இறுதியாக உலகத்தின் மெளனம் கலைக்கப்பட்டிருக்கிறது.
ஐ.நா. குழுவினரின் அறிக்கைக்கு பிறகு தீவிரவாதத்திற்கு எதிரானப் போர் எனவெல்லாம் அமைதிப் புறாக்களாக கூவியவர்கள் இன்று மெளனம் காக்கிறார்கள். அடுக்கடுக்காய் குவிந்த போர்க்குற்றப் புகைப்படங்களும்,காணொளிகளையும் கண்டு காணாமல் இருந்த உலகத்தின் உதடுகள் எல்லாம் இப்போதுதான் இலேசாக முணுமுணுக்க துவங்கியுள்ளது . இதோடு மட்டுமல்ல இன்னும் காண சகிக்காத காட்சிகள் பல இருக்கின்றன என சேனல் 4 தொலைக்காட்சி நிறுவனம் அறிவித்து இருக்கிறது. இங்கே தேர்தல் முடிந்து அலை ஓய்ந்த கடலாய் தமிழகம் இருக்கிறது. 7 கோடி தமிழர்கள் வாழும் தாயக தமிழகத்தின் அரசியல் தலைவர்கள் மக்களுக்கு முன்பாக என்ன பேசுவது என்ற நிலையில் மருங்கிக் கொண்டு தவிக்கிறார்கள்.
2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கின் குற்றப்பத்திரிக்கையில் கனிமொழி பெயர் இணைக்கப்பட்டதற்காக தேர்தலுக்கு பின் முதன் முதலாக 27-04-2011 அன்று கூடிய தி.மு.க வின் உயர்நிலை செயல் திட்டக்குழு போகிற போக்கில் ஐ.நா குழு வரைந்த அறிக்கையின் மீது மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கண்டும் காணாத அளவிற்கு ஒரு தீர்மானத்தினை வரைந்திருக்கிறது. இவர்களின் இலட்சக்கணக்கான தீர்மானங்களின் கதி என்ன, அதன் மதிப்பு என்ன, அதை இவர்களே பின்பற்றும் லட்சணம் என்ன என்பதை நாமெல்லாம் நன்கு அறிவோம்.
இத்தனை அரசியல் நடவடிக்கைகளுக்கு மத்தியில் நம்மையெல்லாம் புருவத்தினை தூக்க வைத்திருக்கிறது அ.தி.மு.க பொதுச்செயலாளர் ஜெயலலிதாவின் அறிக்கை. தேர்தலுக்கு முன் பிரச்சார சமயத்தில் இந்த அறிக்கை வந்திருந்தால் ஓட்டுக்காக பேசியதாக நினைத்துக் கொள்ளலாம் . ஆனால் தேர்தல் முடிந்த பின்னர் இந்த அறிக்கை வெளியாகி இருப்பதுதான் நமது ஆர்வத்தினை தூண்டுகிறது. பார்ப்போம். மாற்றம் என்பதுதான் மாறாத தத்துவம் என்பதில் நம்பிக்கை கொள்வோம். வழக்கம் போல நமது நம்பிக்கைகள் கொடநாட்டின் குறட்டையில் முடியாமல் இருந்தால் சரி.
எதைப் பேசினாலும் 1956-க்கு பறந்து போய் பழங்கதைகள் பேசும் திமுக தலைவர் கருணாநிதி ஜெயலலிதாவின் கடுமையாக அறிக்கைக்கு பதில் சொல்லத் தெரியாமல் ஒன்றுக்கு இரண்டு அறிக்கைகள் விட்டு குழம்பியும்..குழப்பியும் போனார். 40 எம்.பிக்களை ராஜினாமா செய்ய சொன்னோம், போர் நின்று விட்டதாக பொய் சொன்னோம், மழை நின்றது..தூவானம் நிற்கவில்லை என்றெல்லாம் இரக்கமில்லாமல் ஒரு பொருட் இருமொழி பேசினோம் என்பதெல்லாம் திமுக தலைவருக்கு நன்றாகத் நினைவிருக்கும்.டாஸ்மார்க்கில் குடித்து விட்டு, கலைஞர் டிவியில் மானாட மயிலாட பார்த்துக் கொண்டிருக்கும் மானம் கெட்ட மக்கள் இவற்றையெல்லாம் மறந்திருப்பார்கள் என நினைத்திருப்பார் போலும் .
