5/21/08

எம்.வி.வெங்கட்ராம்..... பின்னிரவின் மழை…




மே 18...

காலை 10.30 மணி அளவில் கலை விமர்சகர் தேனுகா அவர்களிடம் இருந்து ஒரு அழைப்பு...இன்று எம்.வி.வி அவர்களின் பிறந்தநாள்....அவர் வீட்டிற்கு சென்று மரியாதை செய்து விட்டு வருவோமா என்று அவருக்கே உரித்தான மென்மையான குரலில் கேட்டார்...

தேனுகாவிற்கு என்று சிறப்பான குணங்கள் பல உண்டு…. இலக்கிய மரபுகளை….சிற்ப தொன்மத்தை ..நவீன ஒவிய கலையின் உச்சத்தை அரசியல் கலப்பின்றி தெளிவாக அறிந்த அவருக்கு …உள்ள முக்கிய குணம்..இலக்கியவாதிகளை உள்ளன்போடு போற்றுவது…
அவருடைய அழைப்பில் நானும் நெகிழ்ந்து தான் போனேன்…இருக்காதா பின்னே…..


எம்.வி.வி என்று அழைக்கப் பட்ட எம்.வி .வெங்கட்ராம் என்ற அந்த எழுத்தாளரின் வீச்சை நானும் உள்வாங்கி இருக்கிறேன்…அவருடைய காதுகள் என்ற நாவல் என் பல நாள் தூக்கத்தை திருடி இருக்கிறது…வேள்வி தீயும் ,அரும்பும் என்னை மிகவும் ஏற்கனவே பாதித்து இருக்கின்றன….அவருடைய வியாசர் படைத்த பெண்மணிகள் –மகாபாரதத்தின் பெண் கதாபாத்திரங்கள் குறித்த மீள்புனைவு..ஒரு பெண் போராடுகிறாள் என்ற மிகப் பெரிய நாவலும் வாசிக்க வேண்டிய ஒன்றுதான்…காதுகள் நாவலுக்காக அவருக்கு சாகித்ய அகாதெமி விருது கிடைத்தது…குழந்தைகளுக்காக பழனிப்பா பிரதர்ஸ் பதிப்பகம் வெளியிட்ட நாட்டுக்குழைத்த நல்லவர்கள் என்ற தொகுதியில் பல புத்தகங்களை மிக எளிமையாக ,தலைவர்களின் வாழ்க்கை வரலாற்றினை பதிவு செய்ததும் எம்.வி.விதான்.

எம்.வி.வி கும்பகோணத்தில் அறுபதுகளில் முகிழ்ந்த இலக்கிய விருட்சங்களில் மிக முக்கியமானவர்.தி.ஜானகிராமன்.,கரிச்சான் குஞ்சு, எம்.வி.வி,கு.பா.ரா என்று கும்பகோணம் பல பெருமைகளின் உச்சத்தை எட்டியுள்ளது…தி.ஜானகிராமனின் புகழ் பெற்ற நாவலான மோகமுள்ளில் எம்.வி.வி ஒரு கதாபாத்திரமாகவே வருவார்..

எம்.வி.வியும் சரி…அவர்களது நண்பர்களும் சரி..தேர்ந்த கலாரசிகர்கள்..பெண்களை மிகவும் அசலாக பதிவு செய்தவர்கள்….கொந்தளிக்கும் காமமும்..குமுறும் வாழ்க்கை முரண்களுமே அவர்களின் கதைகளுக்கான அடிநாதமாக விளங்கின…

குறிப்பாக எம்.வி.வியின் காதுகள் தமிழின் மிக முக்கிய நாவல்களில் ஒன்று…காதுக்குள் சதா கேட்டுக் கொண்டிருக்கும் உரையாடல்களையும்…அதை சார்ந்த கனவு வயப் பட்ட மனநிலையையும் விவரிக்கும் இந்த நாவல் தமிழில் எழுதப் பட்ட உளவியல் சார்ந்த நாவல்களில் சிறப்பானது…எம்.வி.வியின் சுயம்தான் இந்த நாவல் என்ற தகவலும் நாம் கவனிக்க வேண்டிய ஒன்று…

எம்.வி.வி தன் எளிய கதாபாத்திரங்கள் மூலம் விவரிக்க இயலா உணர்வுகளை தன் கதைகளில் மிக நேர்த்தியாக பதிவு செய்துள்ளார்…பெரும்பாலும் கும்பகோணத்தில் வாழும் செளராஷ்டிரா மக்களின் வாழ்க்கையை தன் கதைகளின் களமாக வைத்துக் கொண்டு எழுதிய எம்.வி.வி, வாழுங்காலத்தில் எவ்வித இலக்கிய அரசியலுக்கும் சிக்காதவர்…

