11/20/09

.பழசி ராஜா - வீழ்ந்த ஒரு இனத்தின் விசாலப் பார்வையில் .



பழசிராஜா திரைப்படம் சுதந்திரப் போராட்டத்தில் வீழ்ந்த ஒரு இனத்தின் வீர வரலாற்றினை சொல்கிறது. பழசிராஜாவின் நிலக் களன் நமக்கு புதிது. பசுமை சொட்டும் கேரளா காடுகள், மழையும் ஈரமும் ஆக நகரும் ஒளிப்பதிவின் அழகியல் நம்மை கவரக் கூடியது. பழசி ராஜாவாக தேர்ந்த நடிகர் மம்முட்டி. முகத்தில் உணர்வுகளின் வித்தியாசங்களை மிதக்க விடுவதில் வல்லவர் அவர். அதை இத்திரைப்படத்திலும் அதைத்தான் செய்துள்ளார். தளபதியாக சரத்குமார். வழக்கம் போல இறுக்கமான முகத்தில் அவருக்கு எந்த உணர்வும் வர மறுக்கிறது. மற்றபடி மனோஜ், பத்மபிரியா, கனிகா ,சுமன் என விரிவான நட்சத்திர கூட்டம் மலையாள மண்ணிற்கே உரிய மிகை இல்லாத நடிப்பில் மிளிர்கிறார்கள். இசை நம் இளையராஜா. குன்றத்து எனத் தொடங்கும் அந்த பாடலின் இசை மெய்க்குள் புகுந்து மனதை மயக்கச் செய்கிறது.பின்னணி இசையிலும் இளையராஜா தான் மேதை என்பதை மீண்டும் நிரூபிக்கிறார். மலையாள பண்பாட்டினை ஒவ்வொரு காட்சியிலும் புகுத்தி இருப்பது திரைமொழியின் இயல்பான நகர்விற்கு உதவுகிறது. எளிய ஆங்கில வசனங்கள் பல வருகின்றன. ஆங்கிலம் தெரியாதவர்களுக்கு உதவியாக அக்காட்சிகளில் மட்டும் தமிழில் உதவி தலைப்பு (sub-title) பதித்து இருக்கலாம்.

