8/20/12

பெரியாரின் ‘பச்சைத் தமிழரும்’-தொடரும் தமிழ்த்தேசிய முழக்கங்களும்..


தாயக விடுதலைக்காக ஈழ மண்ணில் பெருக்கெடுத்த மண்ணின் மைந்தர்களின் செங்குருதிதான் தமிழர்களின் மற்றொரு தாய்நிலமான தமிழகத்திலும் தமிழ்த் தேசிய இனத்திற்கான உரிமைக் குரலை கூர்மைப்படுத்தி,செழுமைப்படுத்தி,வலுவேற்றியது. தமிழ்நாடு தமிழருக்கே என முழங்கும் மண்ணின் மைந்தர்களின் குரல் வரலாற்றில்  எப்போதும் இல்லாத அளவிற்கு இப்போது உயர்ந்து ஒலிக்கத்துவங்கி இருப்பதன் அரசியல் மிகவும் நுணுக்கமானது. தமிழர் என்ற உணர்வின் அரசியல் வெளியாக இதுவரை கருதப்பட்டு வந்த திராவிடம் முரண் செயல்பாடுகளால் தனது இறுதி காலத்தில் நிற்கிறது. அவரவர் அளவிற்கு திராவிடர் –தமிழர் என சிந்திக்க வைத்ததில் இம்மண்ணின் மைந்தர்களுக்காக புறப்பட்டு இருக்கின்ற புதிய அரசியலுக்கு பெரும் பங்கு இருக்கிறது.
எப்படிப்பட்ட மகத்தான தத்துவமும் ,கருத்தும்  உரிய தலைமைகளால் உறுதியாக்கப்படாவிட்டால் உருக்குலைந்து போகும் என்ற சரித்திர உண்மைக்கு சமீபத்திய சரியான எடுத்துக்காட்டு திராவிடம் .
திராவிடம் என்பது மொழியா என்றால் இல்லை.
தமிழ்,தெலுங்கு,கன்னடம்,மலையாளம் என நீளும் ஒரு மொழிக் குடும்பத்தின் பொதுப்பெயராகத்தான் நான் சூட்டினேன் என்கிறார் கால்டுவெல். நான் இனத்தால் திராவிடன்,மொழியால் தமிழன் என கதறும் திமுக தலைவர் கருணாநிதி கருத்துப்படி அது இனத்தினை குறிக்கும் சொல்லா என்றால் ஒரு இனத்திற்கான வரையறைகளான ஒரே மொழி, குறிப்பிட்ட நிலம், பொதுவான பொருளாதார வாழ்வு,பொது பண்பாட்டில் வெளிபடும் தாம் ஓரினம் என்ற உளவியல் என்பவைகளான எவையும் திராவிடத்திற்கு பொருந்தவில்லை. பிறகு திராவிடம் ஒரு நிலமா என ஆயும் போது வடவேங்கடம் தென்குமரியோடு தமிழன் எல்லை முடிந்து விட்டது எனில் திராவிட நிலம்  என்பது என்ன..? .மராத்தியும்,குசராத்தும் கூட ஒரு காலத்தில் திராவிட நிலங்களாக கருதப்பட்டிருக்கிறது .1948 ஆம் ஆண்டில் திருவாரூர் மாநாட்டில் உரையாற்றிய தந்தை பெரியார் இனி திராவிடம் என்ற சொல் மண் சார்ந்ததாக இருக்க இயலாது என அறிவித்தார்.   பிறகு நிலமும்,இனமும்,ஒரு மொழியும் இல்லாத திராவிடம் கடந்த 60 ஆண்டுகளாக ஒரு பெரு நிலத்தை ஆண்டு கொண்டிருக்கிறது. இன்னமும் ஆள துடிக்கிறது எனில் இந்த மண்ணின் பூர்வீக குடிகளான  தமிழர் என்கிற தேசிய இனத்தின் உரிமைக்குரல் எப்படி தவறாகும் .?
