7/14/10

கருணாநிதியின் கடிதம் எழுதும் கடிதம்...


திமுக தலைவரும் ,தமிழக முதல்வருமான கருணாநிதிக்கு கடிதங்கள் எழுதுவதுதான் அவருடைய உச்சக்கட்ட கடமையாக கருதுகிறார். ஈழத் தமிழர் கொன்று குவிக்கப்பட்ட பொழுதுகளிலும் கடிதம் எழுதினார். காவேரி , முல்லையாறு பிரச்சனைகளிலும் கடிதம் எழுதினார். எதற்கெடுத்தாலும் கடிதம் எழுதுவதையும், பதில் கடிதம் பெறுவதையுமே தீர்வாக நினைக்கும் கருணாநிதி இண்டர்நெட் , செல் போன், வீடியோ கான்பிரஸ்சிங் , என தகவல் தொழிற்நுட்பம் வளர்ந்து விட்ட காலத்திலும் பிடிவாதமாக கடிதம் எழுத குந்த வைத்து உட்காருவது மாபெரும் அதியசமே…

கருணாநிதியின் கடிதம் ஒன்று கருணாநிதியின் இந்த அழிச்சாட்டியம்(?) தாங்க இயலாமல் கருணாநிதிக்கே கடிதம் எழுதினால் எப்படி இருக்கும் என்ற நகைச்சுவை( புரிகிறது ..சீரியசான) கற்பனை இது.

மதிப்பிற்குரிய கருணாநிதி அவர்களுக்கு..

உங்களை மதிப்பிற்குரிய கருணாநிதி என்று அழைத்ததற்கு காரணம் இந்த உலகில்..அறிவியல் தொழிற் நுட்பம் வளர்ந்த இக் காலக்கட்டத்தில் என்னையும் ஒரு பொருட்டாக மதித்து ..யாருக்கும் எவ்வித உபயோகமில்லாமல்.. கதை கதையாய் …பக்கம் பக்கமாய் எழுதி குவிக்கும் தாங்கள் என்னைப் பொறுத்த வரை மதிப்பிற்குரியவர்தான்.

முன்பொரு காலத்தில் எனக்கும் ஒரு பொற்காலம் இருந்தது. 50 ,60 வருடங்களுக்கு முன்பெல்லாம் அனைவருக்கும் நான் தான் மிகப் பெரிய தகவல் தொழில் நுட்ப கருவி. என் வருகைக்காக ஊரே காத்திருக்கும். என்னை தபால்காரர் கொண்டு வருகையில் ஆசை ஆசையாய் வாங்கி துள்ளிக் குதித்தவர்களை நான் கண்டிருக்கிறேன். மகனின் கடிதத்தினை பார்த்த அழுத தாயை பார்த்திருக்கிறேன். காதலனின் கடிதத்தினை ரகசியமாக வாங்கி முத்தமிட்ட காதலியின் உதடுகளை பார்த்திருக்கிறேன். காதல் கோட்டை என்று என்னை வைத்து படமே வந்தது. ம்ம்ம். அதெல்லாம் ஒரு காலம் . அதற்கு பிறகு தொலைபேசி வந்தது. அப்போது என் மரியாதை சற்றே தளர்ந்தாலும் முற்றிலுமாக குறையவில்லை. இக்காலத்தில் செல்போன் என்ற ஒரு கருவி வந்திருக்கிறது. அவன் தான் என் வில்லன் . செல்போன் வந்த பிறகு செல்லாக்காசு ஆகிப் போனேன் நான். அப்படிப்பட்ட வலிமையான அந்த வில்லனையே தோற்கடித்தவர் தாங்கள். தினந்தோறும் மூட்டை மூட்டையாய் முரசொலியில் கடிதம் எழுதுகிறீர்கள். பிறகு தலைமை செயலகத்தில் அமர்ந்து வழுக்கியும்..வழுக்காமலும்.. நாசுக்காய் நாலு பைசாவிற்கு கூட மத்திய அரசு மதிக்காமல் இருக்கும் அளவிற்கு கடிதம் எழுதுகிறீர்கள் . யாராவது ஒரு பிரச்சனையை சுட்டிக் காட்டி என்ன செய்தீர்கள் என கேட்டால் அதற்கும் தேதி வாரியாக ,மணி வாரியாக (இந்த புள்ளி விபரக் கணக்கில் உங்களை அடித்துக் கொள்ள ஆளே இல்லை) கடிதத்தினை ஆதாரமாக காட்டி ஒரு கடிதம் என என் பயன்பாட்டினை அதிகரித்துக் கொண்டே செல்கிறீர்கள். உதாரணத்திற்கு ஈழத் தமிழன் அழிக்கப்பட்ட போது நீங்கள் மத்திய அரசுக்கு எழுதி குவித்த கடிதங்கள் டெல்லி மத்திய அரசின் அலுவலகங்களில் மலை போல குவிந்து இருப்பதாகவும்..அதில் பல கடிதங்கள் பிரித்துக் கூட பார்க்கப்படாமல் பாதுக்காக்கப்படுவதாகவும் சொல்கிறார்கள். எனக்கு தெரிந்து இவ்வளவு கடிதங்களை எழுதிக் குவித்திருப்பது தாங்கள் தான். நீங்கள் இக் காரணத்தினை கூறி கின்னஸ் சாதனைக்கு ஒரு கடிதம் எழுதலாம். ஒரு வேளை தப்பித் தவறி இந்த காரணத்திற்காக கின்னஸ் விருது கொடுக்கப்பட்டால் …அடி தூள்…அதை வைத்து கடிதம் எழுதும் காவியத்தலைவனுக்கு கின்னஸ் என அருமை அமைச்சர் ஜெகத்ரட்சகன் ஒரு விழா எடுப்பார். அதில் வரும் கவியரங்கில் வைரமுத்து ,வாலி , பா.விஜய் போன்ற கலைஞர் அரங்க கவிஞர்களை “கடிதம் எழுதும் கலங்கரை விளக்கமே..உன் கடிதம் தான் சங்கத் தமிழின் விளக்கமே..உன் கடிதத்தினை கண்டால் அனைவருக்கும் நடுக்கமே..உன் கடிதங்களும் எதிர் காலத்தில் ஒரு புத்தகமாக மாறி உயிரை எடுக்குமே” என பாடச் சொல்லி முதல் வரிசையில் ரஜினிக்கும் கமலுக்கும் (வலுக் கட்டாயமாக ராமநாரயணனை வைத்து தூக்கி வந்து) நடுவில் அமர்ந்து ரசிக்கலாம். நினைக்கும் போது எனக்கே தலைச் சுற்றுகிறது.

