5/25/11

மீண்டெழுந்த தமிழ் உணர்வில் சிதறுண்ட காங்கிரசு.-மணி செந்தில்


“ ஒரு போரின் வெற்றியைத் தீர்மானிப்பது ஆட்பலமோ, ஆயுதப் பலமோ அல்ல. அசைக்க முடியாத மனவுறுதியும், வீரமும் விடுதலைப்பற்றுமே வெற்றியை நிர்ணயிக்கும் குணாம்சங்கள்”

– தேசியத் தலைவர் மேதகு. பிரபாகரன் அவர்கள்.

நான் முதன்முதலில் அவரை சந்தித்தப்போது அவர் வெகு சாதாரணமான இருந்தார். ஒரு கிராமத்து எளிய மனிதனுக்குரிய சொற் பிரயோகங்கள். வார்த்தைக்கு வார்த்தை ‘ அண்ணன்’, ’ மூத்தவர் ’என்றெல்லாம் தேசியத்தலைவரை அழைத்துக் கொண்டிருந்த தன்மை.எளிய உடை. அனைவரையும் கவரக் கூடிய புன்னகை. வயதானவர்கள் தன்னைக் காண வரும் போது எழுந்து நின்று வணங்கும் பணிவு . நான் அவரைக் காணும் போது கையில் சேகுவேரா புத்தகமான ’கனவிலிருந்து போராட்டத்திற்கு’ என்ற புத்தகத்தினை அவர் வைத்திருந்தார். உண்மையில் உணர்வோடிய ஒரு கனவிற்கு உயிர்க் கொடுக்க அவர் அப்போது தயாராகிக் கொண்டிருந்தார் என எனக்கு அப்போது தெரியவில்லை.

மறுமுறை நான் அவரைப் பார்த்த இடம் ஒரு சிறை . சிறை ஒரு மனிதனை இத்தனை உற்சாகமாக வைத்திருக்குமா என ஆச்சர்யப்பட வைத்த சந்திப்பு அது. உடல் வியர்த்து கண் சிவந்திருந்த அவர் பல நாள் உறக்கமற்று சிறை அறைக்குள் தவித்துக் கொண்டிருந்தார். ஈழ பெரு நில யுத்தம் தனது இறுதியை நோக்கி நகர்ந்துக் கொண்டிருந்த நாட்கள் அவை. தன்னோடு உடன் பிறந்தானாய் பிறந்த , தன்னோடு ஈழ நிலத்தில் பழகிய விடுதலைப்புலிகளின் தளபதிகள் ஒவ்வொருவராய் வீர மரணம் எய்துக் கொண்டிருந்த கனமான நாட்கள் அவை. மிகுந்த கோபம் இருந்தது அவருக்கு. எந்த நொடியும் வெடித்து விடும் இதயச் சுமையோடு வார்த்தைகளில் தன் கோபத்தினை வைத்திருந்தார் அவர். தனது சகோதரர்கள் ஒவ்வொருவராய் வீர மரணம் எய்தும் போது குளியலறைக்குள் சென்று கத்தி, கதறி அழுது விட்டு வந்ததாக சொன்னார். அதை அவரது முகமே காட்டியது.

மிக நீண்ட தூர பயணம் அது. ஆபத்துக்கள் நிறைந்த , இழப்புகள் மலிந்த அந்த பயணத்திற்கு எங்களை தயார் செய்வதில் தன்னுடைய கடுமையான முயற்சியினை அவர் செலவிட்டுக் கொண்டிருந்தார். தமிழ்நாடு எங்கும் சுற்றி வரப்போகும் பயணத்திற்கு நாங்கள் அனைவரும் எங்களுக்கு தெரிந்த ஆலோசனைகளை தெரிவித்துக் கொண்டிருந்தோம். குறைவான நாட்களில் மிகுதியான மக்களை சந்திக்கப் போகும் அந்த பயணத்தில் எதிர்க்கொள்ள வேண்டிய பல்வேறு சோதனைகளை அவர் படிப்படியாக திட்டமிட்டார். எங்களின் ஒவ்வொரு அசைவையும் அவர்தான் தீர்மானித்தார். எங்களுடைய எதிரிகள் பலமானவர்கள். பண பலமும், ஆட்சி அதிகாரமும் நிரம்பிய எதிரிகளை எவ்விதமான அதிகாரமும், பொருளாதார வலுவும் இல்லாத ..இந்த எளிய இளைஞர்களாகிய நாங்கள் எப்படி எதிர்க்கொள்ள போகிறோம் என்ற பிரமிப்பு எங்களிடம் அப்போது இருந்தது. அப்போது அவர் சொன்னார் ’ எல்லாம் முடியும்.செய்வோம்’.

இது போன்ற சோதனை மிகு காலங்களில் சுடர் விடும் நம்பிக்கையை அவர் அவரது உள்ளொளியாக விளங்கும் , அவரது அண்ணன் பிரபாகரனிடம் இருந்து அவர் கற்றிருந்தார். அதைத்தான் எங்களுக்கும் அவர் கற்றுக் கொடுத்தார் . மக்களை சந்தியுங்கள், வீதியில் இறங்குங்கள் – மக்களை புறக்கணித்து விட்டு எதுவும் ஆகாது என எங்களிடம் கடுமையாக அவர் தெரிவித்திருந்தார். அரசியலுக்கு புதிய வரவான நாங்கள் மக்களை எவ்வாறு சந்திப்பது என கற்றிருக்கவில்லை . ஆனால் அவரோ ’மக்களிடமிருந்துதான் நாம் வந்திருக்கிறோம். மக்களுக்காக வந்திருக்கிறோம், மக்களிடமே போவோம்’ என்றார். தெருக்களை நோக்கி நகருங்கள் என்ற அவரது கண்டிப்பான உத்திரவில் நாங்கள் அனைவருமே கட்டுண்டு கிடந்தோம்.

மக்களை புறக்கணித்து விட்டு மண்டபங்களில் கருத்து கதா காலட்சேபசம் நடத்துவதில் எவ்வித பயனுமில்லை என நன்கு உணர்ந்திருந்தார். மக்களை திரட்டி பெரும் திரளாய் எதிரியோடு மோதாமல் எதுவும் நடக்காது என அறிந்திருந்தார் . வயதான தோள்களில் முடியாமல் தொங்கிக் கொண்டிருந்த ஜோல்னா பையில் தூங்கிக் கொண்டிருந்த தமிழ்த் தேசியம் என்ற கருத்துருவினை ஜீன்ஸ் அணிந்து, பிரபாகரன் பனியன் போட்ட இளைஞர்களின் கரங்களுக்கு அவர் மாற்றினார்.

பிரபாகரன் படம் வைத்திருந்தாலே கைது என்று அச்சம் ஊறிக் கிடந்த காலக்கட்டத்தில் தன் தலைவரின் படத்தினை நெஞ்சில் பனியன்களாக ஏந்தி வீதிகளில் திரிந்த இளைஞர் பட்டாளத்தினை அவர் உருவாக்கினார். ஒரு சிறிய துண்டறிக்கையானாலும் சரி.. அதை மிகுந்த நுணுக்கமாக ஆராய்ந்து ..திருத்தங்கள் கூறி அதை அவர் சிறப்பாக்கினார். தன்னை வாழ்க..வாழ்க என முழக்கமிடும் இளைஞர்களை கடிந்துக் கொண்ட அவர் தேசியத் தலைவர் பிரபாகரன் வாழ்க என முழங்கு என அறிவுறுத்தினார்.