 இன்றைய திராவிட கருத்தியல்களுக்கு மூல அமைப்பாக தோன்றிய நீதிகட்சியின் தோற்றம் 1916 –ல் நடந்தது. பார்ப்பனரல்லாதோர் அமைப்பாக துவங்கிய அதன் துவக்கம் ‘திராவிடம்’ என்ற பெயரில் துவங்கப்படவில்லை என்பது இங்கு கவனிக்கத்தக்கது. 1916 துவங்கி அதன் இறுதியான காலம் 1936 வரையிலான 17 ஆண்டுக் காலத்தில் தமிழர் எவரும் அக்கட்சியில் தலைவர் ஆனதில்லை.  அது மட்டுமில்லாமல் பார்ப்பனரல்லாதோர் அமைப்பாக கருதப்பட்ட நீதிக்கட்சியின் ஆதரவோடு என்.ஆர்.சேதுரத்தினம் அய்யர் என்ற பார்ப்பனர் கூட அமைச்சராக முடிந்தது.
 ஆனால் அக்கட்சியில் இருந்த இரட்டைமலை சீனிவாசன்,திரு.வி.ஐ.முனுசாமி பிள்ளை,திரு.தர்மலிங்கம் பிள்ளை , திரு என்.சிவராஜ் போன்ற  படித்த பட்டதாரி தமிழர்கள் அமைச்சராக கூட ஆகமுடியவில்லை. தமிழனாக, தாழ்த்தப்பட்டவனாக பிறந்ததுதான்  இவர்களின் மாபெரும் தகுதி குறைவு.  1923 முதல் 1933 வரை சென்னை சட்டமன்றத்திற்கு சென்னை தொகுதிக்கு உரிய 4 பொது இடங்களுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் 3 பேர் தமிழர் அல்லதோர். 1 தமிழர். மேலும் நீதிக்கட்சி ஆண்ட 16 ஆண்டு காலத்தில்  சென்னை மாநகராட்சிக்கு தெலுங்கரே கமிசனர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டனர். 1916-ல் நீதிக்கட்சி பிறந்த போது  தமிழ்,தெலுங்கு, ஆங்கிலம் மூன்று மொழிகளிலும் மூன்று நாளிதழ்கள் துவங்கப்பட்டன. ஆங்கிலத்தில் ஜஸ்டீஸ் எனவும், தெலுங்கில் ஆந்திர பிரகாசிகா எனவும் துவங்கப்பட்ட அந்த நாளிதழ் தமிழில் மட்டும் ‘திராவிடன் ‘ என்ற பெயரில் வெளிவந்தது மிகவும் கவனிக்கத்தக்கது.
திராவிடம் பார்ப்பனர்களுக்கு எதிரான ஒரு குறியீட்டு சொல். தமிழன் என்றால் பார்ப்பான் புகுந்து விடுவான்.திராவிடன் என்றால் பார்ப்பனுக்கு இடமில்லை என்பதான திராவிட சிந்தனை மரபு எங்கிருந்து துவங்கியது என நாம் ஆராயும் போது  தென்னிந்தியாவில் பிறந்த திருஞான சம்பந்தரை ’திராவிட சிசு’ என  அழைப்பு ஆதிசங்கரனின் விளிப்பு    நமக்கு தெளிவாக அறிவுறுத்துவது என்னவென்றால்  20 ஆம் நூற்றாண்டின் அரசியல் மற்றும் சமூகத்தேவைகளே பார்ப்பனரல்லாதோரை ஒரு குடையின் கீழ் திரட்டும் அரசியல் தந்திரோபயமான (political tactics)  சொல் ‘திராவிடம்’ என்பதுதான் .
எதையும் இவரிடம் இருந்துதான் துவங்க வேண்டி இருக்கிறது. இதையும் இவரிடமிருந்துதான் துவங்கி இருக்கிறோம். தமிழ்த் தேசிய உணர்விற்கு எதிராக பெரியார் நிறுத்தும் அரசியல் கண்டிப்பாக முரண் தன்மை உடையது என்ற புரிதலில் தான் நாம் பெரியாரை அணுகுகிறோம்.
தமிழ் நாட்டினை தமிழன் தான் ஆள வேண்டும் என்ற உரத்தக்குரலை முதன் முதலில் அரசியல் தளத்தில் எழுப்பிய தந்தை பெரியாரை தமிழ்த்தேசிய உணர்வின் மூலவராக நாம் அறிகிறோம். தமிழ்நாடு தமிழருக்கே  என்ற குரலை தனது அரசியல் வாழ்க்கையின் துவக்க காலத்திலும், இறுதி காலத்திலும் தீர்க்கமாக முழங்கிவிட்டு போன அவரது தெளிவு  இன்று மாற்றார்கள் இந்த மண்ணை ஆள வேண்டும் என்ற துடிப்பை உள்ளுக்குள் உருவேற்றிக் கொண்டு உதட்டில் திராவிடம் முழங்கும் அறிஞர்களிடம் உண்டா என்பதை நாம் சற்று விரிவாக பார்ப்போம்.
