8/3/10

பாக்யராசன் என்ற இனத்தின் நம்பிக்கை...

குடி செய்வல் என்னும் ஒருவருக்கு தெய்வம்

மடிதற்று தான் முந்துறும் -குறள்


என் உயிர் நண்பரும் உலக தமிழர் பேரமைப்பின் இணைச் செயலாளருமான பாக்யராசன் சேதுராமலிங்கம் அவர்களை முதன்முதலில் நான் ஆர்குட் உலகில் ஒரு தமிழுணர்வாளராக அடையாளம் கண்டேன். அன்று முதல் அவர் அப்படியே இருக்கிறார். தன் சொந்த இனம் தன் கண்முன்னால் ஒட்டு மொத்தமாக ஒழிக்கப்பட்ட போது துயருற்ற விழிகளை துடைத்துக் கொண்டு இனி என்ன செய்யலாம் ..எப்படி மீள் எழலாம் என உளமார யோசித்த சிலரில் இவர் மிக முக்கியமானவர். கணினி திரைக்கு முன்னால் அமர்ந்து கொள்கை ,கோட்பாடுகளை முழங்கி விட்டு தனிப்பட்ட தன் வாழ்வில் தடுக்கி விழுந்து கிடப்போர்தான் இந்த இணைய உலகில் அதிகம். ஆனால் பாக்யராசன் கணினி திரையில் தன் எழுத்தாக பதிப்பதை தன் வாழ்க்கையாக களம் அமைத்து போராடி வருபவர். தன் இனத்தின் மேன்மைக்காக சமரசம் இல்லாமல் களமாடும் போராளியாக தன் வாழ்க்கையை அமைத்துக் கொண்டுள்ளார் பாக்யா. அமெரிக்காவில் கணினி பணி, கை நிறைய சம்பளம், சொகுசு வாழ்க்கை என கனவு கண்டு விமானம் ஏறி பறக்கும் இவ்வுலகில் இனம் வீழ்ந்த துயரம் பொறுக்காமல் வீறு கொண்டெழுந்து அல்லும் பகலும் தன் இன எழுச்சிக்காக களமாடி வருகிறார் பாக்யா.கடல் கடந்து வாழ்ந்தாலும் இனம் நினைந்து துடிக்கும் கணினித் தமிழர்களில் பாக்யராசன் ஒரு ஆளுமை. இணைய உலகில் எங்கெல்லாம் தமிழினம் கருத்தால் தாக்கப்படுகிறதோ, அங்கெல்லாம் நாம் பாக்யாவினை வீறு கொண்ட ஒரு வீரனாய் நாம் சந்திக்கலாம். துயருற்ற இந்த இனத்தினை எவ்வாறு இடறலாம் என குறுக்குப்புத்தி கொண்டு குதர்க்கம் பேசுவோரை கண்டு வெகுண்டெழுந்து பாய்ந்து வரும் தன் கருத்தால் கதற அடிக்கும் பாக்யராசனின் நண்பனாக, ரசிகனாக , பின்பற்றும் உறவாக வாழ்வதில் உண்மையில் நான் பெருமைப் படுகிறேன். இன்னும் பாக்யாவினைப் பற்றி விரிவாக எழுதலாம். ஆனால் அவருடைய பணி என் எழுத்துக்களை தாண்டிய பரப்பினை உடையது. விவரிக்க இயலா பரப்பினை உடைய பாக்யராசன் தொடர்ந்த தன் பணிகளால் துவண்டு கிடக்கும் தமிழினத்தினை தோள் கொடுத்து நிமிர்ந்த முயன்று வருகிறார். பாக்யராசனின் குடும்பமே இன நலம் காக்க, தன் நலம் மறந்து போராடி வருகிறது. இன்னும் இந்த இனம் இத்துப் போகவில்லை என பசுமையாய் அடையாளம் காட்ட பாக்யராசன் விரீய விருட்சமாய் விரிந்து வருகிறார். என்னைப் பொறுத்தவரை பாக்யா போன்றோர்தான் இந்த இனத்தின் நசுங்காத நம்பிக்கை. சுயநலம் மிகுந்த இந்த வாழ்வில் இனநலம் காக்க வெள்ளை உள்ளத்தோடு களம் காணும் பாக்யராசன் தமிழ் திரை உலகின் தற்போதைய இன துரோக பாதையை தடுத்து நிறுத்த முயன்று வருகிறார். குமுதம் ரிப்போட்டரின் பதிவு இதோ…. ப்.எம்.எஸ். என்கிற வெளிநாட்டு விநியோக உரிமையில் கிடைக்கும் வியாபாரத்தைத் தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் பெரிதும் நம்பியிருக்கிறார்கள். நடிகர், நடிகைகள் இலங்கை செல்வதால் எழுந்துள்ள பிரச்னையால் உலகத் தமிழ் அமைப்புகளின் தடை,தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் இடையே கலக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது.


கொழும்பில் நடந்த சர்வதேச இந்தியத் திரைப்பட விருது வழங்கும் (IIFA) விழாவுக்கு தமிழ் அமைப்புகளுக்கும்,தமிழ்த் திரைப்படத்துறையினரும் ஒட்டுமொத்தமாக எதிர்ப்புத் தெரிவித்தனர்.

இதையடுத்து, இந்தி நடிகர்கள் அமிதாப் பச்சன், ஷாருக்கான், நடிகைகள் நமீதா,ஜெனிலியா உள்ளிட்டோர் அந்த விழாவைப் புறக்கணித்தனர். இந்நிலையில், நடிகை அசின் சல்மான் கானுடன் ‘ரெடி’ இந்திப் படத்திற்காக கொழும்பு சென்றார். இதற்கு எதிர்ப்புக் கிளம்பியது. இலங்கை செல்லும் நடிகர்-நடிகைகளை யாரும் தடுக்கக் கூடாது என்று தென்னிந்திய நடிகர் சங்கம் அறிவித்தது.நடிகர் சங்கத்தின் இந்த அறிவிப்புக்கு உலகம் முழுவதும் உள்ள தமிழ் அமைப்புகள் எதிர்ப்புத் தெரிவித்ததுடன், இலங்கை சென்ற அசின் மற்றும் தமிழ்த் திரைப்படங்களுக்கு எதிரான நட வடிக்கையில் இறங்கியுள்ளன.