எம்.வி.வியின் எழுத்துக்கள் பின்னிரவின் மழை போல அதிகம் அறியப் படாதவை..அற்புதம் மிக்கவை…

அவரின் கதைகள் மனிதனின் ரகசிய வேட்கைகளை போகிற போக்கில் அழகாகவும், நேர்த்தியாகவும் பதிவு செய்கின்றன…அதனால் தான் எம்.வி.வி நான் விரும்பி வாசிக்கும் எழுத்தாளராக என்றும் இருக்கிறார்…அவருடைய பல கதைகளை என் வாழ்வின் வெவ்வேறு கட்டங்களில் வாசித்து வந்திருக்கிறேன்…ஒவ்வொரு முறை வாசிக்கும் போதும் அவருடைய கதைகள் ஒவ்வொரு அர்த்தத்தை கற்பிப்பது எனக்கு புரிபடாத ஆச்சர்யமாக இருக்கிறது…அவருடைய எழுத்தில் உக்கிரம் இல்லை…மாறாக யாரோ ஒருவர் நம் அருகே அமர்ந்து மென்மையான குரலில் ,நம் தோளில் கைப் போட்டவாறே ,நமது ரகசிய ஆசைகளை சற்றே கூச்ச தொனியில் சொல்வது போன்ற வகையில் அமைந்திருக்கும்.

எனவே தான் தேனுகா அழைத்த போது நான் மிக உவகையுடன் சம்மதித்தேன்….கும்பகோணம் கோபால் ராவ் நூலகத்தில் இருந்து தேனுகா என்னை மற்றும் சில நண்பர்களை தோப்பு தெருவில் இருக்கும் எம்.வி.வி வீட்டிற்கு அழைத்து சென்றார்….

வெயில் மழை போல அமைதியாக , அதே சமயம் உக்கிரமாக பெய்து கொண்டிருந்தது…தோப்புத் தெருவில் கடைசிப் பகுதியில் உள்ள ஒரு வீட்டிற்கு முன் தன்னுடைய ஸ்கூட்டரை நிறுத்திய தேனுகா எங்களையும் அங்கேயே வண்டியை நிறுத்த சொன்னார்…

சாலையில் சிறுவர்கள் கோடை வெயிலை போர்த்திக் கொண்டு வியர்க்க ,வியர்க்க கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தனர்…அந்த வீட்டின் மும் நாங்கள் கூடியதை கண்டவுடன் அக்கம்பக்கத்து வீட்டுக்காரர்கள் ஏதோ பிரச்சனை போல ஆர்வமாக எட்டி பார்த்தனர்…

பழமையான வீடு…வீட்டின் முகப்பில் பெரிய நாமம் இடப் பட்டு இருந்தது…சற்று உயரம் குறைவான திண்ணை…பல இலக்கிய மேதைகளை தன் மடியில் இருத்திக் கொண்ட அந்த திண்ணை புழுதி படர்ந்து கிடந்தது..நான் ஆசையாய் அதில் உட்கார்ந்து கொண்டேன்…இங்குதான் எம்.வி.வியும் ,தி.ஜாவும் அமர்ந்து மோகமுள்ளின் யமுனாவை பற்றி பேசி இருப்பார்களோ…?
வீட்டின் கதவு சற்று லேசாக திறந்திருந்தது…வீட்டில் வறுமை தெரிந்தது.செளராஷ்டிரா இனத்து மக்களுக்கு உரித்தான பாணியில் கட்டப் பட்ட வீடு..வீட்டின் நடுவில் உள்ள முற்றத்தில் வெயில் தனிமையாய் இறங்கிக் கொண்டிருந்தது.தேனுகா உள்ளே இருந்து யாரையோ அழைத்தார்…கைலி கட்டிய வாறு ஒரு நடுத்தர வயதுக்காரர் அந்த வீட்டினுள் இருந்து வெளியே வந்தார்.வாங்க…வாங்க ..உற்சாகமாக அழைத்த அவரை தேனுகா எங்களுக்கு அறிமுகம் செய்து வைத்தார்…அவர் எம்.வி.வியின் மகன்.எங்களுடன் கூச்சத்துடன் கைக்குலுக்கினார்…பிறகு தேனுகா நாங்கள் எதற்காக வந்துள்ளோம் என்ற விபரத்தை அவருக்கு தெரிவித்தார்…