சென்ற பாராளுமன்றத் தேர்தலில் தான் வெற்றிப் பெற்றால் ஈழம் மலர உறுதுணையாக நிற்பேன் என ஜெயலலிதா பேசியதை நாடகம்..நடிப்பு.. என்றெல்லாம் துடிதுடித்த கலைஞர் ஆதரவுப் பெற்ற ஆன்றோர் பெருமக்களால் , ஒரு நடிப்பிற்காகவேனும் ஈழத்தமிழர்களுக்காக ஈழம் அடைய பாடுபடுவேன் என திமுக தலைவரை பேச வைக்க, அவரது கட்டை விரலை கூட அசைக்க வைக்க முடியவில்லையே..? .. சரித்திரம் படைத்த அந்த’ சாகும் வரை உண்ணாவிரத்தினை’ பற்றி இச்சமயத்தில் யாராவது நினைக்கக்கூடும். சிம் கார்டு இல்லாத அலைபேசியில் காரைக்குடி அண்ணாச்சியுடன் பேசியதாக கூறி போர் நின்று விட்டது என அறிவித்து விட்டு மதிய உணவிற்கு வீட்டிற்கு சென்று விட்ட சாதனையை யாராவது நினைக்கக் கூடும். “20 ஆண்டுகளாக நடந்துக் கொண்டிருந்த போரை ஒற்றை நொடியில் நிறுத்திய புறநானுற்றின் புத்துலகு விளக்கமே” என்றெல்லாம் திமுக தலைமையே தனக்குத் தானே சுவரொட்டி அடித்து சுவரை நாறடித்த கதையை யாராவது யோசிக்க கூடும். இவற்றையெல்லாம் நாடகம் ..நடிப்பு என்றெல்லாம் நாம் குறுக்கி விட முடியாது. இவை எல்லாம் அதற்கு மேலான ‘பெர்ப்பாமென்சுகள்’. தமிழ் ஈழம் என்ற நாடு இப்பூமிபந்தில் தலைவர் பிரபாகரன் தலைமையில் ஒரு நாடாக இருந்த போது ஆதரிக்க மனமில்லாமல் சகோதர யுத்தம். என்றெல்லாம் சாக்கு சொல்லி புறக்கணித்த திமுக தலைவருக்கு இப்போது மட்டும் தனி ஈழம் தீர்வாக தோன்ற காரணம் இதை வைத்து 2 ஜி க்கு மாற்றாக காங்கிரசை மிரட்டலாம் என்றுதான் .
நம் தலைவர்கள் வைத்திருக்கும் ‘சிங்களப் பற்று’ மிகவும் புகழ் வாய்ந்தது. ஒன்று பட்ட இலங்கைக்குள் தான் இவர்களின் இருதய துடிப்பே இருக்கிறது என்பது போல இருக்கின்றன இவர்களது நடவடிக்கைகள். தமிழரும், சிங்களரும் சம நீதி பெற்று வாழ்வதுதான் தனது விருப்பம் என அறிவித்துள்ள திமுக தலைவர் கலைஞர் கருணாநிதியை கண்டு சிங்களர்களுக்கே புல்லரிப்பு ஏற்பட்டிருக்கும். அங்கே சாகக்கிடக்கும் தமிழனுக்கு சம நீதி என்ன ..எதுவும் கிடைக்காது என்பது இவர் அறியாததா..? . இப்போது இவர் தான் இப்படி என்றால் தமிழ்நாட்டின் பிரதான எதிர்க்கட்சித்தலைவி வெளியிட்ட அறிக்கையில் இலங்கைத் தமிழர்கள் என்றுதான் வருகிறதே ஒழிய தப்பித் தவறி ஈழம், ஈழத்தமிழர்கள் என்ற வார்த்தைகளே காணோம். நம்மினத்தினை ஒட்டு மொத்தமாக சிங்கள பேரினவாதம் அழித்துப் போட்ட பின்னரும் இலங்கையின் ஒருமைப்பாட்டை காக்க இவர்கள் காட்டுகிற ஆர்வம் சிங்களர்களை மிஞ்சியது ஆகும்.
நடந்து முடிந்த சட்டமன்றத்தேர்தலின் போது காங்கிரசினை தோற்கடிக்க வேண்டும் என்ற எண்ணங்கள் தமிழுணர்வாளர்கள் அனைவருக்கும் இருந்தது. ஆனால் காட்டிய வழிகள் திசைக்கொன்றாய் திரும்பி நின்றதுதான் முரணாக இருந்தது. காங்கிரசினை தோற்கடிக்க வேண்டும். சரி. அதற்கு தேர்தலை புறக்கணிக்க வேண்டும் என்று சிலர் முடிவெடுத்தார்கள். காங்கிரசு எதிர்ப்பாளர்கள் காங்கிரசினை எதிர்த்து தேர்தலைப் புறக்கணித்தால் அது காங்கிரசுக்கு ஆதரவாக முடியுமே என்ற கேள்விக்கு பதிலில்லை. இன்னும் சிலர் காங்கிரசை தோற்கடிக்க வேண்டும், ஆனால் காங்கிரசை எதிர்த்து நிற்கிற பிரதான கட்சிக்கு ஓட்டளிக்க கூடாது.டெபாசிட்டே பறி போகின்ற சுயேட்டைக்கு ஓட்டளித்து ஓட்டுக்களை பிரித்து காங்கிரசினை வெற்றிப் பெற செய்ய வேண்டும் என வித்தியாசமான முடிவெடுத்தார்கள். இன்னும் சிலர் இந்திய தேசியம் நமக்கு எதிரானது. அதனால் இந்திய தேர்தல் கமிஷன் நடத்தும் இத் தேர்தலினை நாம் புறக்கணிக்க வேண்டும். மாநில அரசதிகாரத்தால் எதுவும் இயலாது, இந்தியாவினை விட்டு தமிழ்நாடு பிரிந்து வந்த பிறகுதான் ஈழம் சாத்தியம் என்றெல்லாம் மிக கச்சிதமாக யோசித்து தேர்தலை புறக்கணித்தார்கள். இதில் என்ன சோகம் என்றால்…மக்கள் யாரையும் மதிக்காமல் வழக்கத்திற்கு மாறாக 80% சதவீதத்திற்கு மேலாக வருகை தந்து வாக்களித்து விட்டு சென்றிருக்கிறார்கள்.
