6/15/13

இயக்குனர் மணிவண்ணன் - நினைவலைகளில் மிதக்கும் விடுதலைச்சிறகு.




                 அது 2010 ஆம் வருடம் . சுட்டெரிக்கும் வெயிலால் தமிழ்நாட்டின் வெப்பநிலை பிரதேச வேலூர் நகரமே கொதித்திக் கொண்டிருந்தது . சிங்களர்களை எதிர்த்து பேசி மாபெரும், மகத்தான , கொடூரமான,கொலைக்குற்றத்திற்கு (?) நிகரான குற்றத்தை இழைத்த காரணத்தினால், இந்திய தேசியத்திற்கு குந்தகம் ஏற்படுத்திய காரணத்தினால் செந்தமிழன் சீமான் வேலூர் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். அவரை காண்பதற்காக நான் உட்பட பலரும் சிறை வாயிலின் முன் காத்திருந்தோம். அங்கு காத்திருந்த எவருக்கும் அந்நாளில் சீமானைப் பார்க்க அனுமதி மறுக்கப்பட்டது. வழக்கறிஞர் என்ற காரணத்தினால் எனக்கு மட்டும் அனுமதி கிடைத்தது. நான் உள்ளே செல்ல நுழைய தயாரான போது அங்கு ஒரு கருப்பு நிற கார் அந்த வளாகத்தில் வந்து  நின்றது . அந்த காரில் தான் இனமான இயக்குனர் மணிவண்ணன் இருந்தார் . கருப்பு உடை அணிந்திருந்த அவர் எங்களை பார்த்து லேசான புன்னகை பூத்தாலும்  கடுமையாக களைப்புற்றும் சோர்வாகவும் தெரிந்தார். சமீப காலமாக அவரது உடல்நிலை சரியில்லாமல் இருந்தது என அனைவரும் அறிந்திருந்தோம்.  என்னை அருகே அழைத்த அவர் சிறையிலிருக்கும் சீமானை பார்க்க ஏற்பாடுகள் செய்து தருமாறு கோரினார்அவருடைய கோரிக்கையை பெற்றுக் கொண்டு நான் சிறைத்துறை அதிகாரிகளை சந்திக்க உள்ளே சென்றேன்பல முறை கேட்டுக் கொண்ட பிறகும் கூட  சிறைத்துறை நிர்வாகம் அய்யா மணிவண்ணனுக்கு சீமானை சந்திக்க அனுமதி தர மறுத்து விட்டது. இத்தகவலை அவரிடம் தெரிவித்த போது அனுபவங்களும், வாழ்வின் ஏற்ற இறக்கங்களும் விளைவித்த சுருக்கங்கள் பல நிரம்பிய அவரது முகம் மேலும் வாட்டமடைந்தது. நடக்கவே சிரமப்பட்ட அவர் இறுதியாக சிறைத்துறை அதிகாரிகளை சந்திக்க நேரில் வந்தார். சிறைத்துறை அதிகாரியிடம் தழுதழுத்த குரலில் அவர் இறைஞ்சிய போது உண்மையில் அவரது கண்கள் கலங்கின. ஒரு எளிய தகப்பன் ,உணர்விற்காக போராடி சிறைப்பட்டு கிடக்கின்ற தன் மகனை பார்க்க கூட உங்கள் ஜனநாயக நாட்டில் அனுமதி இல்லையா என்று கேட்ட அவரது குரலில் ஆற்ற முடியாத வேதனையும், இயலாமையும் தொனித்தது .


அவர் கேட்ட முறையும், அவரது இரக்கம் தொனிக்கும் குரலும் அவர் நடித்த மாயாண்டி குடும்பத்தார் திரைப்பட நெகிழ்ச்சி காட்சி ஒன்றை ஒத்திருந்தது.கண்கள் கலங்க அவர் நின்ற முறையில் எனக்கு திரையில் பார்த்த மாயாண்டிதான் நினைவுக்கு வந்தார். நிழலிலும், நிஜத்திலும், திரையிலும் அசலாக வாழ்ந்த ஒரு மனிதனாக மணிவண்ணன் திகழ்ந்தார் . இறுதியாக சிறைத்துறை நிர்வாகம் பிடிவாதமாக அனுமதி மறுக்கவே தளர்ந்த நடையோடு தடுமாறியவாறே அவர் சிறையை விட்டு வெளியேறிய காட்சி அழியாத சோகச் சித்திரமாய் ஆன்மாவில் ஆழப் பதிந்துள்ளது .