என்னை நீங்களும் சில சமயங்களில் புறக்கணித்து இருக்கிறீர்கள் .டெல்லிக்கு போய் உங்கள் குடும்பத்தினருக்கு பதவி கேட்கும் போதும், எம்.பி சீட் பேரம் பேச டெல்லிக்கு போகும் போதும்..நீங்கள் கடிதங்கள் எழுதுவதில்லை. ஈழத்தமிழன் செத்தால் கூட கடிதம் எழுதி கண்ணியம் காக்கும் நீங்கள் பதவி என்ற ஒன்றுக்காக மட்டும் தான் என்னை மதிக்காமல் விமானம் ஏறி நேரே போய்விடுகிறீர்கள். அப்போதும் தாங்கள் கடிதம் எழுதி இருந்தால் …இன்னும் நான் உங்களை கொண்டாடி இருப்பேன். அப்போது மட்டும் டெல்லிக்கு ஒரு நாளைக்கு மூன்று வேளை மாத்திரை மருந்துக் கணக்காய் தாங்கள் அனுப்பும் கடிதங்களின் உண்மை நிலை தங்களுக்கும் உறைத்து..பதவி போன்ற “உயிர் வாழும் மிக முக்கிய பிரச்சனைக்காக” நேரில் போவதே சாலச் சிறந்தது என சரியாக புரிந்துக் கொண்டு போய் விடுகிறீர்கள்.

இதெல்லாம் கூட பரவாயில்லை. என் மதிப்பினை நான் உணர்ந்து என் காலரை நானே தூக்கி விட்டுக் கொண்ட காலமும் உண்டு. சமீபத்தில் கொலை, கொள்ளை,கடத்தல் போன்ற மாபெரும் குற்ற வழக்குகளில் சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தால் தேடப்படும் குற்றவாளியாக இருந்த டக்ளஸ் தேவானந்தா இந்தியாவிற்கு வந்த போது ..உங்கள் தலைமையின் கீழான தமிழக காவல் துறை டெல்லி காவல் துறைக்கு எழுதிய கடிதம் வரலாற்று சிறப்பு வாய்ந்தது. நீதிமன்றங்களுக்கு கூட குற்றவாளிகளை அழைத்து வருவது சிரமம் என யோசிக்கும் காவல்துறை நீதிபதி அறையில் வீடியோ கான்பிரன்ஸிங் முறை மூலம் வழக்கு நடத்துகையில் .. ஒரு குற்றவாளியினை பிடிப்பதற்கு ..நாடெங்கும் பேசினால் 50 பைசா என்ற நல்ல திட்டத்தினை கொண்டு வந்த கழக அரசின் காவல் துறை தொலைபேசி ,தந்தி, இணையம், செல் போன் என்ற எதையும் தூக்கி எறிந்து விட்டு எழுதினார்களே ஒர் கடிதம் …அது கடிதம் அல்ல…காலம் காலமாய் போற்றி காக்க வேண்டிய காவியம். டெல்லிக்கு வந்த கொலைக்காரன் டக்ளஸ் தேவானந்தாவினை பிடிக்க கடிதம் எழுதிய காவல் துறை ..இதோ மீனவன் செத்ததற்காக கதறும் சீமானைப் பிடிக்க மட்டும் தனிப்படைகள் வைப்பதுதான் எனக்கு புரியவில்லை.