அரசியல் கட்சியாக மாறிய உடனே ஓட்டு வாங்கிக் கொண்டு பதவி ஏறி பல்லக்கில் பவனி வர போவதற்கான திட்டம் இது என விமர்சனக் கணைகள் பாய்ந்து வந்த போது அதை அவர் பொருட்படுத்தவே இல்லை. பதவி தான் முக்கியம் என்றால் நான் திமுக, அதிமுக என ஏதோ ஒரு கட்சியில் இணைந்து விட்டிருப்பேனே, கட்சி,நிர்வாகம் எனவெல்லாம் தொந்தரவுகள் ஏதுமின்றி நான் நினைத்த பதவியை அடைந்திருப்பேனே.. என மிகுந்த அலட்சியமாக பதிலளித்தார். பசும்பொன் முத்துராமலிங்கனார், இமானுவேல்சேகரனார், இரட்டைமலை சீனிவாசன், அயோத்திதாசர், புலவர் கலியபெருமாள், போன்ற மறைந்த தமிழகத்தலைவர்களின் நினைவிடங்களுக்கு அவர் சென்ற போது திட்டமிட்டு ஏற்படுத்தப்பட்ட சர்ச்சைகளை அவர் சட்டை செய்ததே இல்லை. நானும் ஒரு நாள் இது குறித்து அவரிடம் நேரடியாக கேட்டதற்கு” மறைந்துப் போன நமது பாட்டான்கள் ஒருவருக்கொருவர் சண்டை போட்டிருக்கலாம். அவர்களுக்குள்ளாக இருந்த முரண்களை பெரிது படுத்தி இப்போது இருக்கும் அண்ணன் தம்பிகளை என்னால் அடிச்சிக்க வைக்க முடியாது. நான் தமிழனாய் ஒன்று படுத்த வந்திருக்கிறேன். யாரையும் குறை கூறி பிரிக்க அல்ல’ என்று தனது எளிய தமிழில் வலிமையாக சொன்னார்.

அவரிடம் அசைக்க முடியா கனவொன்று இருந்தது. அந்த கனவில் ஒரு இனத்தின் மீது கவிழ்ந்த துயரங்களுக்கு பிறகு மிஞ்சிய வன்மம் இருந்தது. என்ன விலைக் கொடுத்தேனும் நம் இனத்தினை அழித்த காங்கிரசுக்கு வாக்கு என்ற ஆயுதத்தினை பயன்படுத்தி வீழ்த்த வேண்டும் என்ற அவரது உளமார்ந்த விருப்பத்திற்கு அவர் எதையும் இழக்க தயாராக இருந்தார். கொடுஞ்சிறையும், கடுமையான அலைக்கழிப்புகளும் உடைய அவரது வாழ்க்கை அவருக்கு அளித்த உடற்உபாதைகள் அவரை மிகுந்த சிரமத்திற்கு உள்ளாக்கினாலும் அவரின் அசாத்திய கனவுகள் அவரை இயக்கிக் கொண்டே இருந்தன.

தன்னை சுற்றி தனது அண்ணன் பிரபாகரனின் படங்களை அவர் மாட்டியிருப்பதற்கு ஏதோ உளவியல் காரணம் இருக்கக் கூடும் என என் உள்மனம் சொல்லியது. ஆம். அது உண்மைதான். பல அசாத்தியங்களை சாத்தியப்படுத்தும் திறனை அவர் தேசியத் தலைவரிடம் இருந்து தான் எடுத்துக் கொண்டார். இன்னமும் தனது அண்ணன் பிரபாகரன் உடனான சந்திப்பினை அவர் சிலிர்ப்பாய் விவரிக்கையில் அவரின் கண்களில் மிளிரும் ஒளியை நான் அருகில் இருந்து கவனித்திருக்கிறேன்.

தமிழினத்தின் பெருங்கனவான ஈழப் பெருநிலத்தினை அழித்த காங்கிரசு கட்சியினை அரசியல் பலம் கொண்டு,மக்களை திரட்டி வீழ்த்தி விட அவர் முயன்றார். அப்போது அவரிடம் அதை நிறைவேற்ற நம்பிக்கை என்ற ஆயுதம் மட்டுமே இருந்தது. எதிரே நின்ற எதிரி சாமன்யப்பட்டவன் அல்ல. நூற்றாண்டு கடந்த பழமையும், அதிகாரம் தந்த வளமையும் உடைய இந்த தேசத்தினை பல முறை ஆண்டு, இப்போதும் ஆண்டுக் கொண்டிருக்கிற காங்கிரசுக் கட்சி. ஆனால் அவரும் , அவரது தம்பிகளும் அசரவே இல்லை. அவரும், அவரது இயக்கத்து தம்பிகளும் தங்களது கடுமையான உழைப்பினால் தமிழ்த் தேசிய இனத்தின் இலட்சியக்கனவொன்றை நிறைவேற்ற தன்னை முழுமையாக ஒப்புக் கொடுத்தார்கள். ஈழப் பெரு நிலத்தில் இறுதிக்கட்ட போரின் போது அடுக்கி வைக்கப்பட்டிருந்த காட்சிகள் எப்போதும் அவரது மனக்கண்ணில் தோன்றி அவரை உசுப்பேற்றிக் கொண்டே இருந்தது. கண்ணீரை துடைத்து விட்டு, பாய்ந்து எழுந்து மக்களிடம் ஓடினார். அடிவயிற்றிலிருந்து பொங்கிய கோபத்தினை எல்லாம் திரட்டி எடுத்து உக்கிர வார்த்தைகளால் காங்கிரசை வறுத்தெடுத்து ஓட விட்டார் அவர். ஏன் இத்தனை கோபம் என கேட்டதற்கு” பிரபாகரனை சோனியா காந்தி வீழ்த்தினார் என வரலாறு சொல்லக் கூடாது. பிரபாகரன் தன் தம்பியை வைத்து சோனியா காந்தியை வீழ்த்தினார் என்றுதான் வரலாறு சொல்லவேண்டும் “ என துடிப்புடன் கூறிய அவரை யாராலும் நேசிக்காமல் இருக்க இயலாது.

உண்மையில் அது தான் நடந்தது. பிரபாகரன் தோற்கவில்லை. மாறாக தன் தம்பியை அனுப்பி காங்கிரசை தோற்கடித்தார். இப்படித்தான் வரலாறு இதை பதியப் போகிறது.

போட்டியிட்ட 63 தொகுதிகளில் 58 தொகுதிகளில் காங்கிரசு தோல்வி அடைந்ததற்கான முழு முதற் காரணம் அவரும், அவரின் தம்பிகளும் தான். வேகமாக வரும் வாகனத்தில் இருந்து அடுத்த ஊருக்கு பயணப்பட்டாக வேண்டும் என்ற அவசரத்தில் பாய்ந்தோடி மேடையில் ஏறி ,காங்கிரசினை ஏன் தோற்கடிக்க வேண்டும் என்பதற்கான காரணங்களை அடுக்கடுக்காக ஆவேசமாக எடுத்து வைத்த போது காற்று திசை மாறி வீசத் துவங்கி இருந்தது. அடித்து வீசிய புயலில் சிக்குண்ட சருகுகளாகி காங்கிரசு வேட்பாளர்கள் சிதறுண்டு போனார்கள்.

காங்கிரசை எதிர்க்கப் போய் இரட்டை இலைக்கு ஓட்டு கேட்கிறார்களே…இது அடுக்குமா,தகுமா என்றெல்லாம் வழக்கம் போல் சங்கு ஊதினர் சிலர். இந்தியத் தேசியம் தமிழ்த் தேசியத்திற்கு எதிரானது. இந்திய தேர்தல் கமிசன் நடத்தும் தேர்தலில் பங்குப் பெற்றால் தமிழ்த்தேசியம் மலராது. எனவே தேர்தல் புறக்கணிப்பு தான் செய்ய வேண்டும் என்றனர் சிலர். காங்கிரசிற்கு ஓட்டு போடாதீர்கள் என்று மட்டும் சொல்லுவோம் ,எந்த கட்சிக்கும் ஓட்டு கேட்காமல் இருப்போம் என தானும் குழம்பி,மக்களையும் குழப்ப முயன்றனர் சிலர். ஆனால் இவற்றை எல்லாம் காதில் ஏற்றிக் கொள்ளாமல் தெளிவாக இருந்தார் அவர்.