‘1924 முதல் 1954 வரை ஒரு தமிழன் கூட முதன் மந்திரியாக வரமுடியவில்லை. முதன் முதலாகத் தமிழைத் தாய்மொழியாக கொண்ட தமிழர் ஒருவர் முதலமைச்சராக வந்திருக்கிறார்”. (காமராசர் முதல்வரான போது தந்தை பெரியார் விடுதலையில் 3-12-19)
காமராசரை தந்தை பெரியார் ஆதரித்தது வரலாற்றின் ஏடுகளில் நீக்கமற நிறைந்திருக்கிறது. காமராசரை தந்தை பெரியார் ஆதரித்து பேசிய பெரும்பாலான கூட்டங்களில் அவரை ‘பச்சைத் தமிழர்’ என அழைத்ததன் அரசியலை இப்போது உள்ள ’திராவிட பற்றாளர்கள்’ ஏற்பார்களா ? –இதில் பச்சை என்கிற சொல்லில் தான் தந்தை பெரியாரின் ஆன்ம விருப்பம் புதைந்து கிடக்கிறது. மிகவும் தூய இரத்த கலப்பில்லாத மண்ணின் மரபணு மைந்தனாக (purest)  காமராசரை தந்தை பெரியார் உருவகிக்கிறார். வெறும் தமிழர் என்று சொன்னால் போதாது.அதிலும் கறார் தன்மை கொண்டு,இன்னமும் வடிகட்டிய வார்த்தையான ‘பச்சை தமிழராக’காமராசரை தந்தை பெரியார் அடையாளம் காட்டியது எதற்காக.? தமிழ்நாட்டினை திராவிடன் என்ற பெயரால் தெலுங்கனும்,கன்னடனும்,மலையாளியும், ஆள்வதற்காகவா..?- ஒரு தலைவனை முன்னிருத்தும் போது தந்தை பெரியாருக்கு இருந்த புரிதல்,அக்கறை ஏன் இந்த திராவிடவியாளர்களுக்கு இல்லை ?
தமிழன் என்று பேசினால் தந்தைபெரியாரை எதிராக நிறுத்துவதென்பது அவரது சிந்தனைகளுக்கு திராவிட பற்றாளர்கள் செய்கிற துரோகம்.
 ஒரு திராவிட இயக்கத்திற்கு கன்னடத்து ஆரிய தலைமை வாய்த்தது பற்றியோ,பெரியாரின் பள்ளியில் பயின்று சாய்பாபாவின் பெருந்தொண்டராக மாறிப் போன மஞ்சள் துண்டு போர்த்தி ,குடும்ப உறுப்பினர்களின் சோதிட ஆலோசனைகளின் பேரில் செயல்படும்  கருணாநிதி தலைமை தாங்குவது பற்றியோ, ஒரு தனியார் நிறுவனமாக  திக வை மாற்றிய கார்ப்பரேட் முதலாளி வீரமணி பற்றியோ , ஈசானி மூலையில் புறாக்களை பறக்க விட்டு,திருப்பதி கோவிலில் திராவிட கட்சி துவக்கப் பத்திரிக்கையை வைத்து துதித்த விஜயகாந்த் பற்றி திராவிட பற்றாளர்களுக்கு எவ்வித அக்கறையுமில்லை. ஆனால் வார்த்தைக்கு வார்த்தை பெரியார் விசுவாசம் போற்றும் இம் மண்ணின் மைந்தர்கள் மேல் தான் இவர்களுக்கு இத்தனை காழ்ப்புணர்வு.
மொழி வாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்ட பிறகு ,முல்லை பெரியாற்றிலும், காவேரி நதி நீரிலும்,பாலாற்றிலும், பிற ’திராவிட’ சகோதரர்களால் பாதிக்கப்பட்ட பிறகு,இந்த இத்துப் போன திராவிடத்தினை  மற்ற திராவிட இனங்கள் என இவர்களால் அடையாளம் காட்டப்பட்ட தெலுங்கர்களோ,மலையாளிகளோ,கன்னடர்களோ  ஒரு முடியளவு கூட மதிக்காத நிலை இருக்கும் போது தமிழனை மட்டும் திராவிடனாய் இருக்கச்சொல்லுவதன் அரசியல் இந்த மண்ணில் தெலுங்கர்களும், மலையாளிகளும், கன்னடர்களும் பெற்றிருக்கின்ற, தொடர்ந்து பெற்று வருகின்ற சமூக,கலை,அரசியல்,பண்பாட்டு செல்வாக்கு மற்றும் ஆதிக்கம் தொலைந்து விடும் என்ற அச்சத்தின் காரணமாக என்பது அப்பட்டமாக தெரிகிறது .