நார்வே ஈழத்தமிழர் அவையின் ஊடகத்துறை பொறுப்பாளர் தமிழ்ச்செல்வனிடம் பேசினோம்.

‘‘திரையுலகினர் தனிப்பட்ட முறையிலோ, தொழில் முறையிலோ மற்றும் வர்த்தக ரீதியாகவோ இலங்கைக்குச் செல்வதை யாரும் தடுக்க முடியாது என்ற நடிகர் சங்கத்தின் தீர்மானத்தால் உலகெங்கும் உள்ள தமிழர்கள் வேதனை அடைந்துள்ளோம்.இலங்கை அரசு போர்க்குற்றத்தில் ஈடுபட்டதற்காகவும் தமிழினப்படுகொலை செய்ததற்காகவும் தண்டனை யைப் பெற்றுக் கொடுக்கும் முயற்சியில் உலகெல்லாம் தமிழர்கள் ஈடுபட்டு வருகிறோம். இந்த நேரத்தில், இலங்கை அரசுக்கு நற்பெயர் பெற்றுத் தரும் முயற்சியில் யார் இறங்கினாலும் தமிழர்களின் பெரும் கோபத்திற்கு ஆளாவார்கள் என்று பணிவுடன் நினைவூட்டுகிறோம்.

மீள்குடியேற்றம்,புனர்வாழ்வு என்ற பெயரில் ஏற்கெனவே இந்திய அரசு உள்பட பல நாட்டு அரசுகளிடம் இலங்கை அரசு பெருமதிப்பிலான பணம் பெற்று வருகிறது. இழந்துவிட்ட நற்பெயரை மீட்பதற்காகவும், சுற்றுலாத் துறை வளர்ச்சிக்காகவும் இந்தியத் திரைப்படத்துறையினரை வஞ்சகமாக தன் வலையில் வீழ்த்த இலங்கை திட்டமிட்டு செயல்படுகிறது. இலங்கை அரசின் சதி முயற்சிக்கு தமிழ்த் திரையுலகம் ஒருபோதும் துணை நின்றுவிடக் கூடாது.அதே நேரத்தில்,தமிழர்களுக்கு எதிராக யார் செயல்பட்டாலும் அவர்களைப் புறக்கணிக்க தமிழர்கள் ஒரு போதும் தயங்கமாட்டார்கள் என்பதையும் நினை வூட்டுகிறோம்.

உலகத் தமிழர்களின் முயற்சிக்குத் துணை நிற்காவிட்டாலும் எதிராகச் செயல்பட வேண்டாம் என்று தமிழ்த் திரையுலகினரை உரிமையுடன் கேட்டுக்கொள்கிறோம்’’ என்றார், தமிழ்ச்செல்வன்.

மலேசியாவின் பினாங்கு அமைப்பின் தலைவர் சதீஸ் முனியாண்டி, தமிழ்த் திரைப்படங்களை மலேசி யாவில் விநியோகிக்கும் பிரமீட் சாய்மீரா குழுமம், லோட்டஸ் குழுமம் ஆகியவற்றுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

இதேபோல் உலகத் தமிழர் அமைப்பு ((WTO),அமெரிக்கத் தமிழர் அரசியலவை (USTPAC),வட அமெரிக்க தமிழ்ச் சங்கங்களின் கூட்டமைப்பு (FetNa) உள்ளிட்ட தமிழ் அமைப்புகளும் தமிழ்த் திரைத்துறையினருக்கு எதிராக அவசர தீர்மானங்கள் நிறைவேற்றியுள்ளன.சில தமிழ் அமைப்புகள் தமிழ்நாட்டிலிருந்து படங்களைத் தவிர்க்க தாங்களே தமிழ்ப்படங்களைத் தயாரிக்கவும் முடிவு செய்துள்ளன.இதுகுறித்த அறிவிப்பை மிக ரகசியமாக வைத்திருக்கும் இவர்கள், படத் தயாரிப்புக்கான ஆரம்ப கட்ட வேலைகளில் இறங்கியுள்ளனர்.

உலகத் தமிழர்அமைப்பு இணைச் செயலாளர் பாக்கியராஜன் சேதுராமலிங்கம் நம்மிடம், ‘‘‘அரபு அல்லாத பழங்குடி கறுப்பின மக்களை படுகொலை செய்த குற்றத்திற்காக சூடான் நாட்டின் அதிபரான ஓமர் அல் பஷீரை சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் இனப்படுகொலைக் குற்றவாளியாக அறிவித் திருக்கிறது. இந் நீதிமன்றத்தில் உறுப்பினராக உள்ள நாடுகள் தங்கள் நாட்டுக்கு அல் பஷீர் வந்தால் அவரைப் பிடித்து நீதிமன்றத்தில் ஒப்படைக்கலாம் என்றும், ஜூலை 12-ம் தேதி நெத்தியடித் தீர்ப்பை வழங்கியுள்ளது.இந்நீதிமன்றம் நெதர்லாந்தின் ஹேக் நகரில் அமைந்துள்ளது.அதேபோல் டப்ளின் மக்கள் தீர்ப்பாயத்தால் போர்க் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டவர்தான் ராஜபக்ஷே. அவருக்கு ஆதரவாக தமிழ்த் திரைப்படத்துறையினர் செயல் பட்டால் அதைப் பார்த்துக்கொண்டு சும்மா இருக்க மாட்டோம்’’ என்று கொதித்தார்.

உலகத் தமிழர்களின் புறக்கணிப்பால் தமிழ்த் திரைப்படங்களுக்கு உண்மையிலேயே பாதிப்பு வருமா என்று,திரைப்படத் தயாரிப்பாளர்கள் சிலரிடம் பேசினோம்.