டெல்லிக்கு அனுப்பும் கடிதங்களை எந்த தபால் பெட்டி மூலம் அனுப்புகிறீர்கள் என்று தயவு செய்து யாரிடமும் சொல்லி விடாதீர்கள். அந்த தபால் பெட்டியை உணர்வுள்ள எவனாவது தூக்கிக் கொண்டு கடலில் போட்டு விடப் போகிறான். அஞ்சல் துறையை அழிவில்லாமல் வாழ வைக்கும் உங்கள் அருமை இங்குள்ள எவனுக்காவது புரிகிறதா .. ( அய்யய்யோ.. இதை ஜெகத்ரட்சகன் படித்து விட்டு அஞ்சல் துறையை வாழ வைக்கும் அருமை தலைவருக்கு விழா எடுத்தால்..மேற்கண்ட விபரீத விளையாட்டிற்கு யார் பொறுப்பேற்பது..? )

என்னவோ சாட்டிலைட்டு ன்னு சொல்றான் ..இண்டர்நெட்டுன்னு சொல்றான். ஆனால் நீங்க மட்டும் தான் இன்னும் பேட்டரி லைட்டு காலத்துலயே இருந்துகிட்டு கடிதம் எழுதிகிட்டு இருக்கீங்க. நாட்டுல குப்பன்., சுப்பன்,கோவிந்தன் எல்லாம் எவனும் கடிதம் எழுதறது இல்ல. எஸ் எம் எஸ் அனுப்பிகிட்டும், வாய்ஸ்மெயில்ல பேசிகிட்டு இருக்கான். பொங்கல் வாழ்த்துக்கூட அனுப்பாம ஹேப்பி பொங்கல்ன்னு காப்பியை குடிச்சிகிட்டே கதை பேசுறான். பல ஊர்ல போஸ்ட் ஆபிஸ்ல காக்கா குருவி கூட கழியறத்துக்கு கூட வர்றதுல்ல.. மணி ஆர்டர் மணி டிரான்ஸ்பரா ஆயிட்டிச்சி.

ஆனா இந்த காலக் கட்டதிலும் நாய் கூட மதிக்காத எங்களை தாங்கள் மட்டும் மதித்து வருகிறீர்களே.. அதுதான் நெஞ்ச உருக்கி பஞ்சா அடிக்குது.. டெல்லிகார மன்மோகன் சிங் நீங்க எந்த கடிதம் அனுப்பினாலும் ..எப்ப அனுப்பினாலும் நடவடிக்கை எடுக்க பரீசிலிக்க ,ஆய்வு செய்து ஆலோசனை செய்ய அடுத்த மாதம் தயாராவோம் என்ற தரமான ஒரே பதிலை நாளொன்றுக்கு 100 ஜெராக்ஸ் காப்பி வீதம் போட்டு தயாரா இருக்கார்.

அப்பவும் நீங்க விட்டீங்களா.. ஒரே கடிதம் ஒராயிரம் முறை பதிலா வந்தாலும்.. மறு நாள் காலை தினந்தந்தி பேப்பர்ல புது நியூஸ் போல போட்டுவுட்டுவீங்கல்ல.. அதான் சூப்பர் .

விடுங்க தலைவா..பேசறவன் பேசட்டும். தூத்தறவன் தூத்தட்டும். அவனுக்கும் நீங்க ஒரு கடிதம் எழுதி அவனையும் கலங்கடியுங்க. அந்த கடிதத்திற்கு பிறகு நடுத்தெருவுல நின்னு நாண்டுகிட்டு சாவாமல் அவன் உயிரோடு இருப்பான்னு நினைக்கிறீங்களா..?

இப்படிக்கு.

கருணாநிதியின் கடிதம்

7/13/10

சிவப்பில் சிலிர்க்கும் கடல்..


உதிரம் உதிர கரிப்பினில் கடல் நீர்.

நீலத்தில் உறைந்த கடல் ரத்தத்தில் சிலிர்க்கிறது.

அனாதையாய் கிடக்கும் மீன் வலைக்குள்

மீன்கள் சுற்றி திரிகின்றன..

நடுங்கும் கடலில் நகராமல் நிற்கிற படகில்

கனவோடு திறந்த கண்கள்.

கழுகின் வெறித்த பார்வைக்குள் சிக்குகிறது

உடலம் மிதக்கும் படகின் நுனி.

உறக்கத்தின் ஒரு புள்ளியில்

திடுக்கிட்டு வெளுக்கிறது வானம்.

வீறீட்ட வானத்தில் சிவப்பாய்

பரவுகிறது தமிழனின் ரத்தம்.

குடிசைக்குள் குழந்தை அழுகிறது

உணராத சோகத்தின் அறியாத பசியாய்.

வரப் போகும் அரிசிக்காக

தணலாய் காத்திருக்கும் அடுப்பில்

விழுந்து ஓலமிடும் கண்ணீர்.

சால்வைகள் ரூபாய் தாள்களோடு

விலை பேசுகின்றன விலையில்லாதவற்றை.

காவல்காரர்கள் காத்துக் கொண்டு

இருக்கிறார்கள் வேலி தாண்டி

விழுங்கும் சிம்மத்தினை..

