.
காற்று குளிராய் வீசுகிறது. அனேகமாக மழை வரலாம். சன்னல் கதவுகள் வேகமாக படபடத்துக் கொண்டன. குளிர் காற்று அறைக்குள் வரட்டும் என கருதி சன்னல்களை திறந்து வைத்து கொக்கிகள் போட்டேன். அறையெங்கும் குளிர் பரவியது. கொஞ்சம் ஆழ்ந்து சுவாசித்துப் பார்த்தேன். மீண்டும் அந்த பாடலை கேட்கலாம் போலிருந்தது. நேற்று அமெரிக்காவில் இருந்து அருமை நண்பர் பாக்யராசன் அந்த பாடலுக்கான சுட்டியை அனுப்பி அவசியம் நான் கேட்டாக வேண்டும் என்று பணித்தது முதல் இந்த நொடி வரை அந்த பாடலை பல முறை கேட்டு விட்டேன். பாடலை கேட்ட முதல் முறையில் அந்த பாடல் கண்ணனுக்கானது இல்லை என்பது மிகத் தெளிவாக புரிகிறது. பாடலைக் கேட்கும் பலரும் இப்படித்தான் உணர்ந்துக் கொள்கிறார்கள்.
.
கண் கலங்கிக் கொண்டு இருக்கிறேன். ஆழமாக ஊடுருவி ஆறாத ரணமாய் சதா உறுத்திக் கொண்டிருக்கும் ஒரு வலிக்கு தன் தமிழால் மயிலிறகு மருந்து தடவி இருக்கிறார் என் அறிவுமதி அண்ணன். இருட்டின் ஆழத்தில் கிடக்கும் விழிக்கு வெளிச்ச தெளிப்பொன்றை பற்ற வைத்து ஆறுதல் சொல்லும் சொற்களோடு .. வரும் சுதா ரகுநாதனின் குரல் நம்மை அசத்திப் போடுகிறது.
.
கண்களை மூடுங்கள் . விளக்குகளை அணையுங்கள். அசையாமல் இந்த பாடலை மென்மையாக உள்வாங்குங்கள். ஒற்றை புல்லாங்குழலோடு இதழ் இதழாய் விரியும் பாடலில் உங்கள் மனதை இழப்பீர்கள். சுதாவின் குரலில் ஒழுகும் உயிர் அறிவுமதி தமிழை பற்றி அப்படியே தேசியத் தலைவரை ஸ்தூலமாக நம் கண் முன்னால் நிறுத்திப் போடுகிறது.
“அவன் வருவான்; கண்ணில் மழை துடைப்பான்”
என குரல் உயரும் போது நாம் உடைகிறோம்.
“ பனி மூட்டம் மலையை மூடலாம், வழி கேட்டு பறவை வாடலாம்.”
என குரல் குழையும் போது இதுவரை இறுகிக் கிடந்த இதயத்தின் முடிச்சிகள் ஒன்றொன்றாய் அவிழ்ந்து இறகாகிறது.
.
இந்த பாடலும்..வரிகளும்..இசையும் ஓர் அனுபவம். இசைக்கு உயிர் உண்டு என்பதை மிக நெருக்கமாக உணர வைக்கும் தன்மை இப்பாடலுக்கு இருக்கிறது. எளிய சொற்களில் விரியும் இசை நம்மை ஆட்கொள்கிறது.
பாடலின் ஊடே தொக்கி நிற்கும் நம் தொன்மம் தந்த தாய்மையின் விரல்கள் நம்மை சாந்தப்படுத்துகிறது. கரைகிறோம். உருகுகிறோம். கரைந்து மிஞ்சிய கரைசலில் கண்ணீரின் உப்புத் துகள்கள் மிதக்கின்றன.
.
இந்த பாடல் படத்தின் எந்த சூழலுக்காக எழுதப்பட்டது என்ற இயக்குனரின் நோக்கங்களுக்கு எல்லாம் அப்பாற்பட்டு ..நாம் இந்தப் பாடலை அண்ணன் பாடலாகத் தான் உள்வாங்குகிறோம். அப்படித்தான் அதுவும் உள்ளே போகிறது. உயிரிசை வழங்கிய வித்யாசாகருக்கும்.. குரல் கொடுத்து அனுபவமாய் நம்முள் இறக்கிய சுதா ரகுநாதனுக்கும்., படத்தின் இயக்குனர் கரு.பழனியப்பனுக்கு நன்றிகளும்..பாராட்டுகளும்.
.
அறிவுமதி அண்ணனுக்கு நன்றி எல்லாம் சொல்லப் போவதில்லை.
அவர் அப்படித்தான். நான் இப்படித்தான்.
நாங்கள் இவ்வாறாக.
.
திரைப்படம்: மந்திரப் புன்னகை
இசை : வித்யாசாகர்
என்ன குறையோ
என்ன நிறையோ
எதற்கும் நான்
உண்டென்பான்
கண்ணன்
என்ன தவறோ
என்ன சரியோ
எதற்கும் நான்
உண்டென்பான்
கண்ணன்
என்ன வினையோ
என்ன விடையோ
அதற்கும் நான்
உண்டென்பான்
கண்ணன்
அதற்கும் நான்
உண்டென்பான்
கண்ணன்
( என்ன குறையோ )
நன்றும் வரலாம்
தீதும் வரலாம்
நண்பன் போலே
கண்ணன் வருவான்
வலியும் வரலாம்
வாட்டம் வரலாம்
வருடும் விரலாய்
கண்ணன் வருவான்
நேர்க்கோடுவட்டம்
ஆகலாம்
நிழல் கூட
விட்டுப் போகலாம்
தாளாத துன்பம்
நேர்கையில்
தாயாக கண்ணன்
மாறுவான்
அவன் வருவான்
கண்ணில் மழைத் துடைப்பான்
இருள் வழிகளிலே
புது ஒளி விதைப்பான்
அந்தக் கண்ணனை
அழகு மன்னனை
தினம் பாடி வா
மனமே
( என்ன குறையோ )
உண்டு எனலாம்
இல்லை எனலாம்
இரண்டும் கேட்டு
கண்ணன் சிரிப்பான்
இணைந்தும் வரலாம்
பிரிந்தும் தரலாம்
உறவைப் போலே
கண்ணன் இருப்பான்
பனி மூட்டம் மலையை
மூடலாம்
வழி கேட்டு பறவை
வாடலாம்
புதிரான கேள்வி
யாவிலும்
விடையாக
கண்ணன் மாறுவான்
ஒளிந்திருப்பான்
எங்கும் நிறைந்திருப்பான்
அவன் இசை மழையாய்
உலகினை அணைப்பான்
அந்தக் கண்ணனை
கனிவு மன்னனை
தினம் பாடி வா
மனமே
( என்ன குறையோ )