‘‘பெரிய நடிகர்கள், பெரிய பேனர்கள் படங்களின் வெளிநாட்டு (FMS -ஃபாரின்மலேசியா-சிங்கப்பூர்)உரிமத்தையும்நம்பித்தான் நாங்களிருக்கிறோம். ஆரம்பத்தில் மலேசியா,சிங்கப்பூரில் மட்டுமே தமிழ்ப் படங்கள் திரையிடப்பட்டு வந்தன.இப்போது,உலகம் முழுவதும் தமிழர்கள் பரவியுள்ளதால் அங்கெல்லாம் தமிழ்ப்படங்களுக்கு மிகப்பெரிய மார்க்கெட் உள்ளது. கனடா, நார்வே, அமெரிக்கா, இங்கிலாந்து, மலேசியா, சிங்கப்பூர், இலங்கை, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளுக்கு ஒவ்வொரு படத்திலும் 10 முதல் 20 பிரிண்ட்கள் வரை விற்பனை ஆகிறது. ஒரு பிரிண்ட் குறைந்தபட்சம் 20 முதல் 25 லட்ச ரூபாய் வரை விற்கப்படும். ரஜினி, கமல், அஜித், விஜய், சூர்யா, விக்ரம் உள்ளிட்ட முன்னணி நட்சத்தி ரங்களின் படங்கள் ரிலீஸுக்கு முன்பே வியாபாரமாகிவிடும்.மற்ற படங்களின் வெற்றியைப் பொறுத்து விலை ஏறும் அல்லது இறங்கும்.எனவே, எப்.எம்.எஸ்.உரிமையை நாங்கள் பெரிதும் நம்பியிருக்கிறோம்’’ என்றனர். என் நண்பன் பாக்யராசனின் மின்னஞ்சல் முகவரி packmymails@gmail.com. அவரை வாழ்த்துங்கள். இனம் மீட்க துடியுங்கள்.

7/17/10

நன்றிகளோடு விடைபெறுகிறேன்..



அன்புமிக்க தமிழ் மணம் உறவுகளுக்கும்..அதன் பெருமை வாய்ந்த நிர்வாகிகளுக்கும்..


என்னை இந்த வார நட்சத்திரமாக தேர்வு செய்து பெருமைப்படுத்தியதற்கு நன்றி. என் உணர்வுகளை கடந்த ஒரு வார காலமாக உங்களோடு பகிரும் வாய்ப்பை பெற்றது என் வாழ் நாளின் மிக பெருமைக்குரிய நாட்கள். ஒவ்வொரு நாளும் 500க்கும் மேலான பார்வையாளர்களை என் தளம் பெற்றது. மிகப் பெரிய வெளியில் எனக்கான கருத்துக்களை நான் பரப்புவதற்கான வாய்ப்பினை தமிழ் மணம் எனக்கு ஏற்படுத்தி தந்தது. தமிழ் மணத்தில் என் பதிவுகளை கண்டு நான் தேடிக் கொண்டிருந்த என் பால்ய கால நண்பன் எனக்கு கிடைத்தான். தொடர்பு விட்டிருந்த என் மிக நெருக்கமான என் தோழி ஒருவர் கிடைத்தார். கும்பகோணம் பள்ளி விபத்து பகிர்விற்காக …தமிழ் மணம் உறவுகளுக்காக பிரத்யோகமாக நான் குழந்தைகளின் பெற்றோர்களை பேட்டி எடுத்ததும், அதை தளத்தில் வெளியிட நானே இணையத்தில் தேடி தொழில் நுட்பம் அடைந்ததும் மிக வித்தியாசமான அனுபவங்கள். இந்த வாரத்தில் எம் அண்ணன் சீமான் அவர்கள் கைது செய்யப்பட்ட நிகழ்வு நடந்தது. அடுக்கடுக்கான நெருக்கடிகளாலும், மிகத் தீவிர அரசியல் பணிகளாலும் எனக்கு மிகவும் கால பற்றாக்குறை நிலவியது . இருந்தும் ஏதோ ..எழுதி இருக்கிறேன். என் மின்னஞ்சல்களில் குவிந்த ஆதரவுதான் தமிழ் மணம் எத்தகைய வளர்ச்சியும், பரவலையும் பெற்றிருக்கிறது என்பதை முழுமையாக உணர முடிந்தது.

தமிழ் படித்து, தமிழ் எழுதும் தாங்கள் வீழ்ந்து விட்டிருக்கிற நம் இனத்தின் இன்றைய நிலையில் உங்களுடைய ஆற்றலையும், அறிவினையும் நம்மினம் மீள் எழுவதற்கான பணிகளில் செலவழிக்க அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். எனக்கு மகிழ்வாக, கொண்டாட்டமாக ஒரு பத்தி எழுத ஆசைதான் . ஆனால் எம் இனம் இருக்கும் இன்றைய நிலை என்னை நிம்மதியிழந்த ,அலைகழிப்பிற்கு உள்ளான மனிதனாக , படைப்பாளனாக மாற்றி இருக்கிறது.

கால நதியின் ஏதோ ஒரு தருணத்தில் தமிழர்களாகிய நாமெல்லாம் மகிழ்ந்து கொண்டாடுகின்ற சூழல் வரும் என்ற நம்பிக்கையில் தற்போது நான் விடை பெறுகிறேன். தொடர்ந்து தமிழ் மணத்தின் வாயிலாக உறவினை தொடர்வோம். என்னால் மறுமொழி திரட்டியை பயன்படுத்த தெரியவில்லை. யாராவது உதவினால் நான் மகிழ்வேன்.

அண்ணன் சங்கரபாண்டிக்கு என்றும் அன்புடைய தம்பியாக இருப்பதில் நான் பெருமை அடைகிறேன்.


நாம் தமிழர்.


நன்றி.
தங்கள்


மணி .செந்தில்

நம்பிக்கையுடன் நாம் தமிழராய் விடிவோம்...




நம் நிகழ்காலத்துக்கு முழுமையான சமகாலத்தவராக ஒரு போதும் நாம் இருப்பதில்லை. மாறுவேடத்துடனேயே முன்னேறுகிறது வரலாறு .முந்தைய காட்சியின் முகமூடியை அணிந்த படியே மேடையில் தோன்றுகிறது அது

-புரட்சிக்குள் புரட்சியில் ரெஜி டெப்ரே.

