாய் நம்மை மிக எளிதாய் கடக்கிறது.....
காலம் நம்மை கடப்பதும்...காலத்தை நாம் கடப்பதுமாய்...நடக்கின்ற விளையாட்டு முடிவிலியாய் தொடர்கிறது.....
ஏதோ ஒரு நள்ளிரவில் ....தொலைதூர பயணத்தின் உணவக நிறுத்தத்தில் நிறுத்தப் படும் பேருந்தின் ஜன்னலோர இருக்கையில் தலை சாய்த்திருந்த நான்....கழுத்தின் மடிப்பில் வியர்வைப் படிந்ததால் மெலிதாய் கண்விழிக்க...பக்கத்தில் நிறுத்தப் பட்டு இருந்த பேருந்தின் ஜன்னலோர இருக்கையில் ..என்னைப் போலவே தலை சாய்த்திருந்த ...அவளைக் கண்டேன்...
அவளா...? இருக்காது. அவளாய் இருக்காது..இருக்கவும் கூடாது...இனி சந்திக்கவே போவதில்லை என்ற நம்பிக்கை இருள் படர்ந்த மனதில் கடும் துயரமென கவிழ்திருந்தாலும்.......அதுவே எனக்கு ஆறுதலாகவும் இருந்தது விசித்திரம்....
ஆம்...அவள்தான் என்று சாத்தானாய் ஓங்கார மிட்டது மனம்....இதயத் துடிப்பு அதிகரித்தது.....காலமும் ,பயணமும் அவளை கசக்கி இருந்தது......
மடியில் இருந்த குழந்தையின் சிணுங்கலை ஆறுதல் படுத்தி விட்டு மீண்டும் தலை சாய்த்த அவள் மீண்டும் கண்களை மூடுகிறாள்...பேரலை அடித்த பாறையாய் நான் அமைதியாய் அமர்ந்திருக்கிறேன்....
வாழ்க்கை எவ்வளவு விசித்திரமானது.....? எந்த பொன்னிறக் கைகளுக்குள் முகம் புதைத்து.....முச்சிறைத்து கிடந்தேனோ......அந்த கைகள் தான் ...அதே கைகள்தான் சலனமற்று என்னைக் கடக்கின்றன.....
பேருந்து புறப்படுகிறது....அவள் அங்கேயே நிற்கிறாள்..
இதுதான் முடிவு என்று தெரிந்திருந்தால்...வலிக்காமல் வாழ்ந்திருப்போமே....
பேருந்தின் ஜன்னலோர காற்று முகம் தொடுகிறது....இரவும்..நினைவும் என்னை அலைகழிக்கின்றன...
வாழ்வின் விசித்திர மாயக் கோடுகளின் ஊடே சிக்குண்டு...விழுங்கியும் செரிக்காத நினைவுகளின் உறுத்தலால் விடிந்தும்..விடியாமல் கிடக்கின்ற இரவில்....ஏதோ ஒரு புள்ளியில் இருந்து துவக்குகிறேன்..
ஆம்....அப்படித்தான் அவளை முதன் முதலில் பார்த்தேன்.......இயல்பான முகத்தில் எல்லாமும் எனக்கு பிடித்திருந்தது....முகத்தை பார்த்துதான் முதலில் நேசம் பிறக்கிறது என்பதை ஒத்துக் கொள்ளத்தான் வேண்டி இருக்கிறது.......
கொஞ்சம் நகர்றீங்களா...? ......
கேட்டதற்கு பதிலையோ அல்லது என் எதிர்வினையையோ எதிர்பார்க்காது.....என் எதிரே இருந்து நகர்ந்து ....சுவர் ஓரமாய் ...படியேறி ..கடந்தது எனக்கு பிடித்திருந்தது......
அனைத்தையும்....வியப்பாகவும்...குதுகாலமாகவும்...ரகசிய கண்களோடு பார்க்கும் பருவம் ..பள்ளியில் படிக்கிற ப்ளஸ் ஒன்...ப்ளஸ் 2 படிக்கிற காலம்....
நம் அபத்தமான...வக்கிரமான சினிமா இயக்குனர்கள் அந்த அற்புதமான பருவத்தை....காமக் கடும் புனலாய் விவரிக்கிறேன் என்ற போர்வையில் திரையில் பாழ்படுத்தி ..வீழ்த்தியதை நான் மிகவும் துயரத்தோடு பார்த்திருக்கிறேன்....