தேர்தல் புறக்கணிப்பு என்று அறிவார்ந்த பெருமக்கள் வெளியிட்ட அறிவிப்பின் காரணமாகவோ, என்னவோ தெரியவில்லை. 85% -க்கும் மேலான ஓட்டுப் பதிவினைக் கண்டது தமிழகம். மக்களை விட்டு விட்டு இவர்கள் யாருக்கு எதை செய்யப் போகிறார்கள் என்பது யாருக்கும் தெரியாத காரணத்தினால் இவற்றை எல்லாம் அவர் யோசிக்கக் கூட இல்லை. காங்கிரசை தோற்கடிக்க வேண்டும் என்பது ஒற்றைத் திட்டம். அதற்கு எதிர்த்து நிற்கும் பிரதான எதிர்க்கட்சி வெல்ல வேண்டும் என்பது சிறு குழந்தைகளும் அறிந்த, அறிவார்ந்த பெருமக்கள் மட்டும் அறியாத உண்மையாதலால் காங்கிரசை எதிர்த்து இரட்டை இலை என்ன ,அங்கு மொட்டை இல்லை நின்றால் கூட நான் ஆதரிப்பேன் என்று தெளிவாக இருந்தார் அவர்.

காங்கிரசின் கரூர் வேட்பாளர் ஜோதிமணி தன்னை எதிர்த்து அவர் பிரச்சாரம் செய்ய வேண்டாம் என கேட்டதற்கு” தங்கையே! நீ காங்கிரசை விட்டு வெளியேறி காங்கிரசை எதிர்த்து சுயேட்சையாக போட்டியிடு. நான் ஆதரித்து பிரச்சாரம் செய்கிறேன். என அறிவித்தார் அவர்.

ஓயாத அலைகளை நினைவுப்படுத்தும் தாக்குதல்களை காங்கிரசின் இன எதிர்ப்பு அரசியலின் மீது நிகழ்த்தினார் அவர்.காங்கிரசின் கோட்டைக்குள் அவரின் சொற்கள் பாய்ந்து குண்டுகளாய் வெடித்தப் போது குலைந்துப் போனது காங்கிரசின் கோட்டை.இதோடு முடியவில்லை. தன் தாய்நில மக்களுக்கான ..ஒரு தாயக நாட்டை அடைவது வரைக்குமான அவரது கனவு மிகுந்த நீண்ட நெடிய ஒன்றாகும். சற்றும் சளைக்காத அவரது சொற் அம்புகள் எதிரிகளின் மீதும், துரோகக் கூட்டங்களின் மீது மழைப் போல பொழிய காத்திருக்கின்றன .

இனம் அழிந்த கதையிலிருந்து ஆவேசத்தினையும், தன் அண்ணன் பிரபாகரன் வாழ்க்கையில் இருந்து நம்பிக்கையையும் எடுத்துக் கொண்டு அவர் செல்லவிருக்கும் தொலைத் தூர லட்சிய பயணத்தில் பங்குப் பெற்று தன்னேயே ஒப்புக் கொடுக்க தமிழின இளைஞர் கூட்டம் தயாராக இருக்கிறது. அவரது பயணமும் துவங்கி விட்டது. அந்த இராஜப்பாட்டையில் அதிரும் குதிரைக் குளம்பொலிகளில் சிதறுண்டுப் போகும் எதிரிகளின் பகை.

நீண்ட இலக்கினை நோக்கி பாய்ந்த அம்பொன்று, குறுகிய இலக்கொன்றை ஊடறுத்து தாக்கி, துளைத்து பின் பாய்வது போல , காங்கிரசினை தமிழ் மண்ணில் வீழ்த்தி இருக்கும் அவர் தளராமல் முன்னேறிக் கொண்டிருக்கிறார்.

தமிழ்த் தேசிய இனத்தின் நம்பிக்கை அவர்.

அவர்தான் செந்தமிழன் சீமான் எனும் தமிழினத்தின் புதிய வெளிச்சம்.

-மணி.செந்தில்

5/5/11

இனி..விளைவதில் தான் இருக்கிறது.. விதைப்பது .


இறுதியாக உலகத்தின் மெளனம் கலைக்கப்பட்டிருக்கிறது.


ஐ.நா. குழுவினரின் அறிக்கைக்கு பிறகு தீவிரவாதத்திற்கு எதிரானப் போர் எனவெல்லாம் அமைதிப் புறாக்களாக கூவியவர்கள் இன்று மெளனம் காக்கிறார்கள். அடுக்கடுக்காய் குவிந்த போர்க்குற்றப் புகைப்படங்களும்,காணொளிகளையும் கண்டு காணாமல் இருந்த உலகத்தின் உதடுகள் எல்லாம் இப்போதுதான் இலேசாக முணுமுணுக்க துவங்கியுள்ளது . இதோடு மட்டுமல்ல இன்னும் காண சகிக்காத காட்சிகள் பல இருக்கின்றன என சேனல் 4 தொலைக்காட்சி நிறுவனம் அறிவித்து இருக்கிறது. இங்கே தேர்தல் முடிந்து அலை ஓய்ந்த கடலாய் தமிழகம் இருக்கிறது. 7 கோடி தமிழர்கள் வாழும் தாயக தமிழகத்தின் அரசியல் தலைவர்கள் மக்களுக்கு முன்பாக என்ன பேசுவது என்ற நிலையில் மருங்கிக் கொண்டு தவிக்கிறார்கள்.


2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கின் குற்றப்பத்திரிக்கையில் கனிமொழி பெயர் இணைக்கப்பட்டதற்காக தேர்தலுக்கு பின் முதன் முதலாக 27-04-2011 அன்று கூடிய தி.மு.க வின் உயர்நிலை செயல் திட்டக்குழு போகிற போக்கில் ஐ.நா குழு வரைந்த அறிக்கையின் மீது மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கண்டும் காணாத அளவிற்கு ஒரு தீர்மானத்தினை வரைந்திருக்கிறது. இவர்களின் இலட்சக்கணக்கான தீர்மானங்களின் கதி என்ன, அதன் மதிப்பு என்ன, அதை இவர்களே பின்பற்றும் லட்சணம் என்ன என்பதை நாமெல்லாம் நன்கு அறிவோம்.


இத்தனை அரசியல் நடவடிக்கைகளுக்கு மத்தியில் நம்மையெல்லாம் புருவத்தினை தூக்க வைத்திருக்கிறது அ.தி.மு.க பொதுச்செயலாளர் ஜெயலலிதாவின் அறிக்கை. தேர்தலுக்கு முன் பிரச்சார சமயத்தில் இந்த அறிக்கை வந்திருந்தால் ஓட்டுக்காக பேசியதாக நினைத்துக் கொள்ளலாம் . ஆனால் தேர்தல் முடிந்த பின்னர் இந்த அறிக்கை வெளியாகி இருப்பதுதான் நமது ஆர்வத்தினை தூண்டுகிறது. பார்ப்போம். மாற்றம் என்பதுதான் மாறாத தத்துவம் என்பதில் நம்பிக்கை கொள்வோம். வழக்கம் போல நமது நம்பிக்கைகள் கொடநாட்டின் குறட்டையில் முடியாமல் இருந்தால் சரி.


எதைப் பேசினாலும் 1956-க்கு பறந்து போய் பழங்கதைகள் பேசும் திமுக தலைவர் கருணாநிதி ஜெயலலிதாவின் கடுமையாக அறிக்கைக்கு பதில் சொல்லத் தெரியாமல் ஒன்றுக்கு இரண்டு அறிக்கைகள் விட்டு குழம்பியும்..குழப்பியும் போனார். 40 எம்.பிக்களை ராஜினாமா செய்ய சொன்னோம், போர் நின்று விட்டதாக பொய் சொன்னோம், மழை நின்றது..தூவானம் நிற்கவில்லை என்றெல்லாம் இரக்கமில்லாமல் ஒரு பொருட் இருமொழி பேசினோம் என்பதெல்லாம் திமுக தலைவருக்கு நன்றாகத் நினைவிருக்கும்.டாஸ்மார்க்கில் குடித்து விட்டு, கலைஞர் டிவியில் மானாட மயிலாட பார்த்துக் கொண்டிருக்கும் மானம் கெட்ட மக்கள் இவற்றையெல்லாம் மறந்திருப்பார்கள் என நினைத்திருப்பார் போலும் .