என்றுமே சமூகம் சமநிலையாக இருந்ததில்லை என்பதில் இருந்து நம் சிந்தனையை துவக்குவோம். அரை நூற்றாண்டு காலமாக போராடிய நம் தேசிய இனத்தின் மிக முக்கிய அடையாளமாக கருதப்பட்ட ஈழ சகோதர சகோதரிகள் இன்று மிகப் பெரிய பின்னடைவில் இருக்கிறார்கள். சர்வ உரிமைகளுடன் வாழ ஒரு நாடு என்ற அடிப்படை மனித தேவையை மனித விழுமியங்களை சுரண்டி கொழிக்கும் வல்லாதிக்கம் மிகத் தீவிர எதிர்க்கிறது. வல்லாதிக்கத்தின் இருப்பு எளிய இனங்களின் அழிவின் மேல் கட்டமைக்கப்பட்டு இருக்கிறது. ஈழத்தின் பூர்வ குடி மக்களாகிய தமிழர்கள் ஒரு நாடு அடைய வேண்டியதற்கான அனைத்து அவசியங்களையும் ஒருங்கே பெற்றிருந்தார்கள். அவர்களின் சுதந்திர வேட்கைக்கான புள்ளி சிங்கள பேரினவாதத்தின் மீறல்களில் இருந்து எழுகிறது. உலக மானுட சமூகம் யாரும் சிந்தித்துப் பார்க்க கூட இயலா உச்சியில் அவர்களின் வீரம் செறிந்த சமரும், தியாகமும் இருந்தன. இருந்தும் உலக வல்லாதிக்கங்கள் கூட்டமைவு கொண்டு நடத்திய போரில் நம் சகோதரர்கள் தோற்றார்கள்.

ஒரு தோல்வியை தோல்வியாக உணரும் போது தான் மீள் எழுவதற்கான சாத்தியப்பாடுகளை சிந்திப்பதற்கான மன வலு கிடைக்கும். எனவே நம் தோற்றோம் என்பதை மிக நேர்மையாக ஒப்புக்கொள்வோம். தோற்றோம் என்ற சொல்லில் அவ்வளவாக உண்மையில்லை என்பதனால் இன்னும் உண்மைக்கு நெருக்கமான சொல்லாக இருக்கக் கூடிய தோற்கடிக்கப்பட்டோம் என்பதை ஒப்புக் கொள்வோம். நம் சம காலத்தில் ..நம் கண் முன்னால்.. நாம் அனைத்தையும் இழந்து தோற்கடிக்கப்பட்டோம் என்பதுதான் நம்மால் எளிதில் செரிக்க முடியாத உண்மையாக இருக்கிறது. ஆனால் தோல்விகளையும், பின்னடைவுகளையும் உலக வரலாறு வேறு மாதிரியாக கணிக்கிறது. ஒரு தேசிய இனம் தன் உயரிய இலட்சியமான இறையாண்மை உடைய ஒரு நாடு அடைவதற்கான போராட்டத்தில் பல்வேறு காலக் கட்டங்களை சந்திக்கிறது. பலவிதமான பின்னடைவுகளுடன் கூடிய தியாகங்களுக்கு மத்தியில் அப் போராட்டம் தன்னைத்தானே செழுமைப் படுத்திக் கொண்டு ,புதிய புதிய பாடங்களை கற்றுக் கொண்டு இலக்கு நோக்கி முன்னேறிக் கொண்டே இருக்கிறது.

முதலாளித்துவம் மனித மனங்களில் வரையறுத்து உள்ள எதையும் உடனே துய்க்கிற நுகர்வு மனநிலைதான் எளிய தோல்வியை கூட சந்திக்க இயலா பலவீனத்தினை பரிசாக அளித்திருக்கிறது. சம காலத்து மனிதனுக்கு எதுவும் உடனே வேண்டும் . தமிழனும் இம் மனநிலைக்கு விதி விலக்கானவன் இல்லை. முள்ளிவாய்க்கால் துயர் முடிந்து இன்னும் ஓரு வருட காலத்திற்கு பின்னரும் தமிழினம் தனக்கான பாதையை வகுத்துக் கொள்வதில் தலையாய சிக்கல் என்னவென்றால் தற்காலத்து தமிழன் கொண்டிருக்கிற நுகர்வு மனநிலை தொடர்ச்சியான பயணத்திற்கு தயாராக இல்லை என்பதுதான்.

ஆனால் மீள் எழுந்துதான் ஆக வேண்டும். ஒரு நாட்டினை இன்னொரு இனத்திடம் இருந்து மீட்பதற்கான போராட்டம் அவ்வளவு எளிதானதல்ல. இந்திய பெருந்தேசத்தின் சுதந்திர போராட்டம் இரண்டு நூற்றாண்டுகளாக நடந்து..இரு நாடுகளாக பிரிவதாக குழப்பத்தில் முடிந்தது. கியூபப் புரட்சியை லத்தீன் அமெரிக்காவில் மற்றொரு முறை நிகழ்த்திட இயலாது என்று ஒரு சொற்றொடர் உண்டு. கியூப புரட்சியின் மீது கட்டமைக்கப்பட்டுள்ள அதீத காவியத் தன்மையின் வெளிப்பாடு இது. கியூபப் புரட்சி காலக் கட்டத்தில் இருந்த சமன்பாடுகள் தற்காலத்தில் வெகுவாக மாறி விட்டன என்றாலும் அதன் ஊடாக நாம் கற்க வேண்டிய பாடங்கள் இருக்கின்றன. கியூபப் புரட்சி என்பது 12 பேரில் துவங்கி கணக்கின்றி பெருகி தலைவர் பிடல் ,தளபதி சே குவேரா போன்றோரின் சாகச உத்திகளால் வல்லாதிக்கத்தினை முறியடித்து வெற்றிக்கொடி நாட்டிய கதை என இரண்டு வரிகளில் இனிப்புத் தடவி கூறி விட முடியாது. கியூபப் புரட்சிக்கு தேவையான சூழலும், அகக்காரணிகளும், புறக்காரணிகளும் ஈழப் போராட்டத்திற்கு ஒப்பாகவே இருந்தன. தலைவரும், தளபதிகளும் கியூப புரட்சியாளர்களை தாண்டிய சாகசக் காரர்களாகவும், மிகு ஒழுங்கினை உடையவர்களாக இருந்தார்கள் . இருந்தும் கியூபாவில் புரட்சியாளர்கள் வெற்றியடைந்தனர். நாம் தோற்கடிக்கப்பட்டிருக்கிறோம்.