நான் அதற்கு முன்னரும்,பின்னரும் நிறைய முறை மணிவண்ணன் அவர்களை சந்தித்து இருக்கிறேன். அவரது வீட்டில் தான் நாம் தமிழர் உருவாவதற்கான முன்னேற்பாடு கூட்டங்கள் தொடர்ச்சியாக நடந்துக் கொண்டிருந்தன . ஈழத்தின் அழிவு அவரை மனதளவில் வெகுவாக பாதித்து இருந்தது. தீவிர பெரியாரியவாதியான மணிவண்ணன் திராவிட இயக்கத்து அரசியல் தலைவர்கள் மீது கடுமையான விமர்சனங்களை கொண்டிருந்த காரணம் நிகழ்கால அரசியல் நிலைகள் அவருக்கு கற்பித்த பாடங்களே என்றால் மிகையில்லை . திராவிட இயக்கத்து அரசியல் தலைவர்களின் சுயநல,பித்தலாட்ட அரசியல் நிலைப்பாடுகளால் தான் தமிழர்கள் தங்களது தாய் நிலத்தை இழந்தார்கள் என அவர் கருதினார் . தனது அரசியல் வாழ்க்கையை திமுக அனுதாபியாக தொடங்கிய அவர்  திமுக தலைவர் கருணாநிதி மீது ஒரு காலத்தில் மிகவும் பற்றும் மரியாதையும் கொண்டிருந்தவர். அன்றைய அதிமுக அரசினை சாடி பாலைவன ரோஜாக்கள் என்கிற இவரது திரைப்படத்திற்கு கருணாநிதி வசனம் எழுதுகிற அளவிற்கு அவர்கள் இருவருக்குமான உறவு இருந்தது. ஒரு காலக்கட்டத்தில் திமுகவில் இருந்து விலகி வைகோ மதிமுக தொடங்கிய போது வைகோவோடு திமுகவில் இருந்து விலகி, அவரது தீவிர விசுவாசிகளுள் ஒருவராக திகழ்ந்தார். வைகோ சாயலில் கதாநாயகனை வடிவமைத்து சத்யராஜை நடிக்க வைத்து திரைப்படம் எடுத்தார். மதிமுக விற்காக பத்திரிக்கை நடத்தினார் .பிறகு மதிமுகவில் இருந்தும் விலகி தனித்திருந்தார். திராவிட அரசியலில் தீவிர நாட்டம் கொண்டு தலைவர்களுக்காக உழைத்து, அவர்களது சுயநல அரசியலால் களைப்புற்று,  சோர்ந்துப் போன தொண்டனாய் அவர் விளங்கினார். இனவிடுதலை,மொழியுணர்வு என யார் மேடை போட்டு கூப்பிட்டாலும் ஓடிச்சென்று உணர்வை எள்ளலும்,நகைச்சுவையுமாக கொட்டி விட்டு வருகிற வேலையை தான் வாழ்நாள் முழுக்கச் செய்தார்.  
மிகச்சிறந்த வாசிப்பாளராக திகழ்ந்த அவர் செல்லுமிடங்களில் எல்லாம் புத்தகங்களை எடுத்துச் சென்று வாசித்துக் கொண்டிருக்கும் பழக்கமுடையவர் .தங்கும் விடுதிகளில் அவர் அறைக் கதவை திறந்து பார்க்கும் போதெல்லாம் கண்ணாடி அணிந்துக் கொண்டு ஏதாவது ஒரு புத்தகத்தை ஆழமாக படித்துக் கொண்டிருக்கிற காட்சியை நெருக்கமானவர்கள் அடிக்கடி கண்டிருப்பார்கள். புத்தகங்களைப் பற்றி நானும் அவரும் நிறைய உரையாடி இருக்கிறோம். அதுவே எங்கள் இருவரையும் மிக நெருக்கத்தில் கொண்டு வந்து சேர்த்தது .  கும்பகோணத்தில் அன்னைக் கல்லூரி விழாவிற்காக அவர் வந்திருந்த போது திடீரென்று லா..ராவின் அபிதா படித்துள்ளாயா என கேட்டார். நூறாவது நாள் என்கிற திகில் மசாலா படம் எடுத்த இயக்குனர்  தீவிர இலக்கியம் பேசுவது சற்று முரணாகவே எனக்கு தோன்றியது. பின்னர் நானே அவரிடம் ஒரு முறை இதைப்பற்றி அவரிடம் கேட்டுள்ளேன். நீங்கள் வாசிக்கிற புத்தகங்களும், எடுக்கிற திரைப்படங்களும் எதிர்க் கோட்டு முரணாக இருக்கிறதே என்று கேட்ட என்னை சற்றே கிண்டலாக பார்த்தார். 2 படம் எடுத்துப்பார் .தெரியும் என்றார் ஆழமாக. எனக்குத் தெரியும் . அவர் தயாரிப்பாளருக்கு நேர்மையாக இருக்க முயன்றார்.ஆனால் கண்டிப்பாக அவர் தன்னளவில் நிறைவு கொண்டிருப்பாரா என்பது சந்தேகமே.   ஏறக்குறைய தமிழின் அக்காலத்து சர்யலிச பாணியில் அமைந்த  நவீனத்திரைப்படங்களுள் ஒன்றானநிழல்கள்அவரது கதையில் உருவானது. அவரால் நிழல்களும் எழுத முடிந்தது. அமைதிப்படையும் எடுக்க முடிந்தது . அவரால் தான் முடியும்.