மறைந்த…அதிகம் புகழ் பெறாத …அமைதியான ஒரு எழுத்தாளரின் பிறந்த நாளை நினைவில் வைத்துக் கொண்டு மரியாதை செய்ய போன எங்களை அவர் மிகவும் ஆச்சர்யமாகவும் ,வியப்பாகவும் பார்த்தார்…தன் வீட்டிற்கு முன்னால் கூடிய இச்சிறு கூட்டம் தன் தந்தையின் எழுத்துகளின் மீதுள்ள காதலினால் வந்துள்ளது என்பது அவருக்கு பெருமையாக இருந்தது,,,,

நான் அவரின் நடுங்கிய கைகளை பிடித்துக் கொண்டு….நாங்கள் உங்கள் தந்தையின் ரசிகர்கள்…மாபெரும் எழுத்தாளர் அவர் என்று நான் சொன்னவுடன் கூச்சத்துடன் நன்றி என்றார் அவர்…வந்திருந்த நண்பர்களும் தத்தம் கருத்துகளை பதிவு செய்தனர்…அனைவரின் நினைவுகளிலும் எம்.வி.வியின் எழுத்துக்கள் பசுமையாக ஒளிர்ந்தன….

நாம் எல்லோரும் ஒரு புகைப்படம் எடுத்துக்கலாம் என்று தேனுகா சொன்னவுடன் இருங்க ..நான் உள்ளே போய் வேட்டி கட்டிகிட்டு வந்திர்றேன் என்று ஓடினார் எங்கள் மாபெரும் எழுத்தாளரின் மகன்….

வரும் போது அவர் எம்.வி.வி எழுதி விருது பெற்ற காதுகள் நாவலையும்…வேள்வி தீ நாவலையும் எடுத்து வந்தார்…நான் அதை உடனே ஆசையாய் வாங்கிப் பார்த்தேன்…நாவலின் உள்ளே முதல் பக்கத்தில் எம்.வி.வியின் கையெப்பம் பச்சை வண்ண மையில் மங்கி இருந்தது…எம்.வி.வி தன் எழுத்துக்களை தானே வாசித்த புத்தகம் அது என்பதால் எனக்கு அது சற்று பெருமிதமாகவும் இருந்தது….

நாங்கள் மிகவும் மகிழ்வுடனும் ,நெகிழ்ச்சியுடனும் கூடியிருந்து புகைப்படம் எடுத்துக் கொண்டதை தெருவே வேடிக்கை பார்த்தது.பிறகு வீட்டிற்கு அருகே இருந்த இடிந்த பழமையான ஒரு கோவிலுக்கும் அழைத்துச் சென்றார் தேனுகா…மாலை வேளைகளில் எம்.வி.வி அந்த கோவிலின் படிக்கட்டிகளில் அமர்ந்திருப்பாராம்…அங்கேயும் நின்று ஒரு புகைப்படம் எடுத்துக் கொண்டு திரும்பினோம்……. நாம் இன்னொரு முக்கிய இடத்திற்கு செல்ல வேண்டி இருக்கிறது என்று தேனுகா சொன்னார்..நாங்கள் மீண்டும் எங்களின் அன்பினையும், மரியாதையினையும் அந்த மாபெரும் எழுத்தாளனின் மகனுக்கு தெரிவித்து விட்டு….நாங்கள் தேனுகா வழியில் சென்றோம்.

கும்பகோணத்தின் குறுகலான பல தெருக்களில் எங்களின் இரு சக்கர பயணம் நீண்டது…
இறுதியாக நாங்கள் வந்து சேர்ந்தது கும்பகோணத்தின் ராமசாமி கோவிலுக்கு…நேரம் நடுப் பகலை கடந்து விட்டு இருந்ததால் கோவிலின் கதவு அடைக்கப் பட்டிருந்தது…ஒரு சிறிய நுழைவாயில் மட்டுமே திறந்திருந்தது..அதன் முன் நின்ற வாட்ச் மேனிடம்..தேனுகா உள்ளே செல்ல அனுமதிக் கேட்டார்…சன்னதி எல்லாம் முடியாச்சே…என்று சொன்ன வாட்ச் மேனிடம் ...நாங்க சாமி கும்பிட வர்ல…இங்கு அதிகமாக வந்து போன ஒருத்தவரின் நினைவுக்காக வந்திருக்கிறோம்…கொஞ்சநேரம் முன் பிரகாரத்தில் உட்கார்ந்து விட்டு போயிடுறோம்…என்று சொன்ன தேனுகாவை வாட்ச்மேன் தயக்கத்துடன் உள்ளே அனுமதித்தார்…

வெளியே வெயிலின் உக்கிரம் கோவிலுக்குள் தெரியவில்லை.அற்புதமான பல சிற்பங்கள் நிறைந்த கோவில் அது..தேனுகா அனைத்தையும் உற்சாகமாக விளக்கியபடி வந்தார்..கோவிலின் இடது புறத்தில் இருந்த ஒரு மேடையில் அனைவரும் அமர்ந்தோம்..அங்குதான் எம்.வி.வியும் ,தேனுகாவும் உட்கார்ந்து பேசிக் கொண்டிருப்பார்களாம்..எம்.வி.வி.க்கு மிகவும் பிடித்த இடமாக ராமசாமி கோவில் இருந்திருக்கிறது….