கணக்கற்ற கனத்தினால்

கடல் பொங்கிறது

சில சமயங்களில் சுனாமியாய்..

(தமிழக மீனவர் செல்லப்பன் சிங்கள ராணுவத்தினரால் கொல்லப்பட்டார்)

மைக்கேல் ஜாக்சன் – காற்றில் உலவும் பேரிசை



பன்முகத் தன்மை கொண்ட பல வகை நாட்டுப் புற இசை வடிவங்களையும் ,பறை போன்ற உணர்வினை உசுப்பி உள்ளுக்குள் எழுப்பிற இசைக் கருவிகளையும் தன் பண்பாட்டு விழுமியங்கள் மூலமாகவே அடைந்த தமிழர்களுக்கு மைக்கேல் ஜாக்சன் போன்ற மேனாட்டு இசை கலைஞர்களின் இசை வடிவங்கள் நெருக்கமில்லாமல் போனது வியப்பேதும் இல்லை. ஆஸ்கர் நாயகன் ஏ. ஆர். ரஹ்மானின் இசை நம்மிடையே உலவினாலும் இன்றளவும் 80 களின் இளையராஜா பாடல்கள் வெற்றிக்கரமாக அனைவராலும் உணர்வு மேலீட்டு கேட்க இயலுகிறது என்றால் அப்பாடல்களில் தொனிக்கும் மண் சார்ந்த நுணுக்கங்கள் தான். மண் சார்ந்த மரபிசையின் நுணுக்கங்களும்,திரை இசை வடிவங்களுக்கே உரிய உணர்வு உந்துதல்களும் நிரம்பிய இளையராஜாவின் இசை என்றென்றும் நம் மண்ணுக்குரியது. எனவே தன் மண் சார்ந்து வாழும் வாழ்க்கையைப் பெற்ற தமிழர்கள் பிற இசை வடிவங்களை விரும்புவதில் அதீத தன்னியல்பு காரணமாக விருப்பமற்று இருக்கிறார்கள். நானும் அப்படித்தான். மைக்கேல் ஜாக்சன் போன்ற ஒரு இசை கலைஞனை என்னைப் போன்ற எளிய தமிழன் நெருங்கையில் இனம் புரியாத அச்சத்துடன் நகர நேர்ந்தது.

ஜாக்சனின் வேக வேகமான நடனங்களும்., என்னிடத்தில் இருக்கும் சொற்ப ஆங்கில அறிவிற்கு எட்டாத வாக்கியங்களும் நொடிக்கு நொடி என்னை விரைவாக கடந்து போகையில் உண்மையில் நான் சற்றே அயர்ந்துப் போனேன். என்னைப் பொறுத்த வரையில் நான் இசை கேட்கும் ஒவ்வொரு முறையும் மழைக்கால மாலை ஒன்றில் ஜன்னலுக்கு அருகே அமர்ந்துக் கொண்டு ஒரு சுவையான தேநீர் அருந்துவதற்கு இணையான ஒரு அனுபவமாக அடைய விரும்புவேன். இசை ,இலக்கியம் போன்றவற்றில் என்னால் எளிதில் கடந்துப் போக இயலும் எதையையும் நான் அணுக விரும்புவதில்லை. அவ்வாறாகவே ஜாக்சனின் இசையும் அவரது மொழியும் எனக்கு சவாலாக இருந்தன.

மைக்கேலின் இசையை நெருங்க வேண்டுமானால் முதலில் நாம் மைக்கேலினை நெருங்க வேண்டும். பளபளப்பு மேடையில் லட்சக் கணக்கான வெறித்தன ரசிகர்களுக்கு மத்தியில் சுழன்று சுழன்று ஆடி குதித்து அசத்தும் மைக்கேலின் தனிப்பட்ட வாழ்க்கை மிகவும் சோகமயமானது. தன் வாழ்நாள் முழுக்க மிகுந்த மன அழுத்தங்களுக்கு இடையே தான் அற்புதமான இசை வடிவங்களை மைக்கேல் வெளிப்படுத்திக் கொண்டே இருந்தார். நான் முதலில் நெருங்கியது மைக்கேலின் த்ரில்லர் ஆல்பத்தில் உள்ள பீட் இட் ( beat it) என்ற பாடலைதான் . 1984 ஆம் வருடத்தில் ஏகப்பட்ட கிராமி விருதுகளைப் பெற்ற இந்த ஆல்பம் தான் மைக்கேலினை உச்சத்திற்கு கொண்டு சென்றது. இப்பாடலின் பரபரப்பான இசை மட்டுமே நான் மைக்கேலினை நெருங்குவதற்கு போதுமானதாக இருந்தது. இருந்தும் இன்னும் மொழி புரிந்து, வரிக்கு வரி தெரிந்து இசையை கேட்டால் இன்னும் சிறப்பானதாக இருக்கும் என நம்பினேன். மைக்கேல் ஜாக்சனின் டேஞ்சரஸ் தொகுப்பு 1991 ஆம் வருடம் ஆடீயோ கேசட்டுகளாக வெளிவந்த போது அதன் அட்டையில் அந்த தொகுப்பின் பாடல் வரிகள் இருந்தன. பிறகு பல்வேறு சந்தர்ப்பங்களில் இன்னும் பிற பாடல்களின் வரிகள் கிடைத்தன. ஜாக்சனின் பாடல் வரிகள் அசாத்தியமானவை.