          திரைத்துறையில் இருக்கிற பலர் தாங்கள் படிப்பாளிகளாக, அறிவாளிகளாக காட்டிக் கொள்கிற காலத்தில் உண்மையில் வாசிப்பாளராக, நுண்ணறிவு கொண்டவராக இருந்த அவர் தன்னை மிக எளிமையாகவே சித்தரித்துக் கொண்டார் . மார்க்சியம் தொடங்கி பின்நவீனத்துவம்,நிகழ்கால இலக்கியம், சங்கப்பாடல்கள், நவீன கவிதைகள் என அவரது அறிவு விசாலமானது. பாரதியார் கவிதைகளை வரி மாறாமல் மனப்பாடம் செய்து வைத்திருந்தார் . சிற்றிதழ்களை தேடிப் பிடித்து வாசிக்கும் பழக்கமுடையவர். நூல் வெளியீட்டு விழாக்களில் புத்தகத்தை முழுமையாக படித்து விட்டு மேடை ஏறுபவர். உதவி கேட்டு பத்திரிக்கைகளில் வரும் விளம்பரங்களை படித்து விட்டு  அந்த முகவரிக்கு தொடர்ச்சியாக  பணம் அனுப்பும் பழக்கமுடையவர். எனக்குத் தெரிந்து பல ஆண்டுகளுக்கு முன்னரே சிறு நீரகப் பிரச்சனையால் பாதிக்கப்பட்ட மார்க்சியவாதியான நெடுவாக்கோட்டை ராஜேந்திரன் குறித்து அப்போதைய நிறப்பிரிகை ஆசிரியர்களான அ.மார்க்ஸ்,கோ.கேசவன் ஆகியோர் தினமணியில் கொடுத்திருந்த விளம்பரத்தை பார்த்து விட்டு பணம் அனுப்பி உதவி செய்தார் .

        தன் வாழ்நாளின் இறுதிக்கட்டத்தில் தன்னை நாம் தமிழர் கட்சியில் இணைத்துக் கொண்டு பல்வேறு கூட்டங்களில் பேசினார் .தமிழ்த் தேசியத்தலைவர் மேதகு.வே.பிரபாகரன் மீது அளவற்ற அன்பு கொண்டவர். அவரைப் போல தமிழனை தமிழின வரலாறு கண்டதில்லை என்பார். மேடைகளில் சீமான் தலைவர் பிரபாகரனை  பெருமைப் பொங்க விவரிக்கும் போது  அவரது முகம் பளீரிடும் . ஈழத்தைப் பற்றி பேசும் போதெல்லாம்  கண் கலங்கி உணர்ச்சிவயப்படும் உளவியலை அவர் கொண்டிருந்தார். இறந்த பிறகு தன் உடலில் புலிக் கொடி போர்த்தி அடக்கம் செய்யுங்கள் என அறிவித்ததும் ஈழ விடுதலையின் மீது கொண்ட ஆழ்ந்த பற்றுறுதி காரணமாகத்தான் .