அங்கு உட்கார்ந்து மீண்டும் எம்.வி.வியை பற்றி பேசிக் கொண்டிருந்தோம்…எம்.வி.வியும் எங்களுடன் உட்கார்ந்து பேசிக் கொண்டிருப்பது போன்ற ஒரு உணர்வு எங்கள் அனைவருக்குமே தோன்றியது…

நம் தமிழ் சமூகத்தில் எம்.வி.வி போன்ற எளிமையான ,அதே சமயம் அசலான பல இலக்கிய மேதைகள் வாழ்ந்திருக்கின்றனர்..எழுதுவதும்…அதில் இன்பம் துகிப்பதுமான ஒரு மனநிலையில் தன் படைப்புத் தளத்தில் பல சாகசங்களை எவ்வித விளம்பரமும் இன்றி நிகழ்த்தி இருக்கின்றனர்…மனிதனை மிக அருகில் நின்று …ஒரு சிற்பத்தை செதுக்குவது போல ..அணுஅணுவாய் தங்கள் படைப்பு உலகை அவர்கள் சிருஷ்டித்துள்ளனர்…..

ஆனால் அவர்களிடம் விளம்பரம் இல்லை…விருதுகள் கூட அதிகமில்லை…வருமானம் இல்லை..அதற்கான வழிகளை அமைத்துக் கொள்ளவும் அவர்கள் விரும்பவில்லை…படிப்பதும்…
எழுதுவதுமே அவர்களின் பணியாக இருந்திருக்கிறது…எளிய மனிதர்களாய் பிறந்து…எளிய மனிதர்களாய் இறந்தும் போய் இருக்கின்ற மாமேதைகள் அவர்கள்…

தான் வாழுங்காலத்தில் புகழப் படுவதும் ,போற்றப் படுவதும் நிகழ்வது இலக்கியவாதிகளை பொறுத்த வரையில் ஒரு கனவுதான்..மேடையில் வைத்து இலக்கிய செம்மல்,வேந்தர் என்றெல்லாம் பட்டம் பெற்ற எழுத்தாளரின் வாழ்க்கை விழா முடிந்து ,விழா நடத்தியவர்கள் காரினில் சென்று விட … வீட்டிற்கு திரும்பி செல்ல காசில்லாமல் டவுன் பஸ்ஸில் டிக்கெட் எடுக்காமல் பயணித்து..நடத்துனரிடம் கெட்ட வார்த்தை திட்டு வாங்கி…அலுப்புடன் கதவை திறக்கும் மனைவியிடம் சலிப்பு வாங்கி…அப்பா என்ன வாங்கி வந்திருப்பார் என்ற ஆவலில் பார்த்த குழந்தைகளின் பார்வையில் வெறுமையை வாங்கி….வறுமையில் வீழ்ந்து கிடப்பதுதான் பெரும்பாலான நடை முறையாக இருக்கிறது…

இலக்கிய வாதிகளின் வீட்டை…அவர்கள் உபயோகப் படுத்திய பொருட்களை வைத்து அருங்காட்சியமாக வைத்து போற்றுகின்றன மேலை நாடுகள்…
ஆனால் நம் நாட்டிலோ …….

எழுத்துக்கும்,எழுத்தாளனுக்கும் மதிப்பில்லை….

சிந்தனையோடு நாங்கள் பிரிந்தோம்…

வெளியே வெயில் தளராமல் தாக்கிக் கொண்டிருந்தது…
வேக வேகமாக வீட்டிற்கு வந்து..அம்மாவிடம் ஒரு சொம்பு தண்ணீர் வாங்கிக் குடித்தேன்….
வயிறு குளுமையாக ஆனது….

எம்.வி.வி எழுத்தும்…கோடைக்காலத்து குடிநீர் போலத்தான்…
வறண்ட வாழ்க்கையில்…உணர்வின் இருப்பை நினைவுப் படுத்துகின்றன அவை….

No comments:

Post a Comment