“They Told Him Don't You Ever Come Around Here


Don't Wanna See Your Face, You Better Disappear


The Fire's In Their Eyes And Their Words Are Really Clear


So Beat It, Just Beat It

எனத் துவங்கும் பாடலை மைக்கேல் இந்த வரியைத்தான் பாடுகிறார் என்பதை நான் பாடல் வரிகளினை கைகளில் வைத்துக் கொண்டு கேட்டப் பிறகே புரிந்தது. இத்தனைக்கும் திரில்லர் அவரது 6 ஆவது ஆல்பம் தான். 1958 ஆம் வருடம் ஆகஸ்ட் மாதம் 29 ஆம் தேதி மைக்கேல் பிறந்தார். தன்னுடைய 11 ஆவது வயதில் தன் சகோதரர்களோடு ஜாக்சன் 5 என்ற நிகழ்ச்சிகளில் கலந்துக் கொண்ட மைக்கேல் ஜாக்சன் தந்தையின் கொடுமைக்கு உள்ளான குழந்தையாக வளர்ந்தார். மைக்கேலின் முகத்தினை மிக மோசமாக திட்டிய அவரது தந்தையின் நடவடிக்கைகளால் அவரது பால்யம் பறி போனது.

சிறு வயதில் ஏற்பட்ட உளவியல் அழுத்தங்கள் காரணமாக தன் முகத்தினை மாற்றிக் கொள்ள அறிவியலின் துணை நாடி முயன்றுக் கொண்டே இருந்தார் மைக்கேல். 1971 ஆம் ஆண்டு முதல் தனி நிகழ்ச்சிகள் நடத்திய மைக்கேல் தன் தனிப்பட்ட வாழ்க்கையில் பல விதமான குற்றச்சாட்டுகளுக்கும், சர்ச்சைகளுக்கும் ஆளாகி நீதிமன்றங்களுக்கு அலையும் நிலைக்கு உள்ளானார். குழந்தைகளிடம் பாலியல் உறவு போன்ற மிக மோசமாக குற்றசாட்டுகளுக்குள் அவர் சிக்கியும் அவரது இசை தனித்துவமானதாக நின்றது.

மைக்கேலின் இசை வடிவங்களை நம் ஊர் ஆட்கள் வரை ஏராளமனோர் நகலெடுத்து இருக்கின்றனர். பிரபுதேவா, லாரன்ஸ் போன்றோர் அவர் போல ஆடவும் முயன்று வருகின்றனர். தற்காலத்து மேற்கத்திய நடன கலைஞர்களில் மைக்கேலின் பாதிப்பு இல்லாதவர்கள் மிக குறைவு. தன்னுடைய கருத்த உடல் குறித்து மைக்கேல் மிகவும் குற்ற உணர்வு கொண்டிருந்ததாகவும் அதன் காரணமாகவே நிறம் மாற்ற பிளாஸ்டிக் அறுவை சிகிச்சைகள் நிறைய செய்து கொண்டதாகவும் தகவல்கள் வெளியாயின. இது குறித்து மைக்கேலிடம் கேட்ட போது தன்னுடைய இயல்பு மாறுவதற்கு காரணம் ஒரு வகை தோல் வியாதிதான் என விளக்கம் அளித்தார். அவரது மகனுக்கும் அவரைப் போன்ற வியாதி என்றெல்லாம் செய்திகள் வருகின்றன.

மைக்கேலின் ஆல்பங்கள் 75 கோடிகளுக்கும் மேலாக விற்று தீர்ந்திருக்கின்றன. இன்றளவும் விற்றுக் கொண்டிருக்கின்றன. இசை உலகின் மிக உயரிய விருதான கிராமி விருதினை 13 முறை வென்று பாப் உலகின் மன்னன் என்றெல்லாம் பட்டம் பெற்று ,ஒரு இசைக் கலைஞன் அடைய முடியாத சிகரங்களை தொட்டிருக்கிறார் மைக்கேல்.எம்.டிவி என்பதன் முழு வடிவம் மியூசிக் டிவி என்றாலும் அது மைக்கேல் ஜாக்சன் டிவியாக செயல்பட்ட காலங்களில் ஒவ்வொரு வீட்டின் வரவேற்பறைக்குள்ளும் மைக்கேல் சென்றடைந்து புகழடைந்தார்.

எனக்கு மைக்கேலின் இசை வடிவங்களில் beat it ( thriller), smooth criminal (bad),Jam (dangerous),heal the world( dangerous) , they don’t care about us ( history), black or white (dangerous) போன்ற பாடல்கள் மிக விருப்பமானவை.