சென்ற பாராளுமன்றத் தேர்தலில் தான் வெற்றிப் பெற்றால் ஈழம் மலர உறுதுணையாக நிற்பேன் என ஜெயலலிதா பேசியதை நாடகம்..நடிப்பு.. என்றெல்லாம் துடிதுடித்த கலைஞர் ஆதரவுப் பெற்ற ஆன்றோர் பெருமக்களால் , ஒரு நடிப்பிற்காகவேனும் ஈழத்தமிழர்களுக்காக ஈழம் அடைய பாடுபடுவேன் என திமுக தலைவரை பேச வைக்க, அவரது கட்டை விரலை கூட அசைக்க வைக்க முடியவில்லையே..? .. சரித்திரம் படைத்த அந்த’ சாகும் வரை உண்ணாவிரத்தினை’ பற்றி இச்சமயத்தில் யாராவது நினைக்கக்கூடும். சிம் கார்டு இல்லாத அலைபேசியில் காரைக்குடி அண்ணாச்சியுடன் பேசியதாக கூறி போர் நின்று விட்டது என அறிவித்து விட்டு மதிய உணவிற்கு வீட்டிற்கு சென்று விட்ட சாதனையை யாராவது நினைக்கக் கூடும். “20 ஆண்டுகளாக நடந்துக் கொண்டிருந்த போரை ஒற்றை நொடியில் நிறுத்திய புறநானுற்றின் புத்துலகு விளக்கமே” என்றெல்லாம் திமுக தலைமையே தனக்குத் தானே சுவரொட்டி அடித்து சுவரை நாறடித்த கதையை யாராவது யோசிக்க கூடும். இவற்றையெல்லாம் நாடகம் ..நடிப்பு என்றெல்லாம் நாம் குறுக்கி விட முடியாது. இவை எல்லாம் அதற்கு மேலான ‘பெர்ப்பாமென்சுகள்’. தமிழ் ஈழம் என்ற நாடு இப்பூமிபந்தில் தலைவர் பிரபாகரன் தலைமையில் ஒரு நாடாக இருந்த போது ஆதரிக்க மனமில்லாமல் சகோதர யுத்தம். என்றெல்லாம் சாக்கு சொல்லி புறக்கணித்த திமுக தலைவருக்கு இப்போது மட்டும் தனி ஈழம் தீர்வாக தோன்ற காரணம் இதை வைத்து 2 ஜி க்கு மாற்றாக காங்கிரசை மிரட்டலாம் என்றுதான் .


நம் தலைவர்கள் வைத்திருக்கும் ‘சிங்களப் பற்று’ மிகவும் புகழ் வாய்ந்தது. ஒன்று பட்ட இலங்கைக்குள் தான் இவர்களின் இருதய துடிப்பே இருக்கிறது என்பது போல இருக்கின்றன இவர்களது நடவடிக்கைகள். தமிழரும், சிங்களரும் சம நீதி பெற்று வாழ்வதுதான் தனது விருப்பம் என அறிவித்துள்ள திமுக தலைவர் கலைஞர் கருணாநிதியை கண்டு சிங்களர்களுக்கே புல்லரிப்பு ஏற்பட்டிருக்கும். அங்கே சாகக்கிடக்கும் தமிழனுக்கு சம நீதி என்ன ..எதுவும் கிடைக்காது என்பது இவர் அறியாததா..? . இப்போது இவர் தான் இப்படி என்றால் தமிழ்நாட்டின் பிரதான எதிர்க்கட்சித்தலைவி வெளியிட்ட அறிக்கையில் இலங்கைத் தமிழர்கள் என்றுதான் வருகிறதே ஒழிய தப்பித் தவறி ஈழம், ஈழத்தமிழர்கள் என்ற வார்த்தைகளே காணோம். நம்மினத்தினை ஒட்டு மொத்தமாக சிங்கள பேரினவாதம் அழித்துப் போட்ட பின்னரும் இலங்கையின் ஒருமைப்பாட்டை காக்க இவர்கள் காட்டுகிற ஆர்வம் சிங்களர்களை மிஞ்சியது ஆகும்.


நடந்து முடிந்த சட்டமன்றத்தேர்தலின் போது காங்கிரசினை தோற்கடிக்க வேண்டும் என்ற எண்ணங்கள் தமிழுணர்வாளர்கள் அனைவருக்கும் இருந்தது. ஆனால் காட்டிய வழிகள் திசைக்கொன்றாய் திரும்பி நின்றதுதான் முரணாக இருந்தது. காங்கிரசினை தோற்கடிக்க வேண்டும். சரி. அதற்கு தேர்தலை புறக்கணிக்க வேண்டும் என்று சிலர் முடிவெடுத்தார்கள். காங்கிரசு எதிர்ப்பாளர்கள் காங்கிரசினை எதிர்த்து தேர்தலைப் புறக்கணித்தால் அது காங்கிரசுக்கு ஆதரவாக முடியுமே என்ற கேள்விக்கு பதிலில்லை. இன்னும் சிலர் காங்கிரசை தோற்கடிக்க வேண்டும், ஆனால் காங்கிரசை எதிர்த்து நிற்கிற பிரதான கட்சிக்கு ஓட்டளிக்க கூடாது.டெபாசிட்டே பறி போகின்ற சுயேட்டைக்கு ஓட்டளித்து ஓட்டுக்களை பிரித்து காங்கிரசினை வெற்றிப் பெற செய்ய வேண்டும் என வித்தியாசமான முடிவெடுத்தார்கள். இன்னும் சிலர் இந்திய தேசியம் நமக்கு எதிரானது. அதனால் இந்திய தேர்தல் கமிஷன் நடத்தும் இத் தேர்தலினை நாம் புறக்கணிக்க வேண்டும். மாநில அரசதிகாரத்தால் எதுவும் இயலாது, இந்தியாவினை விட்டு தமிழ்நாடு பிரிந்து வந்த பிறகுதான் ஈழம் சாத்தியம் என்றெல்லாம் மிக கச்சிதமாக யோசித்து தேர்தலை புறக்கணித்தார்கள். இதில் என்ன சோகம் என்றால்…மக்கள் யாரையும் மதிக்காமல் வழக்கத்திற்கு மாறாக 80% சதவீதத்திற்கு மேலாக வருகை தந்து வாக்களித்து விட்டு சென்றிருக்கிறார்கள்.


மக்களை வெல்லாமல் எதுவும் சாத்தியமில்லை. மக்களிடம் மாற்றம் நிகழ்ந்தாலொழிய மண்ணில் மாற்றம் நிகழப் போவதில்லை. சிறிய இலக்குகளை அடைந்து அது வாயிலாகவே பெரிய இலக்குகளை அடைவதென்பதுதான் இதற்காக வழி. காங்கிரசு தோற்க வேண்டும் என்றால் எதிர்த்து நிற்கிற பிரதான எதிர்க்கட்சி வெற்றிப் பெற்றாக வேண்டும். இது தான் இருந்த ஒரே வழி. பல எதிரிகளை ஒரே நேரத்தில் வீழ்த்தியெறிவதற்கான அரசியல் பலமும், மக்கள் திரளும் இன்னமும் தமிழ் அமைப்புகளுக்கு கைக்கூடாத நிலையில் காங்கிரசினை எந்த விதத்தில் வீழ்த்தலாம் என சிந்திருக்கவேண்டும்.