தமிழன் என்றால் பார்ப்பனர்கள் இடம்பெற்று விடுவார்கள் என்கிற அச்சம் தேவையற்றது மற்றுமல்ல, நம்மை நம் அடையாளத்தின் மூலம் அங்கீகாரம் பெறுவதை தடுக்கின்ற திராவிடத்தின் சூழ்ச்சி என நாம் தெளிவாக வேண்டும். இன்று எந்த தமிழ்த்தேசிய அமைப்பிலும் பார்ப்பனர்கள் இடம் பெறுவது இல்லை. .இது வரை இடம் பெற்றுதும் இல்லை. ஆனால் திராவிடக் கட்சிகளில் இன்று இடம் பெற்றுள்ள பார்ப்பனர்களின் பட்டியலை நாம் வெளியிட்டால் இப்பக்கங்கள் போதாது தமிழ் ,தமிழர் என்று பேசினால் இந்து ராம்,துக்ளக் சோ, மாலன்,சுப்பிரமணிய சாமி போன்ற அக்கிரகாரத்து அசல் மனிதர்களுக்கு இன்றும் வேப்பங்காயாகத்தான் கசக்கிறது என்பதை நாம் வேடிக்கை பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம். ஆரியப்படையை வென்ற நெடுஞ்செழியன் தமிழ் மண்ணில் உண்டு. ஆரிய படை வேண்டாம், ஆரியத்தின் சடையை தொட்ட திராவிட மன்னன் என்று எங்கேயும் குறிப்புகள் உண்டா.? 
1933 ஆம் ஆண்டிலேயே தமிழ்நாடு தமிழருக்கே என முழங்கிய தந்தை பெரியாரின் முழக்கம் அப்போது ஆரிய பத்திரிக்கையான ஆனந்த விகடனுக்கு கடுமையான கோபத்தினை ஏற்படுத்தியது. ‘எலி வலை எலிகளுக்கே’ என எகத்தாளம் பேசவும் வைத்தது, ஆரியத்தின் தீவிர எதிரி தமிழ்த் தேசியமாகத்தான் இருந்திருக்கிறதே ஒழிய திராவிடம் எக்காலத்திலும் இல்லை.

திராவிடத்தின் இன்றைய இலக்கு தமிழ் மண்ணில் தமிழனைத் தவிர மற்றவர்களுக்கான அரசியல் இடத்தினை உறுதி செய்வது . இம் மண்ணின் மைந்தர்கள்  மண்ணை ஆள விரும்பும் இயல்பான விருப்புறுதியை குலைப்பது.
நான் பிறப்பால்,மொழியால்,இனத்தால்,பண்பாட்டால் தமிழன். நான் ஏன் திராவிடன் என அழைக்கப்பட வேண்டும் என்று கேட்டால் யாரிடமும் பதிலல்லை.  பார்ப்பனரல்லாதோருக்கான ஆரிய எதிர்ப்பு அரசியல் குறியீட்டுச் சொல்தான் திராவிடம் என்றால் இன்றைய திராவிடம் என்ற கருத்தியலின் அரசியல் வடிவங்கள் அதற்கு முற்றிலும் முரணானவை. நான் மொழியால் தமிழன்,இனத்தால் திராவிடன்,நாட்டால் இந்தியன் என குழப்பும் கருணாநிதி  1947க்கு முன் பிறந்திருந்தால் என்னவாக இருந்திருப்பார்.? கால்டுவெல் ஒப்பிலக்கணம் எழுதுவதற்கு முன்னால் பிறந்திருந்தால் என்னவாக இருந்திருப்பார்..? .