தன் இசை இழைகளின் அனைத்துப் புள்ளிகளும் ஒர்மைப்பட்டு அது ஆகச் சிறந்ததாக விளங்க மைக்கேல் மிகவும் எடுத்துக் கொள்வார். அவரது இசை வடிவங்களைப் போலவே அவரது இசை சார்ந்த ஆல்பங்களும் உயரிய சிறப்பு தொழிற்நுட்ப நுணுக்கங்கள் வாய்ந்தவை. மைக்கேலின் பல பாடல்களை தமிழ் திரைப்படக்காரர்கள் நகலெடுத்திருக்கிறார்கள். they don’t care about us என்ற பாடலினை பாய்ஸ் திரைப்படத்தில் சங்கரும் , Remember The Time என்ற பாடலினை இந்தியன் திரைப்படத்திலும் ,சின்னக் கண்ணம்மா திரைப்படத்திலும் அப்பட்டமாக பயன்படுத்தி இருக்கிறார்கள். இன்னும் பல திரைப்படங்களில் மைக்கேலின் நுணுக்கமான கலை வடிவங்களை நகலெடுத்திருப்பதை நாம் நன்கு அறியலாம்.

மைக்கேலின் இசை பாப் உலகில் புதிய ஒளியினை பாய்ச்சியது. அவரது இசை உலகப் பொது இசையாக மாற்றப்பட்டு விட்டது. இருந்தாலும் தனிப்பட்ட வாழ்க்கையிலும், பொது வாழ்க்கையிலும் உலகின் அனைத்து விதமான ஒடுக்குமுறைகளுக்கும் உள்ளான ஒரு மனிதனின் மனநிலையினை அவை உரத்துக் கூறுகின்றன.நிம்மதியற்ற ஒரு மனிதனின் உள்ளார்ந்த அழுகையின் சப்தம் மைக்கேலின் இசையில் சதா ஒலித்துக் கொண்டே இருக்கிறது.

நாம் மிகவும் அறிந்த ஒரு மனிதன் இசையாய் வாழ்ந்து பல வித கனவுகளோடு முடிவுற்றிருக்கிறான். மைக்கேல் இறக்கும் தருவாயில் அவரிடம் அடுத்த இசை பயணங்களுக்கான கனவுகளும், முன்னேற்பாடுகளும் இருந்தன. நிறைவேறாத ஆசைகளோடு மைக்கேலின் குரல் காற்றில் உலவும் பேரிசையாக விளங்குகிறது. ஒரு ஒடுக்கப்பட்ட கருப்பின கலைஞன் என்ற முறைமையில் மைக்கேல் நம் மனதிற்கு நெருக்கமானவனாக என்றும் இருப்பான். மைக்கேல் நம் மனதிற்கு நெருக்கமானவனாக என்றும் இருப்பான்.

மண்ட்டோ படைப்புகள் - உண்மையின் கோர முகம்.


“ என் கதைகளை உங்களால் தாங்கிக் கொள்ள முடியவில்லை என்றால் நம்முடைய காலத்தினை தாங்கிக் கொள்ள முடியவில்லை என்றே அர்த்தம்.என் கதைகளில் தவறு என்று சொல்லப்படுவன எல்லாம் உண்மையில் அழுகிப் போன இந்த சமூக அமைப்பைத்தான் குறிக்கிறது”

-சாதத் ஹசன் மண்ட்டோ.

மண்ட்டோ என்ற இப் பெயரினை நான் முதன் முதலாக கேள்விப்பட்ட இடம் இன்னமும் எனக்கு நினைவில் இருக்கிறது. எழுத்தாளரும், என் நண்பருமான அம்மாசத்திரம் சரவணன் திருமண நிகழ்வின் போதுதான் இப்பெயரினை நான் முதலில் கேட்டேன் . திருமணத்தின் முதல் நாளின் மாலையில் சரவணன் தனது சிறுகதை தொகுப்பினை வெளியிடும் நிகழ்வினை வைத்திருந்தார். சரவணன் தமிழ்நாட்டின் நவீன எழுத்தாளர்களின் நெருங்கிய நண்பராக இருப்பவர். அதனால் அவரின் திருமண நிகழ்விற்கு தமிழ்நாட்டின் பெரும்பாலான நவீன எழுத்தாளர்கள் வந்திருந்தார்கள் . அந்த நிகழ்வில் கலந்துக் கொள்ள எஸ் .ராமகிருஷ்ணன், அ.மார்கஸ், கோணங்கி, பொதியவெற்பன் போன்ற பல எழுத்தாளர்கள் வந்திருந்தனர். மாலையில் நடந்த அந்த சிறுகதை தொகுப்பு வெளியீட்டு நிகழ்வில் அ.மார்க்ஸ் இனி தமிழக எழுத்தாளர்கள் மண்ட்டோவினை பின்பற்ற வேண்டும் எனவும்,புதுமைப்பித்தனையே பிடித்து தொழுது கொண்டிருக்க கூடாது, திருமணம் போன்ற நிறுவனங்கள் தகர்க்கப்பட வேண்டும் எனவும், அப்பா, அம்மா, மனைவி போன்ற குடும்ப உறவுகளில் எவ்வித புனிதமும் இல்லை எனவும் வயதான பெற்றோரை கவனிக்க வேண்டிய அவசியம் இளைஞர்களுக்கான விருப்பம் எனவும் பேசினார்.திருமணத்திற்கு வந்திருந்த பெண்கள் இதையெல்லாம் கேட்டு நெளிந்துக் கொண்டிருந்தனர். புதுமைப்பித்தனின் வெறியரான பொதிய வெற்பனுக்கு இது தாங்கவில்லை. துள்ளி துடிக்க எழுந்து பதில் சொல்ல முயன்றார். ஆனால் அ.மாவிற்கு முன்பே பேசியிருந்த பொதியினால் மீண்டும் ஒரு முறை பேச வாய்ப்பில்லை. அடுத்ததாக பேச வந்தவர் எஸ்.ராமகிருஷ்ணன்.