தோல்விக்கான காரணங்களை மாசற்ற தலைமையின் மீதும் இயக்கத்தின் மீதும் போட்டு விட்டு எதிரியின் வெற்றியில் குளிர்காயும் துரோகிகளின் எழுத்துக்களை நாம் ஏறெடுத்துக் கூட பார்க்க மறுப்போம். நம் தேசியத் தலைவரின் சொல்லும் , வாழ்க்கையும் நமக்கு போதித்தது இதுதான் .எதிரியை விட துரோகி ஆபத்தானவன்.

ஆனால் நமக்குள்ளாக நம் மீள் எழுதலுக்கான சக்தியை பெற நடந்து முடிந்த ஈழப் போரின் வாயிலாக சில பாடங்களை கற்றுக் கொள்ளத்தான் வேண்டும். முதலில் ஈழம் என்பது அந்நிலப்பகுதியில் வசிக்கக் கூடிய தமிழர்களுக்கான நாடு என்பது உண்மை என்றாலும் அது உலகம் முழுக்க வாழக் கூடிய தமிழர்களுக்கான நாடும் அதுதான் என்பதில் நாம் உறுதிக் கொள்ள வேண்டும் . வெறும் நிலப்பகுதியும், புறவியல் காரணிகளும் மட்டுமே ஒரு நாடாக நாம் கருதி விட இயலாது. மாறாக நாடு என்பது ஒரு உணர்ச்சி. ஒரு தேசிய இனத்தின் அடிப்படையான குணம். மனித வரலாறு நாடுகளை அடையும் போராட்டங்களாகத்தான் பகுக்கப்பட்டிருக்கிறது. எனவே ஈழம் என்ற ஒற்றைக் கனவினை சுமக்க உலகில் வாழும் 12 கோடி தமிழர்களின் விழிகளும் தயாராக வேண்டும்.

அடுத்து . நம் தேசியத் தலைவர் மீது நாம் வைத்திருக்ககூடிய விசுவாசம். இன்றளவும் சிங்களன் திகைப்பது இதில் தான். நம் தேசியத் தலைவர் கொல்லப்பட்டார் என்று கூறி ஒரு உடலையும் காண்பித்து விட்ட பிறகு கூட உலகமெங்கும் பரவி வாழக் கூடிய நம் இன மக்கள் அதை நம்பக் கூட மறுத்து ஒற்றை அலைவரிசையில் ஒரே குரலாய் எம் தலைவர் சாக வில்லை என்று உரத்தக் குரலில் முழங்கினோமே…அது தான்.. அந்த விசுவாசம் தான் எதிரி அடைந்திருக்கும் வெற்றியில் கூட அவனை பதட்டமாக வைத்திருக்கிறது. இந்த உலகம் கண்டிராத ஒரு மாபெரும் வீரனை.. உலக இலக்கியங்களின் சாறாய் தொகுத்த நற்பண்புகள் உடையவனை.. தம் மொழியின் மேல் ,தம் இனத்தின் மேல் தன் உயிரைக்காட்டிலும் மதிப்பு உடையவனை நாம் தலைவராக அடைந்திருக்கிறோம். இன்றளவும் பிரபாகரன் என்ற பெயர்தான் உலகம் முழுக்க பரவிக் கிடக்கின்ற தமிழர்களை இணைக்கிற…இயக்குகிற சொல். தொன்மை வாய்ந்த தமிழினத்தின் உயரிய பெருமிதம் நம் தேசியத் தலைவர் அவர்கள் . அவரின் மீதான நம் பற்றையும் ..விசுவாசத்தினையும் நாம் தலைமுறைகளாக கடத்திப் போவோம். வீட்டுக்கு வீடு பிரமாண்டமாய் அவரது புகைப்படங்களை நாம் மாட்டுவோம். நம் பிள்ளைகளுக்கு அவரை நம் அண்ணனாக காட்டுவோம். பிள்ளைகள் அவரை பெரியப்பா என்றே அழைக்கட்டும். நம் தேசியத் தலைவர் இல்லாத தமிழன் வீடு இல்லை என்ற மிகப் பெரிய தோற்றத்தினை உருவாக்குவோம்.. நம் வீட்டு விழாக்களில் அவரையே விழா நாயகனாக முன் நிறுத்துவோம் . திருமண அழைப்பிதழ்களில் தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்களின் வாழ்த்துகளோடு என்று அச்சிடுவோம். நம் குழந்தைகளுக்கு இரவில் பயம் வந்தால் தேசியத் தலைவரை நினைத்துக் கொள் எனக் கூறுவோம். தேர்வுக்கு முன்னால் தலைவரை நினைத்து விட்டு போ என்று அறிவுறுத்துவோம். நம் வாழ்க்கையின் ஒவ்வொரு நொடியிலும் அவரின் பங்கு இருக்கட்டும்.

அடுத்து நம் மரபின் மேல் , நம் மொழியின் மேல் ஆழ்ந்த பற்றும், மதிப்பும் உடையவர்களாக மாறுவோம். உலகின் எந்த மூலையில் நாம் வசித்தாலும் நம் குழந்தைகளை தமிழில் அப்பா, அம்மா என அழைக்கச் சொல்வோம். பண்டிகைக் காலங்களில் வேட்டி கட்டுவோம். தமிழர்கள் ஒருவருக்கு ஒருவர் சந்தித்துக் கொண்டால் நம் மொழியில் வணக்கம் , நன்றி எனச் சொல்வோம். கூடிய மட்டும் பிற மொழிக் கலப்பின்றி பேசுவோம்.

இப்படிப்பட்ட பிடிவாதம் மிக்க நிபந்தனைகளின் பேரில் தான் தமிழர்கள் தங்கள் வாழ்க்கையை அமைத்துக் கொள்ள வேண்டும் . ஒரு தோற்ற சமூகம் எப்படி மீள் எழக் கற்றது என்பதனை நம் எதிரிக்கு உதவிய இஸ்ரேலில் இருந்து கற்போம். அடுத்தாண்டு இஸ்ரேலில் சந்திப்போம் என்ற அவர்களது ஆழ்ந்த நம்பிக்கைதான் அவர்களுக்கு இஸ்ரேலை பெற்றுத் தந்தது. எனவே நாமும் அடுத்தாண்டு ஈழத்தில் சந்திப்போம்.