பழசிராஜா கதை மிக எளிமையான ,நமக்கு ஏற்கனவே பழக்கமான கட்டபொம்மன் கதைதான். வரி கொடுக்க மறுக்கும் கேரள வர்ம பழசிராஜாவினை தனது சர்வாதிகார பலத்தினால் அடக்க துடிக்கிறது ஆங்கில ஏகாதிபத்தியம். அதை எதிர்த்து பழசிராஜாவும், அவரது ஈடு இணையற்ற படையினரும் போராடி வீரமரணம் எய்கின்றனர். காட்டிக் கொடுக்க இன துரோகியாக சுமன் கதாபாத்திரம்.
விடுதலைப் போராட்டங்கள் அனைத்தும் ஒரே மாதிரியான நிகழ்வுகளை கொண்டிருப்பது ஆச்சர்யம் தான். மக்களை நினைக்கும் தலைவன். அவரின் விசுவாசமான தளபதிகள். காட்டிக் கொடுக்க துரோகி. மண்டியிடாத வீரம் உடைய தலைவன் மக்களை தன்னை விட்டு போக சொல்லி வலியுறுத்தும் போதும் , அந்த அடர்ந்த காட்டின் நடுவே உணர்வின் ஊற்றாய் தலைவன் திகழ்வதை காணும் போதும் நமக்கு ஈழம் நினைவிற்கு வராமல் இருக்கமுடியாது.
உலகம் முழுக்க ஏதோ பகுதியில் சிந்தி சிதறிக் கிடக்கிற நம் தாய் தமிழ் உறவுகள் அனைவரும் ஈழம் என்ற வலியையும் , நம் தலைவர் பிரபாகரன் குறித்த பெருமிதத்தினையும் சுமந்தே வாழ்கிறோம். எதிரியாக வரும் ஆங்கில அதிகாரி மற்றும் அவரது மனைவிக்கு விருந்து உபசரித்து அனுப்பும் காட்சியில், பிடிபட்ட சிங்கள வீரர்களை கண்ணியமாக நடத்திய நம் தலைவரின் கண்ணியம் தெரிகிறது. இப்படித்தான் என் மனநிலை இருக்கிறது. எந்த விஷயமும் எனக்கு நம் தேசிய தலைவர் குறித்த பெருமிதத்துடன் தான் நகர்கிறது. அச்சமயங்களில் நான் கண் கலங்கி விடுகிறேன். பழசிராஜா திரைப்படத்தில் அழகியலுக்காகவும், கதாபாத்திர வலுவிற்காகவும் புனைவு இருக்கலாம். ஆனால் சமகாலத்தில் நம் தேசிய தலைவர் எவ்விதமான மிகைப் படுத்தலும் இல்லாமல் இயல்பாகவே அறம் காக்கும் சான்றோனாய் வாழ்வது உண்மையில் தமிழனாய் பிறந்த ஒவ்வொருவருக்கும் பெருமைதான். பழசிராஜா திரைப்படத்தில் பெண்கள் போரிடுகிறார்கள். கடைசி நொடி வரை நம்பிக்கை இழக்காமல் தியாகம் செய்ய தயங்காமல் தளபதிகள் போர் புரிகின்றார்கள் .இவை அத்தனைக்கும் நம்மிடத்தில் மாவீரர்களாய், கரும்புலிகளாய், பெண் புலிகளாய் வாழ்ந்த நம் ரத்த உறவுகள் உதாரணமாக இருக்கிறார்கள். மலையாள மண்ணிற்காக இரண்டு நூற்றாண்டு முன்னால் இருந்த ஒரு வீர வரலாற்றை திரைப்படமாக எடுத்த்திருக்கிறார்கள். எங்களின் போராளிகளோ சம காலத்து சாட்சிகளாக ,எங்களின் பெருமைமிகு அடையாளங்களாக , எங்கள் ஆன்மாவின் உள்ளார்ந்த வேட்கையாக உறைந்து இருக்கிறார்கள். தமிழர்களுக்கான தேசம் தமிழீழ தேசம். அதை நாங்கள் எந்த விலைக் கொடுத்தாவது , எங்கள் மாவீரர்களின் நினைவுகளோடு அடைந்தே தீருவோம்.
மற்ற படி பழசிராஜா – ஒரு தமிழனுக்கு ஈழம் குறித்த உணர்வினையும், வலியினையும், தலைவர் குறித்த பெருமிதத்தினையும் அளிக்கும் திரைப்பட அனுபவமாக கண் முன்னால் விரிகிறது.

கடைசியாக ஒன்று: முதல்வர் கருணாநிதி இத்திரைப்படத்தினை பார்த்து விட்டு மம்முட்டியை பாராட்டினாராம். இது தான் எனக்கு ஆச்சர்யம். குற்ற உணர்ச்சி அல்லவா வந்திருக்க வேண்டும்?