எஸ்.ராமகிருஷ்ணன் ஆகச்சிறந்த பேச்சாளரில்லை. ஆனால் நாம் அறிந்திராத தகவல்களையும்,சுவாரசியங்களையும் கலந்து அடித்து பிரித்து மேய்வதில் வல்லவர். ஒரு அவையை எப்படி தன்னகப்படுத்துவது என்ற வித்தை புரிந்தவர் எஸ்.ரா. அதனால் மிக எளிதாக குடும்ப உறவுகளின் மேன்மையை பற்றி பேசி பெண்களிடம் கைத் தட்டல் அள்ளிக் கொண்டு போனார் எஸ்.ரா.பிறகு மண்ட்டோவினையும்..புதுமைப்பித்தனையும் ஒப்பிட்டு அவர் பேசினார். புதுமைப்பித்தனின் வாழ்வியலும், சமூகச் சூழலும் நமக்கு நெருக்கமானவை என்றும் மண்ட்டோ போல எதனையும் சிதைக்க நம் பண்பாட்டு விழுமியங்களில் இடமில்லை எனவும், நம் உறவுகளில் நிலவும் சகிப்பும், பகிர்வுமே நம்மை நிம்மதியாக வாழ வைக்கிறது எனவும் பேசி அந்த அரங்கினில் புதுமைப்பித்தனை உச்சியில் வைத்து பொதியவெற்பனை துள்ளிக் குதிக்க வைத்தார் எஸ்.ரா.

விழா முடிந்து எஸ்.ராவுடன் நான் காரில் வருகையில் மண்ட்டோ அந்தளவு நமக்கு அந்நியப்பட்டவரா என்று கேட்டேன். அதற்கு மண்ட்டோவினை படியுங்கள் . அதனை வெறுப்பதும், நேசிப்பதும் அவரவர் விருப்பம். ஆனால் மண்ட்டோவினை படிக்காமல் இருக்காதீர்கள் என்றார்.

அந்த நாளில் தான் மண்ட்டோ என்னுள் நுழைந்தார். நான் ஒரு முறை திருமணத்திற்காக கோவைக்கு சென்ற போது சென்னையில் இருந்து வரும் என் நண்பன் ஒட்டக்கூத்தனை மண்ட்டோ படைப்புகள் நூலினை வாங்கி வரச்சொல்லியிருந்தேன். நான் வருவதற்கு முதல் நாள் வந்திருந்த அவனிடம் மண்ட்டோ படைப்புகள் இருந்ததை எழுத்தாளர் பாமரன் பார்த்து விட்டார். அந்த புத்தகமும் எனக்கு கிடைக்காமல் போயிற்று. கடைசியாக சென்ற வருடம் சென்னை புத்தக கண்காட்சியில் மண்ட்டோ படைப்புகள் எனது வசமானது.

மண்ட்டோ என்ற சாதத் ஹசன் மண்ட்டோ 1912 –ல் லூதியானாவில் இருக்கும் சம்ப்ராலாவில் பிறந்தார். இந்திய –பாகிஸ்தான் பிரிவினையில் மண்ட்டோ பாகிஸ்தானை தேர்ந்தெடுத்தார். தனது 43 ஆம் வயதில் 1955-ல் லாகூரில் காலமானார். மண்ட்டோவின் படைப்புகள் பெரும்பாலும் பிரிவினைத் துயரங்களை பேசுகின்றன. மேலும் விளிம்பு நிலை மக்கள்,விலை மாதர்கள் தான் அவரது கதைகளின் கதை மாந்தர்கள். ஓவ்வொரு படைப்பும் அதிர்ச்சிகளின் வெடிப்பில் முடிந்தது. எளிய வாசகர்கள் மண்ட்டோவினை அணுக அஞ்சுவதும் இதனால் தான். தான் வாழும் காலத்தில் தன் படைப்புகளால் அனைத்து விதமான எதிர்ப்புகளையும் மண்ட்டோ சந்தித்தார். அவரது எழுத்துக்கள் ஆபாசமானவை என்றும், அதிர்ச்சி மதிப்பீடுகளை தருவதற்காகவே புனைவினை மேற்கொள்கிறார் எனவும் விமர்சிக்கப் பட்டன. ஆனால் மண்ட்டோவினை நாம் அவ்வாறெல்லாம் மிக எளிமையாக ஒதுக்கித் தள்ளி கடந்து விட முடியாது. அவரது எழுத்துக்கள் மிகவும் ஆபாசம் என்றால்..அவர் மிக எளிமையாக சொல்கிறார்…ஆம் . உண்மைதான் மிக ஆபாசமானது என்று. இதுதான் மண்ட்டோ.