அவரது படங்கள் ஒன்றுக்கொன்று தொடர்பில்லாதவை. ஒரே சாயலில் திரைமொழி எழுத அவருக்கு பிடிக்காது . டிக் டிக் டிக்,நூறாவது நாள்,24 மணிநேரம் போன்ற மர்ம திகில் படங்கள் எடுத்த அவரால் அமைதிப்படை,பாலைவனரோஜாக்கள் போன்ற அரசியல் சமூகப்படங்களையும் மிக எளிமையாக எடுக்க முடிந்தது. கொடிப்பறக்குது என்கிற படத்தில் வில்லனாக நடித்து நடிகனாக தன் மற்றொரு பரிமாணத்தை தொடங்கினார். பிறகு குணச்சித்திர ,நகைச்சுவை நடிகராகவும் முத்திரைப் பதித்தார். முதல்வன்,சங்கமம்,உள்ளத்தை அள்ளித்தா,படையப்பா, அவ்வை சண்முகி,மாயாண்டி குடும்பத்தார் என அவர் நடித்த வெற்றிப்படங்களின் எண்ணிக்கை மிக நீண்டது .

தனது திரைப்பட வாழ்வில் 50 படங்களை இயக்கியும்,400க்கும் மேற்பட்ட படங்களில் நடித்ததால் மட்டுமே மணிவண்ணன் நினைவுக்கூரத்தக்கவரல்ல. மாறாக மொழி உணர்வும், இன உணர்வும் அற்றுப் போன திரைப்படத்துறையில் இன மானம் நேசிக்கிற ஒரு உணர்வாளராய்,ஈழ விடுதலை வேட்கையின் திரைத்துறை பிரதிநிதியாய் ,ஆழ்ந்த இலக்கிய வாசிப்பாளராய், அடுத்த மனிதனுக்கு உதவும் இரக்க இதயம் இருப்பவராய் ..அனைத்தையும் விட தமிழ்த் தேசிய கொள்கை பற்றாளனாய் விளங்கிய மணிவண்ணன் என்றென்றும்  நம் ஆன்மாவில் நின்று நினைவாய் சுரப்பவர்.

தான் ஈன்றெடுத்த மகனாகவே சீமானை நேசித்து பழகியதாகட்டும், தன் உடன்பிறந்த இணையாய் நடிகர் சத்யராஜை நினைத்து அவரின் முன்னேற்றத்திற்கு தன்னை அர்ப்பணித்ததாகட்டும் ,அவருடன் பழகியவர்கள் யாருக்கும் அவருடைய இழப்பு எளிதானதல்ல.  எளிய இளைஞர்களால் உருவாக்கப்பட்ட அமைப்பு என்பதாலேயே அவர் நாம் தமிழர் கட்சியில் மிக நெருக்கமாக இருந்தார் .கட்சி கட்டமைப்புக் கூட்டங்களில் நம்பிக்கையுடன் பங்கேற்று தனது கருத்தினை பதிவு செய்தார்.  ஈழ விடுதலை மட்டுமல்ல மரணத் தண்டனை ஒழிப்பு, இராசீவ் கொலை வழக்கு கைதிகள் ஏழு தமிழரின் விடுதலை, முல்லை பெரியாற்று சிக்கல் போன்ற தமிழினம் சார்ந்த முக்கிய பிரச்சனைகளில் தனக்கென தெளிவான கொள்கையை அவர் கொண்டிருந்தார்.

நாம் தமிழர் அமைப்பினரால் அன்பொழுக அப்பா என்று அழைக்கப்படும் இனமான இயக்குனர் மணிவண்ணன் சரிந்துப் போன சகாப்தம் அல்ல... என்றென்றும் தனது இனமான உணர்ச்சியினால் விரிந்தெழுந்த ஒரு பறவையின் விடுதலைப் பெற்ற சிறகு.

அவரது முடிவும் கூட அவரது முதற்படத்தின் தலைப்பை நினைவூட்டுகிறது.

கோபுரங்கள் சாய்வதில்லை.

-மணி செந்தில்.