மக்களை வெல்லாமல் எதுவும் சாத்தியமில்லை. மக்களிடம் மாற்றம் நிகழ்ந்தாலொழிய மண்ணில் மாற்றம் நிகழப் போவதில்லை. சிறிய இலக்குகளை அடைந்து அது வாயிலாகவே பெரிய இலக்குகளை அடைவதென்பதுதான் இதற்காக வழி. காங்கிரசு தோற்க வேண்டும் என்றால் எதிர்த்து நிற்கிற பிரதான எதிர்க்கட்சி வெற்றிப் பெற்றாக வேண்டும். இது தான் இருந்த ஒரே வழி. பல எதிரிகளை ஒரே நேரத்தில் வீழ்த்தியெறிவதற்கான அரசியல் பலமும், மக்கள் திரளும் இன்னமும் தமிழ் அமைப்புகளுக்கு கைக்கூடாத நிலையில் காங்கிரசினை எந்த விதத்தில் வீழ்த்தலாம் என சிந்திருக்கவேண்டும்.
அதைத்தான் தன்னால் இயன்றளவு நாம் தமிழர் அமைப்பினர் செய்தார்கள். காங்கிரசினை வீழ்த்த நேரடியாக களம் கண்ட அமைப்பினர் இந்த தேர்தலில் இவர்கள் தான். வேலூர், பாபநாசம் சென்னை, இராமநாதபுரம் போன்ற பல தொகுதிகளில் நாம் தமிழர் அமைப்பினர் மீது காங்கிரசார் நேரடியாக தாக்குதல் நடத்தியதும், வீரமிக்க இளைஞர் கூட்டம் எதிர்த்து நின்று போரிட்டதும் நடந்தது . செந்தமிழன் சீமான் அவர்களின் உணர்ச்சிக்கரமான உரைகள் காங்கிரசு போட்டியிட்ட இடங்களில் வெடிகுண்டுகளாய் விழுந்தன. கடைசிநேரத்தில் சீமானை எதிர்த்து காங்கிரசு சார்பாக களமிறக்கப்பட்ட எஸ்.வி.சேகர் “காங்கிரசைப் பற்றி தெரியுமா..?, இந்திய சுதந்திரத்திற்காக சீமானா குரல் கொடுத்தார்..?” என்றெல்லாம் பேசி விட்டு காங்கிரசை விட்டு தங்கபாலு நீக்கியவுடன்” சீமானாவது ஒவ்வொரு தேர்தலில் மட்டும்தான் காங்கிரசை அழிக்க பாடுபடுவார். ஆனால் தங்கபாலு எப்போதும் காங்கிரசை அழிக்க பாடுபட்டு வருகிறார் ,எனவே , ஆயிரம் சீமான்களுக்கு சமமானவர் தங்கபாலு” என்று காமெடி செய்து கலைந்துப்போனார்.
ஒரு வழியாக தேர்தல் முடிவடைந்து முடிவடைந்து முடிவுகள் இன்னும் 2 வாரங்களில் அறிவிக்கப்பட இருக்கின்றன. மக்கள் திரண்டு வந்து தன்னெழுச்சியாக பொங்கி வந்து வாக்களித்தது ஏதோ அருவ அலை அடித்திருக்கிறது என்பதற்கு அறிகுறியாக இருக்கிறது. முடிவுகள் எப்படி வேண்டுமானாலும் வரட்டும். ஆனால் தமிழர்கள் ஒன்று படும் காலம் வந்து விட்டது. சாதி,மதம்,அமைப்பு கடந்து இணைய வேண்டிய இடம் வந்து விட்டது. இல்லையேல் இனம் இருந்ததற்கான அடையாளமே இல்லாமல் போகும் . அதுதான் இத்தனை துயரங்களுக்கு பின்னர் நாம் கற்கிற பாடம்.
விளைந்தது எல்லாம்
நாம் ஏற்கனவே விதைத்தது.
இன்று விதைப்பது எல்லாம்
நாளை விளைவது – சீனப் பெருமொழி