சிக்கனமான சொற்களின் ஊடாகவே ஒரு படைப்பிற்கான அனைத்து வழிகளையும் திறந்து வைத்தவர் மண்ட்டோ.மண்ட்டோவின் எழுத்துக்கள் உண்மைக்கு அருகில் நிற்பவை அல்ல. மாறாக உண்மையாகவே நிற்பவை. இதுதான் பிற்போக்குவாதிகளுக்கும், ஆட்சியாளர்களுக்கும் பிரச்சனையாக இருந்தது. மண்ட்டோ தனது எழுத்துக்களால் பல விதமான சர்ச்சைகளை எதிர் கொண்டார். சமூகத்தின் உயரிய சின்னமான மதத்தினை அவர் தன் எழுத்துக்கள் ஊடாக மிகவும் எள்ளலான முறையில் கேள்விக்கு உட்படுத்தியது மதவாதிகளை எரிச்சல் ஊட்டியது.

ஓய்வு நேரம் எனப் பெயரிடப்பட்ட அவரது சொற்றோவியம் ஒன்று.

“ ஏய்..

அவன் இன்னும் சாகவில்லை..

அவனிடம் இன்னும் கொஞ்சம் உயிர் இருக்கிறது”

“என்னால் முடியவில்லை.

எனக்கு அசதியாக இருக்கிறது”

இந்த சொற்றோவியத்தினை ஆழ்ந்து வாசித்துப் பாருங்கள். இந்தியா –பாகிஸ்தான் பிரிவினைக் காலத்திய ரத்த வாடையினை உணர்வீர்கள்.

துணிச்சலான செயல் எனப் பெயரிடப்பட்ட மற்றுமொரு சொற்றோவியம் ஒன்று.\

“ அந்த சுற்று வட்டாரத்தில் எல்லாமே தீ வைக்கப்பட்டு எரிந்துப் போனது. –ஒரே ஒரு கடை தப்பித்தது.

அந்த கடையின் அறிவிப்புப் பலகையில் இவ்வாறு எழுதப்பட்டிருந்தது .

“கட்டிடங்கள் கட்டுவதற்கான எல்லாப் பொருட்களும் இங்கு விற்கப்படும்”

பிரிவினைக் கால கலகப் பூமியை அப்படியே நகலெடுத்து உண்மையாக யாரால் இப்படி எழுத முடியும் என்று யோசித்துப் பார்த்தால் மண்ட்டோ மட்டுமே தேறுகிறார்.

நினைவோடைப் பகுதியில் முகமது அலி ஜின்னாவினைப் பற்றி மண்ட்டோ எழுதியுள்ள பத்தி மிகவும் தனித்துவமானது. ஒரு படைப்பாளன் ஒரு ஆளுமையை அருகிலிருந்து உள்வாங்கி, அதை அப்படியே தன் படைப்பில் உருவாக்கி வாசகர் முன் உயிரூட்டி காட்டுவது என்பது எளிதான ஒன்றல்ல. ஆனால் மண்ட்டோவின் எழுத்துக்கள் மிக எளிதாக அதை சாதித்தன. மேலும் நர்கீஸ் பற்றியும் , நூர்ஜகான் பற்றியும், அசோக்குமார் பற்றியும் மிக நெருக்கமான விவரணைகள் நமக்கு மண்ட்டோவின் எழுத்துக்களில் காணக்கிடைக்கின்றன.

மண்ட்டோவின் எழுத்துக்கள் அடங்காமல் ஒடும் காட்டாறாய் ஒடுகிறது. நாமும் அவற்றினை கடக்க மிகவும் சிரமப் படுகிறோம். நம் பண்பாட்டு வெளிச்சத்தில் இருள் அள்ளி பூச முயலும் மண்ட்டோவின் எழுத்துக்கள் சற்று காத்திரமானவையே. ஆனால் உண்மைக்கு மிக அருகிலானவை என்ற முறைமையில்..ஒரு தேர்ந்த வாசகன் மண்ட்டோவின் ரசிகனாகிறான்.

மண்ட்டோவின் படைப்புகள் ஒரு தொகுதியாக தமிழில் கிடைக்கிறது. 20 க்கும் மேலான கதைகளும், அருமையான சொற்றோவியங்களும், ஆளுமைகள் குறித்த நினைவோடைகளும் , அவரது கடிதங்களும் என தொகுப்பு மிகவும் சிறப்பாக இருக்கிறது. தமிழில் மொழிப் பெயர்த்திருக்கும் ராமாநுஜம் அவர்களுக்கு நன்றிகள்.

( மண்ட்டோ படைப்புகள் : தமிழில் – ராமாநுஜம் – வெளியீடு – புலம்- பக்கங்கள் 615 விலை: ரூ.375/-)