                        
                                            

6/13/13

கொள்கையற்ற அரசியலின் கோமாளிகளும் – காணச்சகிக்காத காட்சிகளும் –


11-06-2013 அன்று புதிய தலைமுறை தொலைக்காட்சியில் நடந்த நேர்பட பேசு நிகழ்ச்சியில் கலந்துக் கொண்ட தேமுதிக வின் அதிருப்தி சட்டமன்ற உறுப்பினர் சாந்தி பேசும் போது தமிழக முதல்வரை புரட்சித்தலைவி என்று பெருமைப் பொங்க விளித்தார். இதில் அதிர்ச்சியடைவோ, ஆச்சர்யம் கொள்ளவோ ஏதுமில்லை என்றாலும் கூட காட்சித்தாவும் அல்லது தாவ முயலும் ஒரு நபர் கொள்ளும் தயக்கத்தின் அளவு கூட  தற்போது சற்றும் இல்லாமல் போய் விட்டதுதான் வேதனை அளிக்கிறது. தொகுதி பிரச்சனைக்காகத்தான் முதல்வரை சந்தித்தேன் என்று கூறும் சாந்தியிடம் அவருக்கு எளிதாக கிடைத்த முதல்வர் தரிசனம்  அதே தொகுதிப் பிரச்சனைக்களுக்காக ஏற்கனவே முதல்வரை சந்திக்க மனு கொடுத்து காத்திருக்கும் தேமுதிக தலைவர் விஜயகாந்திற்கும் அதன் சட்டமன்ற கொறடா சந்திரக்குமாருக்கும் கிடைக்குமா என்ற கேள்விக்கு பதில் இருக்காது.  இப்போது தேமுதிகவிற்கு நிகழ்கிற இந்த சறுக்கல்களுக்கு அது கொண்டிருக்கிற கொள்கையற்ற அரசியல் தான் மிக முக்கிய காரணமாக நம்மால் உணர முடிகிறது.

கொள்கை சார்ந்து உருவாகிற எந்த அமைப்பும்  உளவியல் ரீதியாக இறுக்கமாக உருவாகிறது. கட்சித் தலைமையின் அறிக்கைகளும், ஆவணங்களும், பொறுப்பாளர்களின் உரைகளும் அந்த கொள்கை சார்ந்து அதன் ஊழியரை மேலும் இறுக்கமடைய செய்கிறது.  ஒரு அரசியல் கட்சியின் தோற்றம் நிகழ்ந்தவுடன் அதன் திசைவழி குறித்த பார்வை பிறக்கிறது. அரிதான சில சமயங்களின் வரலாற்றின் போக்கும் ஒரு அரசியல் கட்சியின் திசை வழியை தீர்மானிக்கிறது. அரசியல் திசைவழி தீர்மானிக்கப்பட்டதும் கட்சி ஊழியர்கள் ஒரு தீர்க்கமான அம்சம் ஆகின்றார்கள். அவர்களுக்கு திசைவழி குறித்து பயிற்றுவிப்பதும் ஒரு அரசியல் கட்சியின் போராட்டக் கடமை என்கிறார் மாவோ.
   
ஆனால் தேமுதிகவின் பிறப்பும், திசைவழியும் கொள்கை சார்ந்து விளைந்தவை அல்ல.அதன் தொண்டர்களும் கொள்கை அரசியலால் பயிற்றுவிக்கப்பட்டவர்கள் அல்ல. ரசிக மனப்பான்மையிலும், திமுக, அதிமுக என்கிற இரு பெரும் கட்சிகளில் இடம் கிடைக்காத அனாதைகளாலும் உருவானது தேமுதிக. கடவுள் மறுப்பு கொள்கையை அடிப்படை அம்சமாக கொண்ட திராவிட இயக்க அமைப்பொன்றின் முதல் பூசை திருப்பதியில் நடந்தது என்பதுதான்  தேமுதிகவின் கடந்த கால வரலாறு. அதனால் தான் உங்கள் கட்சியின் கொள்கை என்ன என்ற கேள்விக்கு ரேசன் பொருட்களை வீடு தேடி வந்து கொடுப்பது என்று விஜயகாந்தால் சிரிக்காமல் பதிலளிக்க முடிந்தது. அதனால் தான் இவரை புரட்சிக் கலைஞர் கேப்டன் என்று புல்லரித்து உச்சரித்த சாந்தியால் அடுத்த நொடியே ஜெயலலிதாவை புரட்சித்தலைவி அம்மா என பூபாளம் பாட முடிகிறது.