10/29/09

பேராண்மை -புனைவின் அரசியல்


சமீப கால திரைப்படங்களில் ஜனநாதன் இயக்கிய பேராண்மை திரைப்படம் திரையில் விவரிக்கிற புனைவின் அரசியல் நிராகரிக்கத் தக்கதாக நான் உணர்கிறேன். திரைமொழியில் அரசியலையும் தத்துவங்களையும் தெளிவான முறையில் கூறுவதில் சிக்கல்களை எதிர்கொள்கிறார் பேராண்மை ஜனநாதன் . படம் துவங்கிய ஆரம்ப காட்சிகளில் காட்டப்படும் வன கிராமமும், அதன் இயல்பான முகங்களும், அந்த கால்நடை பிரசவமும் நம்மை இருக்கையில் நிமிர்ந்து உட்கார வைக்கிறது. ஆனால் இரட்டை அர்த்த வசனம் பேசும் மேல்வர்க்க,மேல் சாதியாய் உருவகப் படுத்தப்படும் பெண்களால் சாதீய ஒடுக்குமுறைக்கு உள்ளாக்கப்படும் கதாநாயகனின் கதாபாத்திரம் திரையில் ஏதாவது ஒரு காட்சியில் சாதீய ஒடுக்குமுறைக்கு எதிரான தனது குரலை பதிவு செய்யும் என ஆவலாய் நாம் அமர்ந்திருந்தால்…ஏமாற்றம் தான் .மேலும் இந்தியக் கொடிக்காவும், நாட்டிற்காகவும் உயிரைக் கொடுக்கவும், துப்பாக்கி தூக்கி தாக்கவும் அர்ஜீனும், விஜயகாந்தும் போதும். அதற்கு அரசு இயந்திரங்களால் சூறையாடப்படும் ஆதி சமூகத்தின் வன மனிதன் தேவை இல்லை. வகுப்பறையில் மார்க்சிய கூறுகளை எளிமையாக விளக்கும் கதாநாயகன் காட்டின் நடுவே அதிகார மையத்தின் சின்னமாக இருக்கும் இந்திய நாட்டிற்கு உயிரைக் கொடுப்பதாக சூளுரைப்பதும், சாதீய ஒடுக்குமுறையினை சகித்துக் கொண்டு மெளனித்திருப்பதும் முரண்களே.. தேசிய இனங்களின் விழிப்பு நிலை சமீப காலமாக உச்ச நிலைக்கு விரையும் இக்காலக் கட்டத்தில் பேராண்மை நிறுவ விரும்புவது எவற்றை..?
1.இந்திய ஏவுகணையை தகர்ப்பதற்காக காடு மலை ஏரி என கண்ணன் தேவன் டீக்காக அலையும் பி.டி.உஷாவினை போல அலையும் சர்வதேச கூலிப்படைக்கு எதிராக போராட விளிம்பு நிலை மனிதர்களும் தயாராக வேண்டும்- தங்களுக்கு எதிராக நாடும், அதன் ராணுவ,காவல் கட்டமைப்பு இயந்திரங்களும் நிகழ்த்தும் வன்முறைகளை ஏற்றுக் கொண்டு அவர்களும் நாட்டினை காக்க போராட வேண்டும் என்று ஜனநாதன் சொல்ல வருகிறாரா?
2. ஆதி வனத் தமிழின பழங்குடி மக்களின் மீது நிகழ்த்தப்படும் சாதீய, அரசு வன்முறையை விட இந்திய தேசியம் உயர்வானது என்று கதாநாயகன் மெளனமாக சகித்திருப்பதும், அதை காக்க போராடுவதும், இந்தியா எனும் பெருமிதத்திற்கு முன்னால் எளிய மக்களின் மீதான சாதீய, அரசு வன்முறை எதிர்வினை புரியத் தக்கதல்ல என்பதனை இறுதிக் காட்சி வரை உறுதி செய்வதன் மூலம் மக்களை விட அரசின் எல்லையற்ற அதிகாரம் ( THE KING CAN DO NO WRONG) என்பதை ஜனநாதன் நிறுவ முயல்கிறாரா.?

தெளிவில்லாத திரைமொழியும், அது நிறுவ முயலும் தத்துவமாக இருக்கும் இந்திய தேசிய உணர்வு காட்சிகளும் நம்மை மிகவும் சோர்விற்கு உள்ளாக்குகின்றன.. உன்னைப் போல் ஒருவன் ஒரு இந்திய பார்ப்பன இந்துத்வா குரலாய் ஒலித்தது..பேராண்மை இந்திய தேசிய மேலாதிக்கத்தினை எளிய மனிதர்கள் மீது நிகழ்த்தப்படும் சாதீய, அரசு வன்முறைகளை மெளனமாக கடப்பது போன்ற வழிமுறைகள் மூலம் நிறுவ முயல்கிறது. முன்னதை விட பின்னது மிகவும் அபாயகரமானதொன்றாக நான் உணர்கிறேன். கண் சிவந்தால் மண் சிவக்கும் ,ஆணிவேர்,கோவில் பட்டி வீரலட்சுமி ஆதிக்க எதிர்ப்புணர்வு போன்ற படங்களுக்கான இந்திய தேசியத்தின் உரத்த, சாசக மறுமொழியாக பேராண்மை இருக்கின்றது.