தாயகத் தமிழர்கள் இனி திராவிடர்களாக அடையாளம் காட்டப்படுவதை பெரும் கோபங் கொண்டு மறுப்போம். திராவிடமும்,இந்தியமும் தான் எங்களை வீழ்த்தின என்று உரத்தக் குரலில் சொல்வோம். சாதீயம் பேசி அரசியலுக்காக அணி மாறிக் கொண்டு பேரம் பேசும் போலிமைகளை புறக்கணிப்போம். சமூகத்தினுள் ஆழமாக புரையோடிப் போன சாதீயத்தினை வெல்ல இனம் வாயிலாக ஒன்று படுவதை அவசியமாக கொள்வோம் . நாம் வாழ நாம் நதி ஆள்வோம். தர மறுக்கும் அயலானுக்கு நாமும் எதையும் தர மறுப்போம். நம் இனத்து ஆளுமைகள் ஏராளம் இருக்கையில் மாற்றான் இனத்து ஆளுமைகளை முன் நிறுத்தும் அபத்தம் ஒழிப்போம். நம் நாட்டினை நாம் ஆள வேண்டும். குறைந்த பட்சம் ஆள்பவனை தீர்மானிக்கும் சக்தியை நாம் பெறும் வல்லமையை நாம் பெற வேண்டும் . அதற்காக தான் நாம் தமிழர்களாக ஒன்றிணைய வேண்டும் . அமைப்பு ரீதியாக ஒன்றிணைந்து குடும்பமாக இறுகி ..பல்கி பெருகிய கூட்டமாய் அதிகாரத்தினை நோக்கிய பயணத்தினை துவக்க வேண்டும். நம் மொழிக்கும், நம் மக்களுக்கும் இன்னல் இழிவென்றால் சீற்றம் கொண்டு கேட்க வேண்டும். சினம் மறந்த இனம் பிணம். நமக்குள் நம் தொன்ம மரபின் வாயிலாக பெற்றிருக்கிற அற சீற்றப் பண்பை நாம் அவ்வப் போது பயன்படுத்திட வேண்டும். மதுவிற்கும் ,தொலைக்காட்சிக்கும், காசுக்கும் மயங்கும் மாண்பினை கைவிட வேண்டும். நமக்கான உரிமைகளை எதன் பொருட்டும் யாருக்கும் விற்கவோ ,அடகு வைக்கவோ கூடாது. தமிழை வாழ வைப்போம். தமிழனையே ஆள வைப்போம்.

தமிழின இளைஞர்கள் மற்ற இனத்து இளைஞர்களை விட உழைக்க வேண்டும். நாம் அடைந்த தோல்வி நம்மை வன்மம் கொள்ள வைத்திருக்கிறது. நமக்கான .. நம் இனத்திற்கான ..பொருளாதார முன்னேற்றத்தினை அடைய நாம் கடுமையாக உழைக்க வேண்டும். இரவு பகல் பாராது உழைக்க வேண்டும். மற்ற இனத்தவரைக் காட்டிலும் நம் திறமையை அதிகம் உபயோகித்து பொருள் சேர்க்க வேண்டும் . நம் வருமானத்தில் நம் இனமானம் காக்க ஒரு குறிப்பிட்ட தொகையை மாதம் தோறும் ஒதுக்கி இன நலப் பணிகளுக்கு செலவிட வேண்டும்.

உடல் முழுக்கக் காயங்களோடு..ரத்தம் வழிய வழிய… தீரா வன்மத்துடன் ..ஒரு மிருகம் போல நாம் நின்று கொண்டிருக்கிறோம். எதிரி எக்காளம் வழிய ஏளனம் பேசுகிறான். நாம் பொறுமையாக காத்திருப்போம். காத்திருப்பு என்பது ஒய்வல்ல. மாறாக வலுவோடு மீள நமக்கு கிடைத்திருக்கும் இடைவேளை .தாக்குதல் என்பது இனி நேருக்குநேர் நின்று ஒருவரை உடல்ரீதியாக விழ்துவது இல்லை. மாறாக நம் போர் வாக்காய், வாழ்க்கையாய், பேச்சாய், செயலாய், முழக்கமாய், எண்ணமாய் , கனவாய், நினைவாய், ஆற்றலாய், அறிவாய்., தெளிவாய், கொள்கையாய், கோட்பாடாய், தத்துவமாய் விரியட்டும் எமக்கான வாழ்க்கை, எமக்கான உயர்வு நம் கையில்தான் உள்ளது என்பதனை நம் அறிவு தெளியட்டும்.

நாம் தமிழர்,

மணி செந்தில் .

துரோகங்களை எரித்துப் போடும் விடுதலையின் ஊழித் தீ.


தமிழர்களின் தாயக நிலமான ஈழம் எதிரிகளின் கரங்களுக்கு இடமாறிய பிறகு கருத்து என்ற பெயரில் தத்துவங்களை உதிர்த்தும், ஆராய்ச்சி என்ற பெயரில் தன் இனத்தின் சுதந்திரத்திற்காக தன் உயிரையும் இழந்த போராளிகளின் பின்னடைவினை போஸ்ட்மார்ட்டம் செய்யும் மோசடி பேர்வழிகள் இணையத் தளங்களின் ஊடாக நிரம்பி வழிகிறார்கள்.

