5/9/09

எங்கள் அண்ணன் சீமான் தான் இது

வேந்தன் என்பவர் பெயரில் எங்கள் சீமானா இது..? என்ற தலைப்பில் எனக்கு ஒரு மின் அஞ்சல் வந்துள்ளது. அண்ணன் சீமான் இப்போது அ.இ.அ.தி.மு.வை ஆதரிப்பது குறித்த நிலைப்பாடு குறித்து மிக தவறுதலான ,உள்ளீடற்ற வெற்றுக் கருத்துக்கள் அந்த மின் அஞ்சலில் தெரிவிக்கப்பட்டுள்ளன. யாருக்கும் ஓட்டு போட வேண்டாம் என வேண்டுகோளை வைத்து முடியும் அந்த கட்டுரையில் எதை செய்தாலும் குறை கூறி சிதைக்கும் மனப்பான்மையும் ,சாத்தியமில்லா தீர்வுகளும் தான் மிகுதியாக உள்ளன. அ.இ.அ.தி.மு.க ஆட்சியில் தலித்துக்கள் பாதிக்கப்பட்டதாக புதிதான ஒன்று போல சொல்லியிருக்கும் வேந்தன் அடிப்படையில் ஒன்றை மிகத் தெளிவாக புரிந்துக் கொள்ள வேண்டும். தலித்துகள் மீதான வன்முறை என்பதும்…அடக்குமுறை என்பதும் அதிமுக ஆட்சிக்கு மட்டும் சொந்தமானது அல்ல.இங்கே கும்பகோணம் பகுதிகளுக்கு வந்து பாருங்கள். திமுக உள்ளூர் அரசியல் பிரமுகர் மூலமாக தான் காட்டூர் என்ற பகுதியில் வைக்கப்பட்ட அண்ணல் அம்பேத்கார் சிலை அகற்றப்பட்டது. அதன் விளைவாக நடைபெற்ற போராட்டங்களில் தலித் இளைஞர்கள் மீது எண்ணற்ற வழக்குகள் போடப்பட்டன. நீலப்புலிகள் இயக்கம் என்ற தலித் இயக்கம் தான் அந்த போராட்டத்தை இது நாள் வரை கூர் மழுங்காமல் வைத்து போராடி வருகிறது. எல்லா ஆட்சியிலும் தான் தலித் மக்கள் மீதான வன்முறை நடந்துக் கொண்டே இருக்கிறது..இதை நான் சொல்வதால் தலித்துக்கள் மீதான வன்முறையை விட்டு விடலாம் என்று பொருளல்ல.. இன்று அனைத்திற்கும் அப்பாற்பட்டு ஒரு உணர்வு மிக்க ஒரு விஷயத்தில் கை கோர்த்து நிற்கிறோம்
அது இன எதிரி காங்கிரஸை தோற்கடிப்பது.வேந்தன் சொல்வது போல தேர்தலை தமிழுணர்வாளர்களும், இன உணர்வாளர்களும் புறக்கணித்தால் அது யாருக்கு சாதகமாக அமையும்…? இதற்கு வேந்தன் நேரடியாக காங்கிரஸ்க்கு ஓட்டு கேட்கலாம். வீடு எரிந்துக் கொண்டிருக்கிறது ..தூய்மைப் படுத்தப்பட்ட மினரல் வாட்டரை கொண்டுதான் தீயை அணைப்போம் என்கிறார் வேந்தன். நாங்கள் எங்கள் பக்கத்தில் ஓடுகின்ற வாய்க்காலில் ஓடுகின்ற சாக்கடை நீரை கொண்டு தீயை அணைக்கிறோம். ஜெயலலிதாவை ஆதரிப்பது எங்களது பிரதான நோக்கமல்ல.காங்கிரசை தோற்கடிப்பது. அதற்கு ஓட்டு போடாமல் இருப்பதும், 49 o போடுவதும், சுயேட்சைகளுக்கும், சிறிய கட்சிகளுக்கும் வாக்களிப்பதும் தீர்வில்லை. இவ்வாறு செய்தால் ஓட்டுக்கள் பிரிந்து அது காங்கிரஸ்க்கு வெற்றியை அளிக்குமே ஒழிய ,கண்டிப்பாக நம் இனத்திற்கான அரசியல் விருப்பங்களை நிறைவேற்றாது.
காங்கிரஸ் எதற்காக தோற்கவேண்டும் என்பது குறித்தான புரிதல் நம் அனைவருக்குமே உண்டு. இந்த முறை காங்கிரஸ் தோற்பதுதான் நாளை இனநலன்களுக்கு எதிராக செயல்பட எண்ணும் அரசியல் கட்சிகளுக்கு ஒரு அச்சத்தை கொடுக்கும். காங்கிரஸ் வெற்றி பெற்றால் இன்று ஆதரவு தெரிவிக்கும் ஜெயலலிதாவிற்கே நாம் தனி ஈழத்திற்கு ஆதரவு தந்தது தவறு என்ற எண்ணம் உண்டாகி விடும் அல்லவா..? .மக்களின் பொங்கி எழுகின்ற உணர்வினை கண்டு எதிரிகளே நம் கோட்டைக்குள் வருகின்றனர். வருபவர் வந்து நம் கழுத்தறுத்தால் …நாம் கொண்டாடிய கருணாநிதிக்கே இந்த கதி என்றால் … எதிரிக்கு எந்த கதி என்பதை காலம் சொல்லும்.