இயற்கை, ஈ போன்ற படங்களை வைத்து பேராண்மையை கடக்க முடியாது. தமிழ் மொழி கல்வி பயின்ற கதாநாயகிக்கு மட்டும் அந்த ஆதி இளைஞன் மீது காதல் வருவதாக சித்தரிப்பது போற்றத் தக்கது என்றால் அந்த கதாநாயகியும் மற்ற ஆங்கில கல்வி பயின்ற மேல்சாதி,மேல் வர்க்க தோழிகளுக்கு கட்டுப்பட்டவளாக காட்டப்படுவது சலிப்பை தருகிறது. தமிழ் மொழி பயின்றவள் என்றால் திரை மொழியில் பலவீனமான ஒரு கதாபாத்திரமாக சித்தரிப்பது பல படங்களில் தொடர்வது போல இதிலும் தொடர்கின்றது. மற்றப் படி என்.சி.சி மாணவிகளுக்கு ஏவுகணை தொழிற்நுட்பமும், அதி நவீன இயந்திர துப்பாக்கிகளும் கைவரக் கொடுக்கும் கல்வி நம் நாட்டில் எங்கே இருக்கிறது.., அதி பாதுகாப்பு உடைய ஒரு இடத்தின் அருகில் மிக எளிதாக மற்றொரு ஏவுகணையை நிறுவுவது ….போன்ற துளைகள் நிரம்பிய திரைமொழியில் பேராண்மை வடிவேல் கண்கலங்க பேசும் ஒரு வசனத்திலும், உடல் ஊனமுற்ற அந்த ஆதி மனிதன் தன் கைகளால் நடந்து தாக்க முயல்கிற மூர்க்கத்திலும் - நின்று விட போராடுகிறது.


பிழைகள் அற்ற திரைமொழி சாத்தியமில்லைதான்.. ஆனால் பேராண்மை சாத்தியப்படுத்த முயலும் எதிர்வினையற்ற சாதீய, அரசு இயந்திரங்களின் வன்முறை காட்சிகள் மறுக்கவே இயலா பிழைகள் தான்.


நன்றி: தோழர்.விஷ்ணுபுரம் சரவணன்

8/9/09

பறை மொழி அறிதல்..



அடி விழ… அடி விழ
அதிரும் பறை.
தலைமுறைக் கோபம்.
-மித்ரா

குடந்தை தமிழ்க் கழக பொறுப்பாளர் தோழர்.சுடர் பறைக் கற்றுக் கொள்ள போவதாக என்னிடம் கூறிய போது எனக்கு வியப்பும், மகிழ்வும் ஏற்பட்டது. பறை என்ற தொன்மத்தின் மீது நான் வெகு நீண்ட காலமாக சற்று மிதம் மிஞ்சிய ஈர்ப்பில் இருந்தேன். தமிழ் தொன்மக் கூறான பறை என்ற இசை வடிவம் திட்டமிட்டு வந்தேறிய சாதீயக் காரணிகளினால் ஒதுக்கப் பட்ட கலையாகவும், அதை உள் வாங்கி இசைத்த மனிதன் விளிம்பு நிலை பிறவியாகவும் திரிக்கப்பட்டதன் அவலம் உணர்ந்த பின் ..என் தொன்மக் கலையின் மீது எனக்கு ஈர்ப்பு ஏற்படாமல் என்ன செய்யும்..?

கலை இலக்கிய இரவுகளில் மக்கள் நடுவே பறை இசை நிகழ்த்தப்படும் போது என்னையும் அறியாமல் பறை இசைக்குள் ஊடுருவிக் கொண்டிருந்தேன்.ஆண்டைகளின் மீதுள்ள கோபத்தினை..உழும் மாடுகளின் மீது செலுத்திய என் தமிழனின் கோபம் ..பறை மீது ..இசையாய் மாறியது என்று நானே உணர துவங்கியக் காலக் கட்டத்தில் நான் இன்னமும் பறை அருகே நெருங்கினேன்.

என் பூர்வீக கிராமத் திருவிழாக்களின் போது பறை இசைக் கலைஞர்களோடு மிக நெருக்கமான மனிதனாய் நெருங்கியதும் பறை மீதுள்ள பற்றின் காரணமாகத்தான்.உலகம் முழுக்க ஆதி மனித இனங்களின் இசைக் கருவியாக இழுத்து தைக்கப்பட்ட மிருகங்களின் தோல்தான் இருந்து வருகிறது என்பதும்..ஆப்பிரிக்க பூர்வீக மக்களின் தொன்ம இசை வடிவமும் நம் பறை போன்ற ஒன்றுதான் என்பதும் என்னை வெகுவாக கவர்ந்தன.
அதனால்தான் தோழர் சுடர் அழைத்தவுடன் நான் மிகவும் உற்சாகத்தில் விஷ்ணுபுரம் சரவணனை அழைத்துக் கொண்டு பறை இசைப் பயிற்சி நடக்கும் மைதானத்தினை நோக்கி விரைந்தேன்.