அ.மார்க்ஸ் என்ற உலக மானுட இனத்தின் மனித உரிமை காப்பாளர் சமீபத்தில் இலங்கைக்கு சென்றிருந்த அனுபவங்களை முற்காலத்தில் உலகப் பயணம் செய்து பயணக்கட்டுரைகள் எழுதுவாரே ..ஆம் அவரே தான் இதயம் பேசுகிறது மணியன் பாணியில் பல தளங்களில் அள்ளி விட்டுக் கொண்டிருக்கிறார். சிறுபான்மை இஸ்லாமியர்களின் உரிமைகள் இன்னும் மீள கிடைக்கவில்லை என கதறும் அ.மார்க்ஸ் , பெரும்பான்மையான பூர்வீக குடி மக்கள் பிச்சைக்காரர்களாய் எதுவும் அற்ற ஏதிலிகளாய் நிற்கும் மக்களைப் பற்றி பேசுவதில்லை. காஷ்மீருக்கு எல்லாம் சென்று மனித உரிமையை நிலைநாட்டி ,புள்ளி விபரங்களை அள்ளித் தெளித்து புத்தகம் எழுதும் அ.மார்க்ஸ் ஈழத்தில் நடைப்பெற்ற போர்க்குற்றங்களை பற்றி கேட்டால் மவுனம் சாதிக்கிறார். தோழர்.மு.கார்க்கி அ.மார்க்ஸின் முகமுடியை கிழித்து எறிந்து (அ.மார்க்சின் உபன்யாசமும் சில கேள்விகளும் ) அப்பட்டமாக்கி காட்டிய பிறகும் இது நாள் வரை தோழர் கார்க்கி எழுப்பிய எந்த கேள்விக்கும் பதிலளிக்க துப்பில்லாத அ.மார்க்ஸ் ஈழம் பற்றி பேச எவ்வித அருகதையும் இல்லாதவர். அ.மார்க்ஸின் கள்ள மவுனம் எதன் பொருட்டு என்பது அம்சாகளுக்கு மட்டுமே வெளிச்சம். அ.மார்க்ஸின் சிறுபான்மை இன அக்கறை என்பது அப்பட்டமான மூன்றாம் தர ஒத்திகை பார்க்கப்படாத நடிப்பு என்பது பல்வேறு சமயங்களில் நிருபிக்கப்பட்டிருக்கிறது . அடுக்கடுக்காய் வெளியாகும் அ.மார்க்ஸின் புத்தகங்களுக்கான பொருளாதார பின்புலத்தினை எட்டிப் பார்த்தால் தெரியும் எதன் பொருட்டு அ.மா சிறுபான்மை அக்கறை பிடில் வாசிக்கிறார் என்று. தேசிய இனங்களின் தன்னுரிமை கோரல் குறித்து அ.மாவின் நிலைப்பாடு பற்றி கேள்வி கேட்டால் நாம் புலி ஆதரவாளர் ஆகி விடுவோம். அ.மார்க்ஸ், சோபா சக்தி ,சுகன் , ஞானி ,சோ, சுப்பிரமணியசாமி ,ஜெயலலிதா , கருணாநிதி போன்றோர் எவ்வளவு வேண்டுமானாலும் பேசலாம் .எதிர்த்து கேட்டால்..கேட்பவர் புலி ஆதரவாளர் என்ற தட்டையான விமர்சனத்தினை வைத்து இவர்கள் பித்தலாட்டம் செய்கிறார்கள்.

ஈழ மக்கள் புலிகளால் வதைக்கு உள்ளானர்கள் என்ற இவர்களின் சொத்தையான வாதம் ராசபக்சேவிற்கு ஆதரவான ஒன்றே . மக்களில் இருந்து தான் புலிகளின் துவக்கம் என்ற அடிப்படை உண்மையும், புலிகள் வேறு மக்கள் வேறு அல்லர் என்ற உண்மையையும் மறைத்து புலிகளின்ஆயுதப் போராட்டத்தினால் தான் ஈழப் பெரு நிலம் அழிவிற்கு உள்ளானது என்று மாய்மாலம் பேசும் இவர்கள் எப்படிப்பட்டவர்கள் என்பதனை வரலாறு முடிவுசெய்யும் .

இனப்பிரச்சனையின் முதல் கலவர நிகழ்வாக கருதப்படும் 1956ஆம் வருடத்திய தனி சிங்களச் சட்டத்தினை எதிர்த்து அகிம்சை வழிப் போராட்டமான 05-06- 1956 அன்று நடைப்பெற்ற காலி முகத் திடல் போராட்டத்தில் தந்தை செல்வா தலைமையிலான அறவழிப் போராட்டத்தினை சிங்கள குண்டர்கள் தாக்கியதை பற்றியும் , போராடிய தலைவர்களை அருகில் இருந்த பெய்ரா ஏரியில் தூக்கிப் போட்ட கதையையும் அது முதல் தமிழர்கள் தன் எதிர்ப்பினை பதிவு செய்யும் உரிமை கூட மறுக்கப்பட்ட நிலைக்கு தள்ளப்பட்டார்கள் என்பதையும் இவர்கள் அறியாதவர்களா என்ன..? 1956 ஆம் வருடம் ஜீன் 5 மற்றும் 6 ஆம் தேதிகளில் சிங்கள காடையர்களால் வன்முறைக்கு பலியாகி இனக்கலவரத்தில் பலியாகிப் போன தமிழர்களில் எத்தனை சிறுபான்மையினர் இருந்தார்கள் என்ற பட்டியல் இவர்களிடம் இருக்கிறதா..?

1958 ஆம் வருடம் மே மாதம் சிங்கள எழுத்தான ஸ்ரீ யை பொறிக்க தமிழச்சிகளின் மார்புகள் தான் ஏடுகளாய் பயன்பட்டன மற்றும் இந்த கலவரத்தில் 400க்கும் மேற்பட்ட தமிழர்கள் கொல்லப்பட்டார்கள் என்பதும் , 14,000க்கும் மேற்பட்ட தமிழர்கள் இடம் பெயர்ந்தனர் என்பதும் இவர்கள் அறியதவரா என்ன..?

1961 ஆம் ஆண்டு சிங்கள ஆட்சி மொழி சட்டத்தினை எதிர்த்து தந்தை செல்வா சத்யாகிரகப் போராட்டம் நடத்தி அவரது தமிழரசு கட்சி தனி தபால் தலையை அச்சிட்டு உரிமையை நிலைநாட்டும் முயற்சியில் போராட்ட ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவரான ஏகாம்பரம் இறந்ததும், தந்தை செல்வா உள்ளீட்டோர் 3 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத்தண்டனைப் பெற்ற வரலாற்றினையும் இவர்கள் அறியாதவரா என்ன..?