தேமுதிக நிகழ்த்தும் அரசியல் காட்சிகள் திரைப்படங்களில் வரும் நகைச்சுவை காட்சிகளை விட கோமாளித்தனமானது. தேர்தல் பிரச்சாரத்தின் போது பெயர் மாற்றி தடுமாறி உச்சரித்த விஜயகாந்திடம் பெயரை சரியாக சொல்ல சொன்ன கட்சி வேட்பாளர் அடி வாங்குகிறார். விமான நிலையத்தில் கேள்வி கேட்ட நிருபர்களிடம் நீயா எனக்கு சம்பளம் தர்ற..? என கேட்டு அடிக்க பாய்ந்ததும், சட்டமன்றத்தில் நாக்கைத் துறுத்தி காட்டியதும் ....எதுவுமே சொல்லிக் கொள்ளும் அளவிற்கு இல்லை. என்ன..நாமெல்லாம் மக்களாய் இருக்க ..இவர்கள் எல்லாம் தலைவர்களாக இருக்கிறார்களே என்கிற வேதனைதான் இதயத்தை அறுத்துக் கொண்டே இருக்கிறது.  

திராவிடக் கட்சிகள் தமிழக அரசியலின் மீது ஏற்படுத்தியுள்ள கடுமையான தாக்கம் அதன் அற விழுமியங்களை பாதித்து இருக்கிறது. தன்னைப் புகழும் ஒரு கட்சிக்காரரை காமராசர் சட்டையை பிடித்து அமர வைத்த காலம் ஒன்று இருந்தது. ஆனால் இன்றோ ஜெயலலிதா தமிழக சட்டமன்றத்தை தனது பாராட்டு மன்றமாக பாவிக்கிறார். 90 கவிஞர்களை புகழ வைத்து மகிழ்ச்சிக் கொள்ளும் கருணாநிதியின் உளவியல்தான்  ஜெயலலிதாவிடமும் இருக்கிறது. சாராயக் கடை திறந்து முதல் சாந்தி கட்சி மாறுவது வரை திராவிடக் கட்சிகளின் காட்சிகள் எதுவும் காண சகிக்காதவை. சென்ற ஆட்சியில் கருணாநிதி மதிமுகவை  உடைப்பதில் குறியாக இருந்தார். இது அம்மா நேரம். கெட்ட நேரம் தேமுதிகவிற்கு.
கொள்கை சார்ந்து இயங்கும் ஒரு அரசியல் அமைப்பில் தேமுதிக வில் நிகழ்கிற காட்சிகள் போல நிகழ்வது அரிதான ஒன்றாக இருக்கிறது. கொள்கை சார்ந்து இயங்கும் அமைப்பில் துரோகங்கள் நடக்கலாம். ஆனால் தேமுதிகவில் நடப்பது போல கோமாளித்தனங்கள் நடக்காது. தேமுதிகவின் 7 சட்டமன்ற உறுப்பினர்கள் இதுவரை தமிழக முதல்வரை சந்தித்து உள்ளனர். தொகுதிப் பிரச்சனைகளுக்காகத்தான் அவர்கள் தமிழக முதல்வரை சந்திக்கிறார்கள் என்றால்.. முதல்வர் தனது கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் யாரையாவது தொகுதிப் பிரச்சனைக்காக சந்தித்து இருக்கிறரா..?. அல்லது ஆளுங்கட்சி உறுப்பினர்கள் யாருக்கும் தொகுதி பிரச்சனையே இல்லையா..?

 திராவிடக் கட்சிகளின் இரு பெரும் தலைவர்களான ஜெயலலிதாவும், கருணாநிதியும் போட்டி போட்டுக் கொண்டு தமிழ்நாட்டு அரசியல் வெளியை தரம் தாழ்த்திக் கொண்டிருக்கிறார்கள். தமிழ்நாட்டு அரசியலை காசு போட்டு காசு எடுக்கும் கம்பெனியாய் கலர் மாற்றியவர் கருணாநிதி. உள்ளூர் கம்பெனியை உலக கார்ப்ரேட் கம்பெனியாக மாற்றியவர் ஜெயலலிதா. இதன் நடுவே குண்டுச்சட்டிக்குள் எம்ஜிஆர் குதிரை ஓட்ட வந்தவர் விஜயகாந்த். கறுப்பு எம்ஜிஆரின் குண்டுச்சட்டி இன்று உடைந்து கிடைக்கிறது.

முடிவாய் ஒன்று தோன்றுகிறது.

இங்கே..
யாருக்கும் வெட்கமில்லை.


-மணி செந்தில்.