அதைத்தான் தன்னால் இயன்றளவு நாம் தமிழர் அமைப்பினர் செய்தார்கள். காங்கிரசினை வீழ்த்த நேரடியாக களம் கண்ட அமைப்பினர் இந்த தேர்தலில் இவர்கள் தான். வேலூர், பாபநாசம் சென்னை, இராமநாதபுரம் போன்ற பல தொகுதிகளில் நாம் தமிழர் அமைப்பினர் மீது காங்கிரசார் நேரடியாக தாக்குதல் நடத்தியதும், வீரமிக்க இளைஞர் கூட்டம் எதிர்த்து நின்று போரிட்டதும் நடந்தது . செந்தமிழன் சீமான் அவர்களின் உணர்ச்சிக்கரமான உரைகள் காங்கிரசு போட்டியிட்ட இடங்களில் வெடிகுண்டுகளாய் விழுந்தன. கடைசிநேரத்தில் சீமானை எதிர்த்து காங்கிரசு சார்பாக களமிறக்கப்பட்ட எஸ்.வி.சேகர் “காங்கிரசைப் பற்றி தெரியுமா..?, இந்திய சுதந்திரத்திற்காக சீமானா குரல் கொடுத்தார்..?” என்றெல்லாம் பேசி விட்டு காங்கிரசை விட்டு தங்கபாலு நீக்கியவுடன்” சீமானாவது ஒவ்வொரு தேர்தலில் மட்டும்தான் காங்கிரசை அழிக்க பாடுபடுவார். ஆனால் தங்கபாலு எப்போதும் காங்கிரசை அழிக்க பாடுபட்டு வருகிறார் ,எனவே , ஆயிரம் சீமான்களுக்கு சமமானவர் தங்கபாலு” என்று காமெடி செய்து கலைந்துப்போனார்.


ஒரு வழியாக தேர்தல் முடிவடைந்து முடிவடைந்து முடிவுகள் இன்னும் 2 வாரங்களில் அறிவிக்கப்பட இருக்கின்றன. மக்கள் திரண்டு வந்து தன்னெழுச்சியாக பொங்கி வந்து வாக்களித்தது ஏதோ அருவ அலை அடித்திருக்கிறது என்பதற்கு அறிகுறியாக இருக்கிறது. முடிவுகள் எப்படி வேண்டுமானாலும் வரட்டும். ஆனால் தமிழர்கள் ஒன்று படும் காலம் வந்து விட்டது. சாதி,மதம்,அமைப்பு கடந்து இணைய வேண்டிய இடம் வந்து விட்டது. இல்லையேல் இனம் இருந்ததற்கான அடையாளமே இல்லாமல் போகும் . அதுதான் இத்தனை துயரங்களுக்கு பின்னர் நாம் கற்கிற பாடம்.


விளைந்தது எல்லாம்

நாம் ஏற்கனவே விதைத்தது.

இன்று விதைப்பது எல்லாம்

நாளை விளைவது – சீனப் பெருமொழி

3/16/11

63 நாயன்மார்களும் …. 3 சீட்டு சூதாட்டமும்.


காங்கிரசுக்கு 63 நாயன்மார்களைப் போல 63 இடங்களை ஒதுக்கியிருக்கிறேன் என்று கருணாநிதி தெரிந்து சொன்னாரோ…தெரியாமல் சொன்னாரோ தெரியவில்லை. 63 –ல் முதலாம் நபர் திருஞான சம்பந்தர். 8000 சமணர்களை கழுவிலேற்றி அந்த காலத்து ராஜபக்சே பட்டம் வாங்கியவர். இரண்டாம் நபர் திருநாவுக்கரசர். வயிற்று வலியை காரணம் காட்டி கட்சி மாறியவர். .(யாருக்காவது இந்த காலத்து திருநாவுக்கரசர் நினைவிற்கு வந்தால் நான் பொறுப்பல்ல..) மூன்றாம் நபர் சுந்தரர் . முதலில் ஒரு பெண்ணை மணவறை வரை அழைத்து ஏமாற்றி விட்டு பின் திருவெற்றியூரில் ஒரு மனைவி, திருவாரூரில் ஒரு மனைவி என வாழ்ந்த அந்த காலத்து ‘நான் அவனில்லை’ ஆள். நான்காம் நபர் மாணிக்கவாசகர். குதிரை வாங்க சொல்லி கொடுத்த அரசுப் பணத்தினை கையாடல் செய்த அந்த காலத்து கல்மாடி. இவ்வாறாக நீளுகின்ற இந்த பட்டியலை தான் காங்கிரசாக கருணாநிதி காட்டுகிறார். நவீன நாயன்மார்களும்..அறிவாலய வியாபாரிகளும் ஆடிய 3 சீட்டு சூதாட்டத்தில் தோற்றது என்னவோ கரை வேட்டி கட்டி..முரசொலியில் முழ்கி..கருப்பு சிவப்பில் வாழ்க்கையை தொலைக்கும் வக்கற்ற அப்பாவி தொண்டன் தான்.

.

சோகமும், வேகமும் , நகைச்சுவையுமாய் கலந்து கட்டி அடித்த இக்காட்சிகள் ஒரு வெகுஜன திரைப்பட காட்சிகள் அல்ல . உலகத்தின் மிகப்பெரிய ஜனநாயக நாட்டின் தேர்தல் கள காட்சிகள் இவை. இளகிய மனம் படைத்தோர் இக்காட்சிகளை பார்க்க வேண்டாம் என்று கேட்டுக் கொண்டாலும் அது மிகையல்ல. திரெளபதி துரியோதனனைப் பார்த்து செய்த கிண்டல் தான் 18 நாள் போர்க்களமாக விரிந்தது என்கிறது இதிகாசம். அது போல “இவ்வளவு சீட்டு கேக்குறீங்களே – நிக்க உங்ககிட்ட ஆள் இருக்கா ?” என ஒருவர் அடித்த கிண்டல் தான் 63 ஆக நாம் ஆட வேண்டிய களமாக மாறி நிற்கிறது. அமைச்சர் துரைமுருகன் அடித்த அந்த கிண்டலில் வெகுண்டெழுந்து சென்ற கதர் பட்டாளம் கடைசியில் திரைமொழியில் சொல்வதென்றால் ப்ளாக்மெயில் செய்து 63 இடங்களை திமுகவிடமிருந்து பறித்தது. திமுக விடம் காங்கிரசு ப்ளாக்மெயில் செய்வதற்கு காரணம்…..இருக்கவே இருக்கிறது… இமாலய ஊழல் ஸ்பெக்ட்ரம். இதற்கு நடுவே அண்ணா அறிவாலயத்தில் சிபிஐ ரெய்டு….கனிமொழி,தயாளு அம்மாளிடம் விசாரணை என்றெல்லாம் பரபரப்பு காட்சிகள் வேறு…இதன் நடுவில் இடைவேளைக்கு முந்தைய ஒரு காட்சியில் …ஒரு பாட்டில் கோடீஸ்வரனாக்கும் விக்கிரமன் படத்து பாடல் போல மானமிகு. ஆசிரியர் வீரமணி சுயமரியாதை பேசி புல்லரிப்பை ஏற்படுத்தினார். நடுநடுவே நகைக்கடை அதிபர் போல வந்து நிற்கும் குங்குமப்பொட்டு தங்கபாலு சற்றும் அசராமல் “ மிக சுமூகமாக சென்று கொண்டிருக்கிறது.நாளையும் பேச்சுவார்த்தை தொடரும்” என்பதை சொல்லி வைத்த பாடத்தை தப்பாமல் பேசும் கிளிப்பிள்ளையாய் நிருபர்களிடம் சொல்லி நகைச்சுவையை ஏற்படுத்தினார். சகோதரப் பாசத்தினால் முதல்நாள் லாலி பாடிய திருமாவும், ராமதாசும் மறுநாள் அப்படியே திருப்பி அடித்து மக்களை திகைக்க வைத்தார்கள். நாக்கினால் இவ்வளவு வேகமாய் புரள முடியுமா என்பதற்கு நாசூக்கான ஆதாரங்கள் இவர்கள் . தமிழ்த் தேசிய சகதியாய் திமுகவின் சல்லடையில் தேங்கிக் கிடக்கும் பேராசிரியர் சுப.வீக்கு தற்போது பிடித்த வசனம்..வடிவேலின் அது நேத்திக்கு…இது இன்னிக்கு. காங்கிரஸ் அரசாங்கத்திலிருந்து திமுக வெளியேற போகிறது என உயர்நிலை (?) செயல் திட்டக்குழுவின் தீர்மானத்தினை கேட்டு ( ஆவ்வ்…எவ்வளவு பாத்தாச்சி…) உணர்ச்சிவசப்பட்டு சோனியா ஒழிக…கலைஞர் வாழ்க என அப்பாவி திமுக தொண்டன் அலறி…அலறி தொண்டை புண்ணாகிப் போனதுதான் மிச்சமாய் நின்ற எச்சம்.