.
நாங்கள் அங்கே சென்ற போது ஒரு பூசைக்கான ஆரம்ப அறிகுறிகள் தென்பட்டன. இரண்டு பறைகளும், சில மூங்கில் துண்டுகளும் சுவற்றில் சாய்த்து வைக்கப்பட்டு இருந்தன.ஒரு வயதான பறை ஆசிரியரும், அவரது மகனும் பூசைக்கான பணிகளில் இருந்தனர். அதில் அந்த வயதான பெரியவருக்கு இடது கை சற்று ஊனமாகவும், இரண்டு விரல்கள் இல்லாமல் இருந்ததும் கவனிக்கத் தக்கதாக இருந்தன.பூசைகள் முடிந்து பயிற்சி துவங்கும் போது பறை நாம் தமிழர் குடந்தை ஒருங்கிணைப்பாளர் தம்பி புகழ் மாறன் கரங்களில் இருந்தது. மற்றொரு பறை கற்றுக் கொடுக்கும் வயதான ஆசிரியர் கையில் இருந்தது.நான் கண்களில் ஆர்வம் தெறிக்க கவனித்துக் கொண்டிருந்தேன். முதலில் பறை அடிக்கும் குச்சிகளை எப்படி பிடித்துக்கொள்ள வேண்டும் என கற்றுக் கொடுக்கப்பட்டது.புகழ் மாறன் முயற்சி செய்துக் கொண்டிருந்தான். அவனுக்கு பறை அவ்வளவு இலகுவாக வரவில்லை. அடுத்தது பறை எனக்கு அளிக்கப்பட்டது.
.
இழுத்துக் கட்டப்பட்ட அந்த பழுப்பேறிய பறையினை மெதுவாக நான் தடவிப்பார்த்தேன். எனது புலன்களில் இனம் புரியாத நடுக்கம். எனக்குள் இருந்த என் இனத்தின் ஆதி மரபுணுக் கூறுவினை யாரோ தொட்டு எழுப்பியது போல ஒரு உணர்வு. மெலிதாய் தட்டிப்பார்த்தேன். பறை அதிர்ந்தது. அதன் அதிர்வில் என்னை சுற்றியுள்ள அனைத்தும் அசையாத் தன்மை உடையதாக மாறி விட்டதாக நான் உணர்ந்தேன்.

நானும் என் மூதாதையின் கரங்களை உடையவனாக மாறிப் போனேன். ஆசிரியர் சொல்லிக் கொடுப்பது என்னுள் இறங்க துவங்கியது. ஆசிரியர் அடிக்கத் துவங்கினார். நானும் அடிக்கத் துவங்கினேன். மிக எளிதாக பறை என் வசப்பட்டது.மேலும் மேலும் என்னுள் உக்கிரம் ஏறிக் கொண்டே இருந்தது.வானில் நிலா காய்ந்துக் கொண்டிருந்தது. என் முன் நிற்பவர்கள் மறைந்துப் போனார்கள். நான் அடித்துக் கொண்டிருந்தேன். ஒரு ஒழுங்கு வயப்பட்ட ஒலியை என் இனத்தின் வலியை நினைத்துக் கொண்டு வாசித்துக் கொண்டிருந்தேன். ஈழ நினைவும், வலியும் என்னை மேன் மேலும் உக்கிரப்படுத்தியது. உடலும் மெலிதாக ஆடத் துவங்கியது. அடித்துக் கொண்டே இருந்தேன். தாளக் கட்டுக்கள் மாற்றி வாசித்து காண்பிக்கப்பட்டும் என்னுள் உள்ள வலியும் ,உக்கிரமும் என் தொன்மத்தில் கிளர்ந்து என்னை மயக்க நிலைக்கு இட்டு சென்றது. என் முன்னால் என் மக்கள் பிணங்களாய் குவிக்கப்பட்டிருக்கிறார்கள். என் பறை மேலும் உக்கிரமடைந்தது. யாரும் எங்களுக்கு இல்லை..என்ற உணர்வும் தவிப்பும் என்னை தாங்க இயலா சோகத்திற்கு இட்டு சென்றன..என் பறையில் என் மூதாதை உக்கிரமாக வெளிப்படுவது போன்ற உணர்வு. கரங்கள் வலித்தன. கையில் வைத்திருந்த குச்சிகள் பிய்த்துக் கொண்டு போயின.நானும் ,அந்த வயதான பெரியவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டு அடித்துக் கொண்டிருந்தோம்.