அண்ணன் சீமான் இடதுசாரி தமிழ் தேசிய அரசியல் பரப்பில் இன்று மின்னும் நம்பிக்கையாக தெரிகிறார்.அவரின் அப்பழுக்கற்ற தியாகமும், போர்க்குணமும் எண்ணற்ற இளைஞர்களை கவர்ந்து வருகிறது. காங்கிரஸ் தோற்பது மட்டும் தான் எங்கள் நோக்கமாக இருக்கிறது.தோற்றால் ஈழ அவலம் தீர்ந்திடுமா…என்ற கேள்விக்கு…எங்களிடம் இப்போதைக்கு பதிலில்லை. அதற்காக எம் இனத்தை அழித்தவர்களை, துணை போனவர்களை எங்களால் எதன் பொருட்டும் வெற்றி பெற அனுமதிக்க இயலாது. தனி ஈழம் அமைத்து தருவேன் என்று ஜெயலலிதாவின் சொல்லுக்கு இந்த முறை வெற்றியை கொடுத்துதான் பார்ப்போமே..வசனங்களை நம்பியும்..வாதுரைகளை நம்பியும் எத்தனை முறை நாம் வாய்க்கரிசி போட்டுக்கொண்டதில்லையா….? – நம்பிக்கைதான் வாழ்க்கை..
தேர்தல் புறக்கணிப்பு என்பதற்கு பதிலாக நேரடியாக காங்கிரஸ்க்கு ஓட்டு போடுங்கள் என்று வேந்தன் நேரிடையாக கேட்டுவிடலாம். இப்படி உணர்வாளர்களை ஓட்டு போடாமல் தடுப்பது யாருக்கு உதவும் என்று நினைக்கிறீர்கள்…கண்டிப்பாக அது காங்கிரஸ்க்குதான் தட்டில் வெற்றியை வைத்து அளித்து போல ஆகும். எதை எதையோ நினைத்து அவலை இடிப்பது போல..சீமானை போகிற போக்கில் சம்பந்தமே இல்லாமல் பொத்தாம் பொதுவாக விமர்சித்து விட்டு போவது எந்த விதத்திலும் நியாயமில்லை.
இழிவிலும்,அவலத்திலும் சிக்குண்டு கிடக்கிறது நம் இனம். எதிர்காலம் ஒன்றே நமக்கெல்லாம் உண்டா என்ற கேள்வியோடும்..பதைபதைப்பும்,விரக்தியும்,வேதனையும் மிஞ்ச ..ஏதாவது நல்லது நடக்காதா என்ற கனவில் அலைகிறோம் நாங்கள். இணையத் தளங்களில் எழுதினாலும் களத்திலும் இறங்கி இணையத்தமிழர் இயக்கம், உலகத் தமிழ் மக்கள் அரங்கம், தமிழ்நாடு அரசியல், தமிழ் இளையோர் கூட்டமைப்பு,என பல்வேறு குழுமங்களை சேர்ந்த தோழர்கள் வீதியில் இறங்கி காங்கிரசை வீழ்த்தி விட முயன்று கொண்டு இருக்கின்றனர். அண்ணன் சீமானும் அதைத்தான் செய்கிறார். எது இப்போதைய உடனடி தேவை என்று புரிந்துக் கொள்வது மிக அவசியம். இனம் ,மொழி…என்று ஏதாவது ஒன்று இருந்தால் தான் வேந்தன் போன்றோர் போகிற போக்கில் எழுதி விட்டு போக முடியும்.தேர்தல் புறக்கணிப்பு என்ற சொல்லுக்கு எங்களைப் பொறுத்தவரை இப்போதைய அர்த்தம் காங்கிரசை காப்பாற்றுவது.
அண்ணன் சீமான் உலகமெங்கும் வாழும் தமிழர்களின் அடையாளமாய் இருக்கிறார்.முழங்கி விட்டு போவது மட்டுமில்லாமல் களத்தில் இறங்கியும் எதிரிகளை நிர்மூலப்படுத்தி வருகிறார்.இந்த இனத்திற்காக தனிமைச் சிறைக் கண்டு,தடைகள் பல உடைத்து ,தியாகத்தின் சின்னமாக…நாம் காணும் புரட்சிக்காரனாக இருக்கிறார். இது போன்று கட்டுரைகள் வரைவது அவரை பாதிப்பதை விட..ஒட்டு மொத்த இனவெழுச்சி உணர்ச்சியையே அது சிதைக்கும்..வேண்டாம்.. நம்மை நாமே திட்டிக் கொள்ளவும்..கூட்டம் சேர்த்துக் கொண்டு குறை கூறி ஏசிக் கொள்ளவும் வேறு காலங்கள் வரும்..இதுவல்ல நேரம்.
காங்கிரசினை தோற்கடிப்போம்..தேர்தல் களத்தினில் துரோகிகளை அழிப்போம்…எதிரியாய் இருப்போர் ஒன்று அழிய வேண்டும்…இல்லையேல் நண்பர்களாக வேண்டும்…இல்லையேல் நண்பர்கள் போலவாவது நடிக்க வேண்டும்…இது எது சரி என்பதை எதிரியே தீர்மானிக்கட்டும்.
என்னை தாக்கிய அம்பைத்தான்
இன்று ஆயுதமாக ஏந்தி இருக்கிறேன்…
அது என்னை காப்பாற்றாமல் போனாலும்
பரவாயில்லை..
எதிரிகளை வீழ்த்தட்டும்

No comments:

Post a Comment