.

தன் கட்சியின் கொள்கை பரப்பு செயலாளர் கொள்கை பேச வக்கற்று ஊழல் வழக்கில் சிக்கிக் கொண்டு திகார் சிறையில் களி தின்கிறார் . அவர்தான் குற்றவாளி என காங்கிரசு கட்சியின் மத்திய அரசு சொல்கிறது. முதல்வரின் மகளும்..மனைவியும் எப்போதும் விசாரணை வளையத்திற்குள். இதையெல்லாம் மீறி…கருணாநிதி காங்கிரசு மீது வைத்திருக்கும் அளவற்ற காதலுக்கு காரணம் பதவியின் மீதும்..பணத்தின் மீதும் வைத்துள்ள வெறிதானே ஒழிய வேறென்ன..?

மக்களுக்கான பணி என்ற நிலைமாறி மக்களின் தீராத பிணியாக மாறி நிற்கிறது தமிழ்நாட்டு அரசியல். அழுக்கேறி குடலைப் பிடுங்கும் நாற்றமெடுக்கும் சாக்கடையில் நெளியும் புழுக்களாய் அரசியல் வியாதிகள் இவைகள் நெளிய …இவைகளை சற்றும் கூச்சம் இல்லாமல் பார்க்க பழக்கப் பட்டு விட்டான் தமிழன் . இந்த முறை இந்த கேடு கெட்ட ஆட்டங்கள் சற்றே அதிகம் . ஈழத் தமிழினத்தின் ரத்த கறை படிந்த காங்கிரசின் கரங்களோடு கை குலுக்க திமுக நடந்த நடை…அலைந்த அலைச்சல் இவை எல்லாம் யாரிவர்கள்.. என்பதனை நமக்கு அழுத்தம் திருத்தமாக அடையாளம் காட்டின. பதவியை பாதுகாக்கவும், ஊரை கொள்ளையடித்து சேர்த்து வைத்த ஊழல் காசினை பதுக்கவும் இவர்கள் காட்டிய அக்கறையை சற்றே அழிவின் விளிம்பில் நின்ற ஈழத் தமிழினத்தின் மீதும் காட்டியிருந்தால் கல்லறைகளாவது குறைந்திருக்குமே…

.

இன்றளவும் நம்மால் சீரணிக்கவே முடியாத அழிவுக் காட்சிகள் நம் கண்ணிலே தேங்கிக் கிடக்கின்றன. யாராலும் ஈடு கட்ட இயலாத ஒரு அறிவார்ந்த தமிழினத் தலைமுறை அழிக்கப்பட்டிருக்கிறது .. இனி நாம் கட்ட ஒரு தலைமுறை வேண்டுமே என்ற தவிப்பில் நம்மை தகிக்க வைக்கும் உலகத் தமிழினத்தின் ஒற்றை நாடு உருக் குலைந்து கிடக்கின்றது. இன்றளவும் கோணிப் பைக்குள் அடுத்த வேளை சோற்றிக்காக நாறிக் கிடக்கிறான் நம் இனத்து சகோதரன். பிணந்தின்னி கழுகு கூட உண்ண மறுக்கும் அருவருப்பு பிணமாய் நம் அக்காவையும் ,தங்கையும் சிதைத்துப் போட்டு வைத்திருக்கும் சிங்கள பேரினவாதத்திற்கு உற்ற துணையாய்…ஆயுதங்கள் அள்ளிக் கொடுத்து..ஆட்களை அனுப்பி வைத்து அழித்து முடித்து வைத்திருப்பது யார் என்று உலகத்திற்கே தெரியும்.

.

பதவிகள்…பணங்கள்…என தங்க காசுகள் மினுமினுத்து புரளும் ஓசையில் இனத்தினை காட்டிக் கொடுத்தார்கள் நவீன யூதாசுகள். தன் மவுனமே தன் இனத்தினைக் கொன்றது என்ற குற்ற உணர்வில் சிலுவை சுமக்கிறது தமிழினம்.. நினைவெங்கும் அப்பிக் கிடந்து வன்மம் வளர்க்கச் சொல்கிறது சொந்த சகோதரனின் குருதி. எதன் பொருட்டும் மன்னிக்கவே முடியாத..மறக்கவே இயலாத காயங்களை நம்முள் ஏற்படுத்தியவர்கள் புனிதர்களாய் மாறி ஓட்டுப் பிச்சை கேட்டு வீதியில் வருகிறார்கள். கையோடு…கைகளாய் இணைந்து வரும் அந்த இணக்கத்தின் இடைவெளியில் பாருங்கள் .. சொட்டிக் கொண்டே இருக்கிறது …சரியாக மூடப்படாத இரவு நேரத்து குடிநீர் குழாய் போல நம் ஈழத்தின் ரத்தம்.

.

நம் விரலில் இடப்படுகின்ற அடையாளம் வெறும் மையல்ல. நாம் பொத்தி பொத்தி நம்முள் வளர்த்து வரும் நம் இனத்தின் வன்மம் அது. நம் தமிழினத்தின் ஒற்றைக் கனவான தமிழீழத்தினை தகர்த்த காங்கிரசினை ஆவேசம் கொண்ட தமிழினம் இந்த மண்ணை விட்டு அகற்றட்டும்.வாக்குச் சாவடிக்குள் நுழையும் போது சற்றே எத்தனிப்போம். ஒரு நொடி கண் மூடுவோம். பல்லாயிரக்கணக்கான நம் சகோதரர்களின் பிணங்கள். சகிக்க முடியாத நம் சகோதரிகளின் ஓலங்கள்… எதுவும் அறியாத நம் அப்பாவி குழந்தைகளின் சிதைந்த உடல்கள்..அத்தனையும் நினைவிற்கு வரட்டும். பிறகு அழுத்துவோம். ஒரே அழுத்து. அந்த ஒற்றை அழுத்தலில் பல்கி பெருகி வெடிக்கட்டும் ஒரு இனத்தின் கோபம்.

2/27/11

ஏனெனில்…. அது அவர்களது மரபியல் குணம். – மணி.செந்தில்


“சிற்றில் நல் தூண் பற்றி,’நின் மகன்

யாண்டு உளனோ?’ என வினவுதி ; என் மகன்

யாண்டு உளன் ஆயினும் அறியேன்; ஓரும்

புலி சேர்ந்து போகிய கல் அளை போல,

ஈன்ற வயிறோ இதுவோ;

தோன்றுவன் மாதோ,போர்க்களத்தானே.

– திணை: வாகை துறை: ஏறான் முல்லை.

பொருள்: “ சிறிய வீட்டில் உள்ள நல்ல தூணைப் பற்றிய வண்ணம் ‘உன் மகன் எங்கு உள்ளானோ?’ என வினவுகிறாய்.என் மகன் எங்கிருப்பான் என நானறியேன்; புலி இருந்து பின் பெயர்ந்து சென்ற கற்குகை போல அவனை பெற்ற வயிறு இதுவேயாகும் . அவன் போர் நிகழும் களத்தில் தோன்றுமியல்புடையவன் ( அவனை காண்பதற்கு அங்குச் செல் ) – புற நானூறு –நியூ செஞ்சுரி வெளியீடு .