1971 ஆம் வருடத்திய சிங்கள அரசின் கல்வி தரப்படுத்துதல் சட்டத்தினால் கட்டாய சிங்கள கல்வியாலும் , மதிப்பெண் அடிப்படையில்லாது, இனத்தின் அடிப்படையில் தான் உயர்கல்வி, உத்தியோகம் என்ற அநீதியால் தமிழ் இளைஞர்கள் நேரடியாக பாதிக்கப்பட்டார்கள் என்பதையும் அதன் காரணமாக போராட தமிழ் இளைஞர்கள் வீதிக்கு வந்தனர் என்பதையும் இவர்கள் அறியாததா என்ன..?

1974 ஆம் ஆண்டு , உலக தமிழ் அறிஞர்கள் உட்பட 50,000 க்கும் மேற்பட்ட தமிழர்கள் கலந்துக் கொண்டு மிக ஒழுங்கமைவோடு நடைப்பெற்ற உலக தமிழ் ஆராய்ச்சி மாநாட்டின் இறுதி நாளில் சிங்கள அரசு வலுக்கட்டாயமாக காவல்துறையை ஏவி நடத்திய கலவரத்தில் 10க்கும் மேற்பட்டோர் பலியானதும் இவர்களுக்கு தெரியாததா என்ன?

1976 ஆண்டு நடைபெற்ற தனி தாயகத்தினை வலியுறுத்தி ஈழத்து காந்தி தந்தை செல்வா எடுத்த வட்டுக் கோட்டை மாநாட்டு தீர்மானங்களுக்கு பிறகு மேலும் மூர்க்கம் பெற்ற சிங்கள பேரினவாதம் 1977 ஆம் ஆண்டில் ஆயிரக் கணக்கில் தமிழர்களை வேட்டையாட துவங்கியதையும்,1981 ஆம் ஆண்டு யாழ் நூலகம் எரிக்கப்பட்டு விலை மதிப்பில்லாத ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட உயர் தமிழ் நூற்கள் எரிந்து சாம்பலானதையும், 1983 ஆம் ஆண்டு கருப்பு சூலை கலவரத்தில் பாதிக்கப்பட்டு லட்சக் கணக்கான ஈழத்தமிழர்கள் தன் சொந்த பூர்வீக நிலங்களை துறந்து நாடு கடந்து போய் இன்றளவும் உலக நாடுகளில் பரவி கிடக்கிறார்கள் என்பதையும், இவர்கள் அறியாததா என்ன..? புலிகளின் தாயகப் போராட்டம் சிறுபான்மையினரையும் உள்ளடக்கியதுதான் என்பதும்… புலிகளின் போராட்டம் இனம் சார்ந்ததே ஒழிய …மதம் சார்ந்தது அல்ல என்பதையும் …தன் மகனுக்கே சார்லஸ் ஆண்டனி என்ற பெயர் சூட்டிய தலைவர் பிரபாகரன் என்பதையும் இவர்களுக்கு தெரியும்.

எல்லாம் தெரியும். சிங்கள பேரினவாதம் அளிக்கும் எச்சிலைகளுக்கு நன்றி விசுவாசம் பாராட்ட இவர்களுக்கு கிடைத்த ஆயுதம் சிறுபான்மையினர் உரிமை. மற்ற படி மனித உரிமையாவது..மண்ணாங்கட்டியாவது.

ஈழத் தமிழர்கள் படிப்படியான நிலைகளில் ஆயுத வழிப் போராட்டங்களுக்கு தள்ளப்பட்டனர் என்பதையும்…உலக வல்லாதிக்க நாடுகளின் உதவியால் இன்று சிங்கள பேரினவாதம் அடைந்திருக்கும் வெற்றியை உலகம் முழுக்க பரவிக்கிடக்கும் 12 கோடி தமிழர்கள் தங்கள் உயிரைக் கொடுத்தேனும் நிரந்தரமாக்க விட மாட்டார்கள் என்பதற்கு அறிகுறியாக ஐ.நா கொடுக்கும் போர்க் குற்ற விசாரணை நிர்பந்தங்களால் சிங்கள பேரினவாதம் நிலை குலைந்து செய்வது அறியாமல் ஐ.நா பொதுச் செயலாளர் படத்தினை செருப்பால் அடித்து வருவதை நாம் பார்க்கதானே செய்கிறோம்..?

இதற்கு மேலும் செருப்புகள் தேவைப்படும். சிங்கள பேரினவாதம் தங்களைத் தாங்களே அடித்துக் கொள்வதற்கும், இப்போது கூடி கும்மி அடிக்கும் இந்த துரோக பதர்களை சிங்கள பேரினவாதமே தோற்றுப்போன எரிச்சலில் செருப்பால் அடித்து துரத்துவதற்கும் செருப்புகள் தேவைப்படும்.

ஒரு நாள் அல்ல ஒரு நாள். நம்பிக்கைகளோடு சொல்கிறோம். எம் இனத்திற்கான விடுதலையை, எம் இனம் கனவு கண்டு.. தலைவர் அணு அணுவாய் உருவாக்கி.. தற்போது துரோகங்களின் சதியால் எதிரிகளில் கரங்களில் சிக்குண்டு கிடக்கும் ஈழ நாட்டை நாங்கள் அடைந்தே தீருவோம். ஒரு தேசிய இனத்தின் தாகத்தினை துரோகத்தின் சோரங்களால் சிதைத்து விட முடியாது. தலைமுறை தலைமுறையாக வன்மத்துடன் வாழ்வோம். உயிர் கொடுத்து..உதிரம் கொடுத்து தாயகம் அமைக்க தளமாய் போன மாவீரர்களின் மூச்சுக் காற்று இன்னும் இந்தப் பூமியில் தான் உலவுகிறது. அது எம்மை இயங்க வைத்துக் கொண்டே இருக்கும். துரோகங்களின் முகத்தில் காறி உமிழ எம்மை தூண்டிக் கொண்டே இருக்கும். எம் விழியோரத்தில் பூத்திருக்கும் உதிரச் சிவப்பில் என்றாவது எம் இனத்திற்கான விடுதலை சாத்தியப்பட்டே தீரும் .