இந்தியம்,திராவிடம் என்ற இரண்டுமே தமிழ்த்தேசிய கருத்தியல்களுக்கு எதிரானவை. தமிழரின் தனித்த அடையாளங்களை, இறையாண்மையை மறுப்பவை. மேலும் இவைகள் தான் ஆரியத்தினை பாதுக்காக்கும் கவசங்களாய் இன்று செயல்படுபவை.ஈழத்தின் அரசியலில் சிங்களனின் ஆதிக்கத்தினை எதிர்க்கும் திராவிட பற்றாளர்கள் இங்கே ..இந்த மண்ணில்  தமிழனின் அரசியலில் தெலுங்கனின், கன்னடனின் ஆதிக்கத்தினை ஏன் இங்கே எதிர்க்க மறுக்கிறார்கள் ?
திராவிடம் எனும் சொல் ஆரியர் உருவாக்கிய சொல்.இது முந்தித் தமிழர் வரலாற்றிலோ, பழந்தமிழ் இலக்கியங்களிலோ எங்கும் இல்லை. திராவிடம் என்பது கற்பனை –(பாவலரேறு பெருஞ்சித்திரனார். –வேண்டும் விடுதலை –பக்கம் எண் 294,295 )
புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் கூட தனது இறுதிக்காலத்தில் தமிழ்த்தேசியராகத்தான் வாழ்ந்தார் என்பதும்,திராவிட நாடு என வருகின்ற இடத்தில் செந்தமிழ்நாடு என திருத்தினார் என்பதும் வரலாறு. எம் இனத்தின் தேசியத்தலைவர் மேதகு வே.பிரபாகரன்  இந்த இனத்தினை தமிழ்த்தேசிய இனம் என்றுதான் வரையறுத்தாரே தவிர திராவிட இனம் என திருகி குழப்பவில்லை.
தமிழர்களில் தாழ்த்தப்பட்ட ஒடுக்கப்பட்டோரை ஆதி திராவிடர்கள் என அழைத்த திராவிட பற்றாளர்கள் ஆதி திராவிடர் என ஆந்திராவில் யாரையாவது அடையாளம் காட்ட இயலுமா ? தமிழ்நாட்டில்  தாழ்த்தப்பட்ட தமிழர்களின் நிலை கருதி 1890- துவங்கப்பட்ட பறையர் மகாஜன சபை 1910 ஆண்டு கால்டுவெல்லின் ஒப்பிலக்கண நூலின் தாக்கத்தினால் ‘ஆதி திராவிடர் மகாஜன சபை’ என பெயர் மாற்றம் அடைந்தது. இந்த சபை 1918 ஆம் ஆண்டில் நடைப்பெற்ற மக்கள் தொகை கணக்கெடுப்பின் போது தங்களை பறையர்-பஞ்சமர் என குறிக்கக் கூடாது, ஆதி திராவிடர் என குறிக்க வேண்டும் என மனு அளித்தது. ஆனால் தெலுங்கர்கள் இதை ஒப்புக் கொள்ளவில்லை. தங்களை ஆதி ஆந்திரர் என அறிவிக்கவேண்டும் என போராடிய தெலுங்கர்கள் வென்றார்கள். தாழ்த்தப்பட்ட கன்னடர்களும் தங்களை ஆதி திராவிடர் என அழைக்கக்கூடாது என்றும் தங்களை ஆதி கன்னடர் என்றுதான் பதிய வேண்டும் எனவும் போராடி வென்றார்கள். 1922 –ல் சென்னை சட்டமன்றத்தில் நீதிக் கட்சி கொண்டுவந்த தீர்மானத்தின் படி தமிழன் ஆதி கன்னடன் ஆதி கன்னடன் ஆனான். தெலுங்கன் ஆதி தெலுங்கன் ஆனான். ஆனால் தமிழனை மட்டும் ஆதி திராவிடன் ஆக்கி ‘திராவிட’ தொடர்பினை அறுந்து விடாமல் பாதுகாத்தது நீதிக்கட்சியில் ஆதிக்கம் பெற்ற தெலுங்கர்களின் திட்டமிட்ட சூழ்ச்சியே ஆகும்.  ஆந்திராவினைச் சேர்ந்த திரைப்பட நடிகர் என்.டி.ராமராவ் அந்த மண்ணுக்கான அரசியலை முன் வைத்து தெலுங்கு தேசம் துவங்கினார். ஆனால் நம் நாட்டு நடிகர் விசயகாந்த் திராவிடத்தில் தேசியத்தினை ஊற்றி முற்போக்கில் முழ்கினார். ஏனெனில் திராவிடம் என்று சொன்னால் தான் தமிழர் அல்லாத மாற்றார்கள் தமிழ் மண்ணில் அரசியல் பிழைக்க தகவாக இருக்க முடியும்.