.

ஒரு காட்சி.

வல்லாதிக்க கழுகுகள் ஒரு சேர ஒன்று சேர்ந்து கொத்தி குதறிப் போட்ட தாய் நிலத்தில் இருந்து மிஞ்சியது,தங்கியதை அள்ளிக் கொண்டு நடந்து முடிந்த பேரவலத்தின் துயர் சாட்சிகளாய் எதிர்காலம் என்னும் அடர் இருட்டின் மீது கவிழ்ந்துள்ள பேரச்சத்தினை சுமந்த வண்ணம் தயங்கி..தயங்கிப் படியே முள்ளிவாய்க்கால் பகுதியிலிருந்து வெளிவந்த மக்கள் திரளிலிருந்த அந்த வயதான முதியவரும், அவர் தள்ளிக் கொண்டு வந்த சக்கர நாற்காலியில் அமர்ந்திருந்த நோயுற்ற அந்த பெண்மணியும்.. ஊரெல்லாம் ஆயுத பிச்சை எடுத்து, உலக சதிகள் பல செய்து பெற்ற வெற்றி தந்த கர்வமும், கண்டிப்பும் நிறைந்த அந்த காவலாளியிடம் சலனமற்ற முகத்தோடு அஞ்சாமல், மறைக்காமல் சொன்னார்கள்..”நாங்கள் தான் வேலுப்பிள்ளை,பார்வதி அம்மாள் – பிரபாகரனின் தாய் தந்தையர்.” ஏனெனில்..அது அவர்களது மரபியல் குணம்.

.

ஒரு மகத்தான விடுதலைப் போர் ஒரு சேர சேர்ந்த வல்லாதிக்க பலத்தால் முறியடிக்கப்பட்ட துயரைத் தவிர அவர்களுக்கு எவ்விதமான அச்சமும், தயக்கமும் இல்லை. கடுமையான இரத்த அழுத்தம், தொடர்ச்சியான வயிற்றுப்போக்கு போன்ற தொகுப்பு நோய்களால் அவதிப்பட்டு வந்த அய்யா வேலுப்பிள்ளையை தூக்கிச் செல்ல முயன்ற சகத் தமிழனின் உதவியை மறுத்து அவராகவே நடந்து சென்றார். பல முறை தடுக்கி கீழே விழுந்தும், மீண்டும் தானாகவே எழுந்து நடந்தார். ஏனெனில்..அது அவர்களது மரபியல் குணம்

.

தங்கள் மகனுக்கும் அதைத்தான் அவர்கள் போதித்தார்கள். மரணம் கண்ணுக்கு முன்னால் தொங்கிக் கொண்டிருந்த போதும் அவர்கள் சலனமில்லாமல் தான் இருந்தார்கள். ஒரு நாட்டை ஆண்ட தலைவனின் பெற்றோர் என்ற முறைமையில் அவர்கள் எவ்வித சலுகையையும், அனுதாபத்தினையும் விரும்பாதவர்களாக இருந்தார்கள். அனைத்தையும் இழந்த அவர்களுக்கு வரலாற்றின் பாதையில் கடுமையாக பழி வாங்கப்பட்ட ஒரு இனத்தின் மக்களுக்காக தங்கள் மகன் நடத்திய அறவொழுக்குடன் வீரம் செறிந்த விடுதலைப் போராட்டம் தந்த பெருமிதம் அவர்களுக்கு இருந்தது. ஏனெனில்..அது அவர்களது மரபியல் குணம்.

.

முதல்வர் வீட்டு மூன்றாம் தலைமுறைப் பேரன் கூட அதிகார போதை தரும் திமிறினால் எளிய காவலாளியைத் துப்பாக்கியை காட்டி மிரட்டும் ஆணவத்தினை அவர்கள் அறிந்திருக்க வில்லை. எளிய வாழ்வினைத் தான் அவர்கள் வாழ்ந்தார்கள். மக்களோடு, மக்களாக வாழ்ந்தார்கள். ஏதேச்சதிகாரத்தோடு நாட்டை ஆர்பாட்டங்களாய் ஆண்ட அதிபர்கள் எல்லாம் எதிர்ப்பு பெருகினால் குடும்பத்தோடு விமானம் ஏறி பயந்து ஓடும் உலகத்தில்…முப்படை வைத்து உலகம் வியக்க வாழ்ந்த ஒரு தலைவனின் குடும்பம் இப்படித்தான் வாழ்ந்தது. இந்த பரந்துப்பட்ட உலகின் முன் எவ்விதமான வேண்டுகோளையும் அவர்கள் வைக்க வில்லை. கடைசிக்காலத்தில் மருத்துவ உதவி கேட்டு அம்மாவின் கைரேகை (?) பதித்து தமிழக முதல்வருக்கு வந்ததாக காட்டப்பட்ட கடிதம் கூட அம்மாவின் நினைவு தப்பிய பொழுதுகளில் தான் வந்தது. ஏனெனில்..அது அவர்களது மரபியல் குணம்.

.

முள்ளிவாய்க்கால் பேரவலத்திற்குப் பின்னர் இராணுவத்தினரால் செட்டிக்குளம் முகாமில் கைது செய்யப்பட்ட அய்யா வேலுப்பிள்ளையும், அம்மா பார்வதியும் பலத்த பாதுகாப்பிற்கிடையே இராணுவப் புலனாய்வுத் துறையினரின் நேரடி கண்காணிப்பிற்கு உட்பட்ட சித்ரவதைகளுக்குப் பெயர் பெற்ற கொழும்பு முகாமிற்கு அழைத்து செல்லப்பட்டனர். இன்றளவும் வெளியிடப்படாத அந்த கடுங்கொடுமைகளுக்கு உள்ளான அய்யா வேலுப்பிள்ளை கடந்த 2010 ஜனவரி மாதம் காலமானார். அவரது மறைவின் போதே அம்மாவிற்கு நினைவாற்றல் மிக குறைவாகவும், தன்னிலை வருவதும் போவதுமாக இருந்தது. மிகுந்த உடல் நலிவுற்ற அவரைச் சிங்கள பேரினவாத அரசு சிகிச்சைக்காக வெளிநாடு செல்ல அனுமதித்தது. அங்கு அக்கா வினோதினி அம்மாவினைக் கவனித்துக்கொண்டார்கள். மேற் சிகிச்சைக்காக இந்திய அரசின் உரிய விசா பெற்று சென்னை விமான நிலையத்திற்கு அம்மா வந்த போது விமானத்தில் இருந்து இறங்காமலேயே அனுமதி மறுக்கப்பட்டு திருப்பி அனுப்பப்பட்டார்.இது குறித்து தமிழக முதல்வர் கருணாநிதியிடம் கேட்டதற்கு ‘தனக்கு எதுவும் தெரியாது’ என்ற வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த பதிலை அளித்தார்.மீண்டும் பல வித அலைகழிப்பிற்குப் பிறகு மீண்டும் இலங்கை சென்ற அவர் இறுதி வரை அங்கேயே இருந்து காலமானார்.இதன் நடுவே அம்மா பார்வதி கருணாநிதிக்கு வேண்டுகோள் கடிதம் ஒன்று எழுதியதாகவும், அதை நன்கு பரிசீலித்த கருணாநிதி மத்தியில் ஆண்ட சோனியா அரசிடம் அனுமதிப் பெற்று,ஆதரவு பெற்று ‘யாரும் வந்து பார்க்க கூடாது, பேசக் கூடாது , அசையக் கூடாது, மூச்சு மட்டும் விடலாம்’ போன்ற பத்துக்கும் மேற்பட்ட கடுமையான நிபந்தனைகளோடு சென்னை வர அனுமதி அளித்ததாகவும் செய்திகள் வந்தன. ஆனால் இங்கிருந்து போன மதியாதார் அழைப்பினை அம்மா பார்வதி அவர்கள் ஏற்கவே இல்லை. சிங்கள பேரினவாதத்தினை விட கேடு கெட்ட தாயக தமிழகத்தின் இழிவான நிலையை கண்ட அம்மா இந்த மண்ணில் கால் வைக்காமல் போய் விட்டார். ஏனெனில்.. அது அவர்களது மரபியல் குணம்.

.

நம் தேசியத்தலைவர் பிரபாகரனை ஒரு தலைவராக, சமரசம் அடையா சமரனாக உருவாக்கியத்தில் அவரது தாய் பார்வதி அம்மாளுக்கு மிக முக்கிய பங்கு உண்டு. வல்வெட்டி துறையில் வாழ்ந்த திருமேனியார் குடும்பத்து திருவிளக்காக பார்வதி அம்மாள் திகழ்ந்தார். இயல்பான ஒரு தாய்க்குள்ள அனைத்து விதமான சுயநலப்பற்றுகளும் அவருக்கும் உண்டு. தாமதமாக வந்தாலே தவித்துப் போகும் தாய்மை அவருக்குள்ளும் இருந்தது. வீட்டிற்குள் மாட்டப்பட்டிருந்த தன் மகன் இருந்த புகைப்படங்களைத் தன் மகனே எடுத்துச் சென்று பதுக்கிய போது அச்சப்பட்டார். போராட்ட வாழ்வின் அனைத்து ஏற்றத்தாழ்வுகளையும் தன் வாழ்நாளில் ஒரு சேர சந்தித்த அந்த தாய் கடுமையான அனுபவங்களின் வாயிலாய் சிரமப்பட்டார். ஆனால் தாய்நிலத்தின் மீதான அளவற்ற பற்று, சுதந்திர வாழ்வின் மீதான வேட்கை அனைத்தும் முழுமையாக உள்வாங்கிய ஒரு அதிமனிதனின் தாய் தன்னுடைய உணர்வுகளை ,தன்னுடைய பற்றுக்களை சுருக்கி , வீட்டின் நான்கு சுவர்களைத் தாண்டிய பெரு வாழ்வு வாழ்வதற்காக மகனை அனுப்பி வைத்தார் .அதைத்தான் இக் கட்டுரையின் தொடக்கத்தில் உள்ள புறநானூற்றுப் பாடல் சுட்டுகிறது. ஏனெனில் .. அது அவர்களது மரபியல் குணம்.

.

நம் அம்மா பார்வதி அவர்களை மருத்துவ சிகிச்சைக்காக கூட இங்கு அனுமதி மறுக்கப்பட்ட சம்பவம் உலகத்தின் மிக இழிவான மக்களாய் நாம் வாழ்ந்து வருகிறோம் என்பதற்கான சாட்சியாக விளங்குகிறது. அதையும் தாண்டி செய்த தவறுகளை மறைக்க கருணாநிதி அடித்த கடிதக் கூத்துக்கள் நம்மை இன்னமும் தலைக் குனிய வைக்கிறது . நம் இனத்திற்காக நாடு கட்டி போராடிய மகத்தான தலைவனின் தாயாருக்கு மருத்துவ உதவி கூட வழங்க மறுத்த கருணாநிதியின் துரோகமும், இது போன்ற காட்சிகளை வழக்கம் போல ‘நாளை மற்றொரு நாளே’ என்பது போல வேடிக்கைப்பார்த்த நமது கையாலாகாதத்தனமும் எதிர் வரும் தலைமுறைப்பிள்ளைகளால் எச்சிலால் உமிழப்படும். அம்மா இதையெல்லாம் புரிந்துக் கொண்டுதான் இறுதி காலத்தில் எங்கும் செல்லாமல் தன் சொந்த மண்ணில் எரிந்து தாய் நிலத்தின் உரமாக கலந்துப் போனார். அம்மாவினை எரித்த சிதையில் மறுநாள் நாய்களை வைத்தெரித்து உலகிற்கு மீண்டும் தன் மனநோயாளித்தனத்தினை அப்பட்டமாக வெளிகாட்டியிருக்கிறது சிங்கள பேரினவாதம் . ஈழ மக்களும், புலம் பெயர்ந்த தமிழ் உறவுகளும் அசைவற்ற விழிகளுடன் உலகத்தின் பதிலுக்காக காத்திருக்கின்றனர். உலகமும் சிங்கள பேரினவாதத்தின் இது போன்ற இழிவான செயல்களை தான் வழக்கம் போல் காத்து வரும் மெளனத்தினால் அங்கீகரித்து இருக்கிறது. உலகத் தமிழர்கள் பெரும் துயரோடு அமைதி காக்கிறார்கள் . துயருடன் கலந்த அமைதி தான் புரட்சியின் கருவாக அமைகிறது என்பதை எகிப்து காட்டியிருக்கிறது . இழந்தவர்கள் பெறுவதற்கு சுதந்திரம் மட்டுமே இருக்கிறது. பெறுவார்கள். ஏனெனில்.. அது அவர்களின் மரபியல் குணம்.

.

துயர் கவிழ்ந்த பெரு நிலத்தினை , வெறித்துப் போன விழிகளை சுமக்கும் பசித்த வயிற்றினை, சொந்த ரத்த உறவின் நிர்வாணத்தினை, சொந்த தங்கையின் உடலின் மேல் வல்லுறவாய் நிகழும் பாலியல் தாக்குதலை , அவளின் ஈரக்குலையை அறுக்கும் போது எழும்பும் ஈனக்குரலை, எவ்வித சலனமுமில்லால் பார்த்து விட்டு, அடிப்படை குற்ற உணர்ச்சிக் கூட கொள்ளாமல் நம்மால் இந் நாட்களையும் கடக்க முடிகிறது. தேர்தல் குப்பைத் தொட்டிக்கு அருகே பதவி எச்சிலைக்காக சண்டையிட்டுக் கொள்ளும் தெரு நாய்களை நம்மால் எவ்வித சங்கடமும், அருவருப்பும் இல்லாமல் இயல்பாக பார்த்து விட முடிகிறது. இனத்தினை அழித்த ஓநாய் ஓட்டு பிச்சைக்காக வீட்டுக்கு வரும் போது அவன் விரல் நீட்டி தரும் காசை காற்சட்டைக்குள் போட்டுக் கொண்டு அவன் ஊற்றும் சாராயத்தினை சப்புக் கொட்டி குடிக்க முடிகிறது. இனத்தின் எதிரிகளை என்ன விலை கொடுத்தேனும் எப்படியாவது வீழ்த்த நினைக்க முயலாமல் அவமானத்தின் இழி பிறவிகளாய் தத்துவ குகைக்குள் இருட்டு சித்தாந்தம் பேசி, புள்ளி விபர புலம்பல்களோடு கொல்லைப் புறம் வழியாய் எதிரியின் எச்சிலைக்காக நியாயம் பேச முடிகிறது . இன்னமும் நம்பிக்கை இழக்காமல் எதிலும் முடங்கிப் போகாமல் தாங்க முடியாத துயரோடு, வீழ்ந்தவர்கள் சிந்திய உதிரத்தினை உடலிலே பூசிக் கொண்டு வன்மம் கொண்டு இனம் வெல்ல வீதியில் நிற்பவர்களை நயவஞ்சமாக புறம் பேசி சுகம் காண முடிகிறது.

சகிக்க முடியாத துயரொன்று உண்டெனில் – இவற்றை சகித்துக் கொண்டு வாழ்வதுதான்.

பார்வதி அம்மாவின் இழப்பும் அவ்வாறே.

உரமாய் கலந்தவையும்.. மாவீரர்களின் மூச்சுக்காற்றாய் அலைபவையும் முடங்கிப் போகாது. அழுத விழியோரத்தில் நம்பிக்கை என்ற சிவப்பினை ‘பிரபாகரன்’ என்ற சொல் தேக்கும். நாளை அந்த மண் மீண்டும் பூக்கும். ஏனெனில் அது அவர்களது மரபியல் குணம்.

எம் தாய்க்கு வீரவணக்கம் .