கரங்களின் வலி அதிகரிக்கவே..அடிப்பதை நிறுத்தினேன். கரங்கள் வலிப்பதாக கூறியவுடன்.. தம்பி புகழ் நம் தேசிய தலைவரை நினைத்துக் கொள்ளுங்கள் என்றான். நான் மீண்டும் உக்கிரமாக அடிக்க துவங்கினேன்.

பறை மொழி மிகவும் வசீகரமானது மட்டுமல்ல..உள்ளுக்குள் ஊறும் அனைத்தையும் கிளறக் கூடியது. சமீப கால எனது வலி மிகுந்த துயர் மனநிலை பறையுடன் மிக எளிதாகப் பொருந்திப் போனது.ஒவ்வொரு அதிர்விலும் நூற்றாண்டுகளை கடந்து என் இனத்து மூதாதையின் அருகே இருந்து விட்டு வருவது போன்ற உணர்வு. வேறு எந்த இசை வடிவமும் என்னை இவ்வாறு அலைக் கழித்தது இல்லை.என் நிகழ்கால வலியை..எனது துயரத்தினை எனது ஆதி துவக்கத்தின் கரங்களில் வைத்துகொண்டு அழுவது போன்ற அனுபவத்தினை பறை எனக்களித்தது..அந்த இரவும்..அந்த வயதான ஆசிரியரும், அந்த ஒழுங்கமைவு இசையும் என் மனநிலையை பிறழச் செய்தன.சம காலத்தில் என் கண் முன்னரே என் இனம் அழிக்கப்பட்டதை எண்ணி எண்ணி எனக்குள் ஊறிக் கொண்டே இருக்கும் குற்ற உணர்வின் வெளிப்பாடாய் பறையின் மொழி வெளி வந்தது.

ஒரு ஒலிக்கும்..உணர்வுகளுக்கும் இடையில் நிகழும் ஒத்திசைவு பறையில் நிகழ்வது போல வேறு எதிலும் நிகழ்வது இல்லை.

பறை எனக்கானதும்..என் தொன்ம இனத்தின் இசைக்கானதும் ஆகும்.ஆண்டாண்டு காலமாக அதிர்ந்துக் கொண்டிருக்கும் பறையின் மொழி மனிதனின் துயரத்தினை,வலியை, கோபத்தினை ,உக்கிரத்தினை சொல்கிறது.
வாசித்து முடித்ததும் அந்த வயதான பெரியவர் என்னை இறுக அணைத்து முத்தமிட்டார். அதிர்ந்து அதிர்ந்து உணர்வேறிய அவரது விரல்களும் அப்போது நடுங்கின என்பதை நான் உணர்ந்தேன்.

. வானம் இருட்டிக் கொண்டு மழை பெய்ய துவங்கியது.

8/6/09

மிதக்கும் வலி…



இதழ்களின் இடுக்கில் புகையும் சுருட்டின்
உதிரும் சாம்பல்களுக்கு மத்தியில்….
தேடிப்பார்க்கலாம்…தப்பித் தவறி உதிர்ந்து விட்ட
உயிரோட்டம் உடைய காயம் ஒன்றை.
தனிமையில் கசியும் என் கோப்பை
முழுக்க குழந்தைகளின் உடலங்கள் மிதக்கின்றன..
வளைந்து நெளிந்து எழும் புகை வளையங்களின்
ஊடே…நன்கு கவனித்து பார்த்தால் நீங்கள் அறியலாம்.
ரசாயன எரித்தலில் கருகிப் போன
பிணம் ஒன்று தூக்கில் தொங்குவதை….
என் அறையின் உயரத்தில் தொங்கும் ஒற்றை
விளக்கின் உமிழலில் பரவித் தெறிக்கிறது
கருப்பை ரத்தச் சுழி ஒன்று….
நாசியை புணரும் ரத்த வாடை
என் விழிகளில் மாற்ற இயலா
வடுவாய் எஞ்சி நிற்கிறது..

தூரத்தில் யாரோ அழைக்கிறார்கள்
அறுந்து தொங்கும் ஒற்றை ரத்த விரல் நீட்டி..
தொப்புள் கொடி கழுத்தை சுற்றி பிறந்த பிணங்களின்
வாயில் எச்சில் கோழையாய் வழிகிறது இறையாண்மை..

.
ஓங்காரக் குரல் எடுத்து அழுகிறேன்.
எல்லாம் முடிந்த பின்னர்.
தனிமையாகத் தான் இருக்கிறேன்
என உறுதி செய்துக் கொண்டு.
.