தந்தை பெரியார் திராவிடம் என்ற கருத்தியலை சமூகத்தளத்தில் பயன்படுத்தியதன் நோக்கம் மிக வெளிப்படையானது. தீவிர பார்ப்பன எதிர்ப்பினை சமூக மாற்றத்திற்காக தன் கையில் எடுத்த தந்தை பெரியார் சமூகக் கொடுமைகளுக்கு ஆதாரமாக இந்து மதமும், அது பாதுகாக்குகிற பார்ப்பன மேலாண்மையும் இருப்பதை கண்டார். எனவே தான் இந்து மத எதிர்ப்பு,மற்றும் அது சார்ந்த கடவுள் மறுப்பு, அது வளர்த்து வந்த சமூக பண்பாட்டு காரணிகளை வேறோடு வீழ்த்துதல் ஆகியவற்றை தனது அரசியலாக அவர் கொண்டார். இந்து மத பண்பாட்டினை தாங்கிப் பிடிக்கும் மிகப்பெரிய ஆயுதங்களாக தமிழ்மொழியும், அதன் இலக்கியங்களும் இருப்பதை உணர்ந்தார். தமிழன் என்று சொன்னால் ஆரியன் வந்து புகுந்து விடுவான் என்கிற கவலையும் அவருக்கு இருந்தது. மேலும் அக்காலத்தின் பெரியார் சிந்தனை வெளிக்கு மாற்றாக தமிழ்த்தேசியத்தினை முன் வைத்த மறைமலை அடிகளார்,ம.பொ.சி,திரு.வி.க போன்றோர் சமய ஆதரவாளர்களாக திகழ்ந்தது பெரியாரின் கவலையை அதிகரித்தது.ஆனால் பெரியாரின் கொள்கைகள் சமூகத்தளத்தில் வலுவாக வேரூன்றிய பின்னர் எழுந்த பாவாணர்,  பாவலரேறு பெருஞ்சித்திரனார், பாரதிதாசன்  போன்றோர் பெரியாரை உள்வாங்கி, அதை மேலும் செழுமைப்படுத்தி காலத்திற்கு ஏற்றாற் போல் தமிழ்த்தேசிய கருத்தியலை படைக்க முயன்றனர். பெரியாரின் அக விருப்பமான தமிழ்த்தேசிய கருத்தியலை தத்துவார்த்தமாக நிறுவியதில் அய்யா பழ.நெடுமாறன்,அய்யா.பெ.மணியரசன்,தோழர்.தியாகு,பேரா.சுப.வீ போன்றோர்க்கு அதிகம் பங்கு உண்டு. சித்தர் மரபில் துவங்கி ,தந்தை பெரியாரின் சிந்தனை மரபின் தொடர்ச்சியாக செழுமையடைந்து, ஈழம் கற்றுத்தந்த பாடங்களை உள்வாங்கி இன்று தமிழ்த்தேசிய கருத்தியல் தனக்கென அரசியல் வெளியையும் தகவமைக்க துவங்கியுள்ளது. தமிழ் மொழி கல்வி குறித்து ஆழமாக சிந்தித்த தந்தை பெரியாரை ஆங்கிலம் படிக்கச்சொல்லி தமிழை தவிர்க்கச்சொன்னார் பெரியார் என முழங்கும் திராவிட பற்றாளர்கள்
”ஆங்கிலம் வளர்ந்த மொழி-விஞ்ஞான மொழி என்பதும் தமிழ் வளர்ச்சி யடையாத பழங்கால மொழி என்பதும் எனது மதிப்பீடு .இதை நான் சொன்னதற்கான மிக முக்கியமான நோக்கம் தமிழ்மொழி ஆங்கிலம் அளவிற்கு விஞ்ஞான மொழியாக,பகுத்தறிவு மொழியாக ஆகவில்லை என்பதுதானே தவிர, தமிழ்ழொழி மீது எனக்கு  தனி வெறுப்பில்லை. நான் பேசுவதும் ,எழுதுவதும் தமிழில் தான்”. (1-12-1970 விடுதலை தலையங்கம்) என்று தமிழ்மொழி மீது பெரியார் கொண்டிருக்கிற பற்றினை, மொழி வளரவேண்டும் என்கிற பரிதவிப்பினை உணர்வார்களா..?. அவருக்கு தமிழ் மொழி மீது இருந்த காத்திரம் அதன் சமயம் சார்ந்த தன்மை பொறுத்ததே தவிர கண்டிப்பாக  அதன் இனம் சார்ந்த  தன்மை பொறுத்தது இல்லை.
 தந்தை பெரியார் தனது இறுதி காலம் வரை முழங்கிய முழக்கம் தமிழ்நாடு தமிழருக்கே. அவரது இறுதி பிறந்த நாள் அறிக்கையிலும் (1973 செப்டம்பர் ) தனது உறுதியான ,இறுதியான விருப்பத்தினை உரக்கச் சொல்லி விட்டுத்தான் போனார். தந்தை பெரியார் நின்ற காலமும் ,களமும் இன்று வெகுவாக மாறி இருக்கின்றன.  வெகு சன அரசியல் விழிப்புணர்வு கூடியிருக்கிறது. ஈழத்தின் அழிவு உணர்வினையும்,விழிப்பினையும்,பாடங்களையும் போதித்து இருக்கிறது. எனவே ,  என்ன சொன்னாலும் அப்படியே ஏற்காதே என்றும் சிந்தித்து செயல்படு என்றும் அறைகூவிய தந்தை பெரியாரின் கருத்துக்களை மண்ணுக்கேற்ற மார்க்சியம் போல சூழலின் பாற்பட்டு, தற்காலத்திற்கேற்றாற் போல் தகவமைக்க வேண்டிய மாபெரும் கடமை அறிவுலகத்திற்கு உண்டு. தமிழ்த் தேசிய கருத்தியலை சமூக நீதி புரிதலின் வழி நின்று பெரியார் சிந்தனை மரபின் தொடர்ச்சியாய் வளர்த்து வார்த்தெடுக்க வேண்டியது தமிழர்களின் கடமை.
தந்தை பெரியார் பிறப்பால் கன்னடர். அதை மறைக்காமல்,மறக்காமல் வெளிப்படுத்திய உண்மையாளர். தமிழ்மண்ணில் தனக்கென எழுந்த அரசியல் ஆதரவை தன் பதவிக்காக பயன்படுத்தாமல்  ஒரு தமிழனை முன் நிறுத்திய தகைமையாளர். அர்ஜெண்டினா நாட்டில்பிறந்தாலும் கியூப விடுதலைக்கு பாடுபட்ட சே குவேரா போன்ற, உலகப்பந்தின் ஏதோ மூலையில் பிறந்தாலும் உலக மாந்தனின் பசி பற்றி சிந்தித்த மாமனிதர் மார்க்சைப் போல ஆளுமை மிக்க புரட்சியாளர். அவரை புறக்கணித்து தமிழ்த் தேசமோ,தமிழ்த் தேசியமோ இல்லை. மாறாக அவர் வகுத்த பாதையில் தான்  தமிழர்கள் இன்றளவும் தனக்கான தேசியக் கருத்தியலோடு நடக்கிறார்கள்.
ஆம் எம் தந்தை பெரியார்.
 கண்டிப்பாக கன்னடனுக்கோ,தெலுங்கனுக்கோ,மலையாளிகளுக்கோ அல்ல.  
 தொடர்புடைய நூல்கள்:
1.திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் –கால்டுவெல்
2. திராவிடம் தமிழ்த்தேசியம்-பெ.மணியரசன்-பன்மை வெளி வெளியிடு
3. பெரியார் ஈவேரா சிந்தனைகள் –வே. ஆனைமுத்து.-பெரியார்-நாகம்மை கல்வி அறக்கட்டளை
4.தமிழகத்தில் பிற மொழியினர் –ம.பொ.சிவஞானம்- புலம் வெளியீடு
5.பெரியார்-தமிழ்-தமிழர்-தமிழ்நாடு –தொல்தமிழன்.-கரந்தை வெளியிடு
6. மார்க்சியம்,பெரியாரியம்,தேசியம்- எஸ்.வி.ராஜதுரை –விடியல் பதிப்பகம்
7. பெரியாரின் இடதுசாரி தமிழ்த்தேசியம் -சுப.வீரபாண்டியன் -தமிழ் முழக்கம் வெளியீடு
8.பெரியாரும் பெருந்தலைவரும்- கோபண்ணா- நவ இந்தியா பதிப்பகம்

 -மணி.செந்தில்

No comments:

Post a Comment