மனித உணர்வுகளின் மீது கட்டப்பட்ட புனித பிம்பம் சிதையாமல் ..மிகவும் நேர்மையோடும்...ஒரு வித அச்சத்துடன் அணுகும் அந்த வயதிற்குரிய அனைத்தும் உடையவனாய் அப்போது இருந்தேன்....கவிதை..இலக்கிய முயற்சிகள்...எல்லாம் அப்போது ஒரு அழகிய பெண்ணை வசீகரிப்பதற்காக கண்டுபிடிக்கப் பட்டவை என்று மெய்யாகவே நினைத்தேன்...பள்ளியின் காம்பவுண்ட் சுவருக்கு அப்பால்...கோரமும்....அவலமும் நிறைந்த சமூகம் ஒன்று இருக்கிறது என்பது எனக்கு தெரியாது....சாதி,அரசியல் என்று எந்த விஷமும் கலக்காத பாலாய் பொங்கி திரிந்துக் கொண்டிருந்தேன்....மாற்று பாலினத்தின் மேல் இயல்பாக வரும் ஈர்ப்பு தரும் ஆர்வமும்....தூண்டும் சாகசமும் அற்புதமானவை.....இசையின் மீது அளவிடற்கரிய மோகம் பிறந்ததும் அப்போதுதான்......
இப்படி என் வாழ்வில் நான் நேசிக்கிற ,,,இன்னமும் என்னால் விட முடியாமல் இருக்கின்ற அனைத்தும் முதன் முதலாய் நிகழ்ந்தது ......அந்த பருவத்தில் தான்.....
என் பள்ளியின் வளாகம் மிகவும் வீஸ்திரணமானது...காலையில் நடக்கும் கடவுள் வாழ்த்துக்கு முன்னால் செய்திகள் வாசிக்கப் படும்....பெரும்பாலும் அவள் தான் வாசிப்பாள்.....செய்திகள் சுவையாக இருக்கும் என்று நான் நினைத்தேன்...
இப்போது நினைத்தாலும் மெலிதாய் சிரித்துக் கொள்கிறேன்.....பேச்சுப் போட்டி என்பது அப்போதெல்லாம் அடுக்கு மொழியில்,யார் கை நீட்டி, நடிகர் திலகம் பாணியில் ஏற்ற இறக்கங்களோடு விடாமல் வசனத்தை யார் ஒப்பிக்கிறார்களோ ..அவருக்கே முதல் பரிசு.....இதில் எனக்கும் ..அவளுக்கும் கடுமையாக போட்டி வரும்...அவளின் இயல்பான மென்மை அவளை வீழ்த்தும்....சிறு தோல்வி கூட அவளை முகம் சிவக்க அழ வைத்து...சிதறடிக்கும்..... இருந்தும் தொடர்ந்து மோதுவாள்...... ஆசிரியர்கள் அவளுக்கு ஆறுதல் சொல்வார்கள்..என் வெற்றி கூட என்னால் சகிக்க முடியா பெருந்துயராய் என் மீது கவிழ்ந்திருக்கும்........
தினமும் மாலை அவள் பள்ளி முடிந்தவுடன் பைபிள் வகுப்பிற்கு செல்வாள்....
நான் என் அம்மாவிடம் நேராக சென்று பைபிள் கற்றுக் கொள்ள போவதாக சொன்னேன்....உன்னை எல்லாம் அங்கு சேர்த்துக் கொள்ள மாட்டார்கள் என்று அம்மா சொன்னது ...சே ...நம்ம மதத்துல படிக்கிற மாதிரி ஒரு பைபிள் இல்லையே என வருத்தப் பட்டேன்.....
என் வகுப்புத் தோழன் சாலமனிடம் இருந்து பைபிள் இரவலாக பெற்றேன்....சிறு சிறு எழுத்துக்களில் எழுதப் பட்டிருந்த பைபிளின் தமிழும்...அதன் உச்சரிப்பு தன்மையும் என்னை வெகுவாக ஈர்த்தன.....இன்னமும் தமிழில் மிக அழகாக எழுதப் பட்டிருக்கும் உயரியப் படைப்பு பைபிள் தான் என்ற நம்பிக்கை எனக்குண்டு......
(தொடரும்....)
Labels:
சுயம்...
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment