இன்னும் சில நாட்களில் மாவீரர் தினம் உலகத் தமிழர்களால் அனுசரிக்க இருக்கின்ற நிலையில் இந்த வார ஆனந்தவிகடனில் வெளிவந்திருக்கும் ’பெண் போராளி ’யின் பேட்டி கடுமையான அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கின்றது . ஒட்டு மொத்த போராளிகளின் உணர்வினையும் பிரதிபலிப்பதாக படிப்பவர் கருதும் வகையில் மிக திறமையாக உருவாக்கப்பட்டுள்ள அந்த பேட்டியை நாம் வெறுமனே கடந்து விட முடியாது.
இறுதிக்கட்ட முள்ளிவாய்க்கால் போர் முடிவடைந்து மூன்று ஆண்டுகள் நிறைவடைந்து விட்ட பின் தமிழ்த் தேசிய இனம் தன்னகத்தே அடைந்திருக்கின்ற மாற்றங்கள் மகத்தானவை . ஈழம் என்கிற நாடு தமிழ்த் தேசிய இனத்தின் தணியாத தாகமாய் இன்று உருவெடுத்து நிற்கின்றது. 12 கோடிக்கும் குறைவில்லாத இனமாக தமிழ்த் தேசிய இனம் தழைத்து நின்றாலும் தன் பிள்ளைகளை காப்பாற்ற முடியாமல் போனதற்கான காரணங்களையும், அதனை சார்ந்த உலக ஒழுங்கினையும் ஆய்விற்கு உட்படுத்தி, எதிர்காலம் ஒன்றை புதிதாக சமைக்க தமிழ்த் தேசிய இனம் தன்னையே தயார் படுத்தி வரும் நிலையில் ..விகடனின் இந்த பதிவினை நாம் சாதாரணமான ஒன்றாக கருதிவிட இயலாது.
தீரமும், தியாகமும் நிறைந்த ஒரு விடுதலைப் போராட்டம் என்பது தோல்வி, வெற்றி நிலைகளுக்கு அப்பாற்பட்டது . உலகத்தில் வாழும் பல்வேறு தேசிய இனங்கள் கடுமையான பல இன்னல்களையும், இழப்புகளையும் தாண்டி தான் விடுதலை காற்றை சுவாசிக்கின்றன . முள்ளிவாய்க்கால் முடிவல்ல என்பது ஒரு சாதாரண சொற்றொடர் அல்ல. நம் கண்ணில் வழிகின்ற கண்ணீரை துடைத்து விட்டு..இன்னும் மூர்க்கமாக..இன்னும் திறமையாக.. மீண்டெழுதலுக்கான உந்துதல். அத்தகைய உந்துதலைத்தான் ஒரு பெண் போராளியின் பேட்டியாக விகடன் வெளியிட்டு இருக்கும் பதிவு மிகத் திறமையாக சிதைக்கிறது. ’எல்லாம் முடிந்து விட்டது’ என்பதான குரல் தொடர்ந்து இயங்குவதற்கான மனநிலையை வீழ்த்துகின்ற அரசியலாகவே நம்மால் உணர முடிகிறது.
தலைவர் இல்லை என்கிற குரலை சற்று உயர்த்தியே முழங்கும் அந்த பதிவு குறிவைத்து மாவீரர் மாதத்தில் ஏவப்பட்டதன் நோக்கம் ஆராயத் தக்கது. எம் தேசிய தலைவர் பிரபாகரன் இல்லை என்பதை உலகத் தமிழினம் ஒத்துக் கொள்ள வேண்டும் என்கிற அழுத்தமும் அந்த பதிவில் தொனிக்கிறது. தேசியத் தலைவர் பிரபாகரன் உலகத் தமிழினத்தின் முகமாக ,முகவரியாக, அறவியல் அடையாளமாக திகழ்கிறார். அவரது உன்னத தலைமையும், அர்ப்பணிப்பும், தியாகமும் உலகத் தமிழர் வாழும் நிலங்களில்..குறிப்பாக தமிழ்நாட்டின் அரசியல் சூழல்களில் மிகப் பெரிய தாக்கத்தினை இன்று ஏற்படுத்தி இருக்கின்றன. நேர்மையும், தியாகமும் உடைய சமரசமற்ற தலைமை குறித்தான இக்கால தமிழின இளைஞர்களின் கனவாக தேசியத் தலைவர் திகழ்கிறார். அவரது நிலைப்பாடுகளை இன்று பெருகி வரும் நூல் வாசிப்பு மூலம், இணையத்தின் மூலம் அறிந்துக் கொள்ளும் இளையத் தலைமுறையினர் சுயநல ,சமரச, வியாபார அரசியல் தலைவர்கள் மீது கடுமையாக ஆவேசம் கொள்கின்றனர். ஒரு தலைமை மாசற்ற வடிவமாக, புனிதத்துவமாக திகழ வேண்டும் என்கிற எளிய இளைஞனின் அக விருப்பம் ..எம் தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்களின் ஒப்பற்ற தியாகம்,வீரத்தினால் விளைந்தது ஆகும் . எனவே தான் அவர் இருக்கிறார் என்கிற நினைவோடு தாயக கனவை நோக்கி உலகத் தமிழர் இன்று பயணப்படுகின்றனர்.
வரலாற்றில் எப்போதும் இல்லாத அளவிற்கு’மாவீரர் தினம்’ குறித்த அளவீடுகள் புனிதத் தன்மை வாய்ந்ததாக மேம்பட்டு நிற்பதன் காரணமும் இது தான்.இன்று உலகம் முழுவதும் தமிழர் வாழ்கின்ற நிலங்களில் மாவீரர் தினம் அனுசரிக்காத பகுதி இல்லை என்கிற நிலை ஏற்பட்டு இருக்கிறது. சாதி மறுப்பு,பெண்விடுதலை, பொருளாதார சமநிலை வாழ்வு, விடுதலை உணர்வு ஆகியவற்றின் குறியீடாக தேசியத் தலைவர் திகழ்கிறார். அதனால் சிங்கள பேரினவாதம் உடல் ஒன்றினை காட்டிய போதும், அவ்வப்போது தமிழரின் உளவியலை சிதைக்கின்ற செய்திகளை கசிய விடுகின்ற போதும்.. மீறி வரும் கண்ணீரையும் கண்ணுக்குள்ளேயே தேக்கி, அடங்காத ஆவேசம் விளைவிக்கும் கனத்த மெளனத்தோடு, காயங்கள் தந்த வன்மத்தோடு தமிழர்கள் இறுகிக் கிடக்கிறார்கள். தங்களை இயக்கும் சக்தியாக தலைவரின் இருப்பு குறித்த நம்பிக்கைகளை தங்களுக்குள் விதைத்து கொண்டு முன்னேறுகிறார்கள். இவையெல்லாம் விகடன் அறியாததா என்ன..?
ஒரு பெண் போராளி பாலியல் தொழிலாளியாக மாற்றப்பட்டதன் சூழல் நமக்கு இன்னும் போராடுவதற்காக ஆவேசத்தினை ஏற்படுத்த வேண்டும். மாறாக அந்த பதிவு’எல்லாம் முடிந்து விட்டது’ என உரத்த குரலில் அறிவிப்பது..இப்போது இருக்கின்ற கேடான சூழலில் இருந்து மீண்டு வருவதற்கான கதவுகளை அடைப்பதற்கு சமம். தமிழ்நாட்டில் இருக்கின்ற,புலம் பெயர்ந்து இருக்கின்ற தமிழர்கள் ஈழம் அழிவில் அரசியல் செய்கிறார்கள் என்கிற குற்றச்சாட்டு..இதற்காக போராடி வருகின்ற அமைப்புகளை பின்னடைவிற்கு உள்ளாக்கும் செயலாக தெரிகிறது . ஈழம், தலைவர் பிரபாகரன் போன்ற சொற்கள் பயன்படுத்தக் கூட தடையாகவும்,அச்சமாகவும் இருந்த இந்தியா உள்ளீட்ட உலகச்சூழல் இன்று மாறி இருக்கிறது. ஈழத்தின் அழிவும், நடந்த இனப்படுகொலைகளுமே சென்ற தமிழ் நாட்டு சட்டமன்றத் தேர்தலில் அதிகம் வாக்களித்த இளைய தமிழ்ச் சமூகம் கொண்டிருந்த காரணங்களாக விளங்கின. முகமூடியும்,புனைவும் அணிந்த அரசியல் தலைமைகள் இளைய தமிழ்ச் சமூகத்தின் ஆவேசத்தினால் நிர்மூலமாக்கப்பட்டு முடிந்திருக்கிறார்கள். எனவே ஈழத் தமிழர்களின் அழிவு என்பது பலவித காரணிகளை கொண்டு விரிவாக்கப்பட்ட ஆழ்நிலை காரணமாக, பல்வேறு அரசியல் செயல்களுக்கு மூலமாக இருக்கின்றது. ஈழத்தின் அழிவு ஓட்டு மொத்த தமிழ்த் தேசிய இனத்தின் இழப்பு என்பதாலேயே அரச, நில எல்லைகளுக்கு எல்லாம் அப்பாற்பட்டு மாவீரன் முத்துக்குமார் உள்ளீட்ட பல தமிழர்கள் தங்கள் உயிரை ஈகம் செய்தார்கள். தமிழ்நாட்டில் பிறந்த முத்துக்குமார் ஈழ நாட்டின் விடுதலையை தனது தாயக விடுதலையாக கருதினார். அங்கு விளைந்த இழப்புகளை தன் இழப்புகளாக உணர்ந்த காரணத்தினால் தான் உயிர் ஈகம் செய்யும் அளவிற்கு வலியை பெற்றார். ஒரு முத்துக்குமார் இறந்தார். ஆனால் இன்னும் பல முத்துக்குமார்கள் உயிருடன் உலவி, தன் இனத்திற்காக களமாடி நிற்பதற்கான நம்பிக்கைகளை விதைத்தது அந்த பிரபாகரன் என்கிற ஒற்றை சொல்.
தலைவர் இல்லை. நீ படுத்து தூங்கு. நாங்கள் அடிமைகளாக வாழ்கிறோம் என்று சொல்ல ஈழத்தமிழர் மட்டுமல்ல யாருக்குமே உரிமை இல்லை. ஈழமும் ,தமிழகமும் ஒரு தேசிய இனத்தின் இரு தாய்நிலங்கள் என்பதாலேயே முத்துக்குமார் ,அப்துல் ரவூப் போன்ற இளைஞர்கள் தன் உயிர் தந்தனர். அதை தலைவர் பிரபாகரன் அவர்களும் நன்கு உணர்ந்திருந்த காரணத்தினால் தான் தமிழ்நாட்டில் உயிர் ஈகம் செய்த முத்துக்குமாருக்கு‘மாவீரர்’ தகுதி அளித்து விடுதலை புலிகள் அன்று வீர வணக்கம் செலுத்தினர் .
நம் கண் முன்னால் நம் இனம் அழிந்த நிகழ்வு ஆறாத குற்ற உணர்ச்சியாய் இன்று தமிழர் மனதில் மாறி நிற்பதன் விளைவே இன்று கூடங்குளம் அணு உலை பிரச்சனையாக இருக்கட்டும், மூன்று தமிழரை மரண தண்டனையில் இருந்து காக்கும் போராட்டமாக இருக்கட்டும், காவிரி,முல்லை பெரியாறு என நதி நீர் சிக்கலாக இருக்கட்டும் ..திரண்டு வருகின்ற இளைஞர் கூட்டம் அமைப்புகள் ,கட்சிகள் சாராத்து என்பது குறிப்பிடத்தக்கது . இங்கு ஈழமே ஆதியாக இருக்கிறது அனைத்திற்கும்.
குளிர் நிறைந்த காலமென்றாலும் ,கொட்டும் பனியிலும் குழந்தை குட்டிகளுடன் நின்று சிங்கள இன அதிபர் ராசபக்சே விற்கு எதிராக ஆவேசமாக எதிர்ப்பினை காட்டிய புலம் பெயர் உறவுகளின் உணர்வினை‘ எல்லாம் முடிந்து விட்டது’ என அறிவித்து உத்திரத்தில் போட்டு விடலாமா ?
உலகத் தமிழர்களின் ஓயாத உழைப்பினால் போர் குற்றங்கள், இனப்படுகொலைக்கு எதிரான விசாரணை என சிங்கள நாட்டிற்கு எதிராக வருகிற ஜனவரி மாதத்தில் வர இருக்கின்றதே.. அதையும் ‘ எல்லாம் முடிந்து விட்டது’ என அறிவித்து அழித்து விடுவோமா..?
ஒரு பெண் போராளி பாலியல் தொழிலாளியாக மாறிய அவலத்திற்கு சிங்கள பேரினவாதம் காரணமே ஒழிய..இழிநிலை துடைக்க ,விடுதலை கனவோடு போராடியவர்களும், போராடுபவர்களும் காரணம் இல்லை. என் சகோதரி ஒரு பாலியல் தொழிலாளியாக எதிரியால் மாற்றப்பட்டிருப்பதன் சூழல் ‘எல்லாம் முடிந்து விட்டது’ என நான் முடங்கிப் போவதால் மாறி விடுமா..?.
சுகமாக,பாதுகாப்பாக இருந்துக் கொண்டு ஈழத்தை பற்றி பேசுகிறார்கள் என்றால்.. நீரில் முழ்குபவர்களை கரையில் நிற்பவர்கள் தான் காப்பாற்ற இயலுமே ஒழிய..குறைந்த பட்சம் காப்பாற்ற கோரி கத்த முடியமே ஒழிய.. கரையில் நிற்கிறாய்..உனக்கென்ன தெரியும் முழ்குதலின் வலி..? ..கத்தாமல் அமைதியாக நில் என சொல்வதுதான் சரியானதா…?
தலைவர் இல்லை என்பதை ஒத்துக் கொள்ள மறுக்கிறார்கள் என்றால்.. அவரை நடமாடும் உடலாக பார்த்தவர்களுக்கு தான் இருப்பு,இறப்பு சிக்கல். அவரை அறவியல் அடையாளமாக , தமிழின மரபின் வடிவமாக, தானே தோன்றிய தத்துவமாக,உளவியல் வலிமையாக காண்கிற இளையத் தமிழ் பிள்ளைகளுக்கு ’அவர் இருக்கின்றார்’ .
இறுதி கட்டப் போரின் போது விகடன் ஆற்றிய ஊடகச் சேவை மகத்தானது.ஆனால் சமீப காலமாக விகடன் குரலின் தொனி பிசகி இருப்பதை நுட்பமான வாசகர்கள் கவனித்து தான் வருகிறார்கள் . தமிழினம் புத்தெழுச்சி அடைந்து..தம் இனத்திற்காக ஒன்று பட்டு போராடி சிங்கள பேரினவாதத்திற்கு எதிராக ,இழைக்கப்பட்ட ,இழைக்கப்படுகின்ற அநீதிகளுக்கு எதிராக,இனப்படுகொலைக்கு எதிராக..நம்பிக்கை ஒளியை பாய்ச்ச வேண்டிய விகடன் அவநம்பிக்கை குழியில் தள்ளியிருப்பது அதன் ஊடக நேர்மைக்கு நேர்ந்த சறுக்கல்.
பேட்டி வழங்கி இருப்பதாக சொல்லப்படுகின்ற எம் சகோதரி பாலியல் தொழிலாளியாக மாறிய சூழல் தனி நபருக்கு விளைந்தது அல்ல. அது எம் இனம் அடைந்த இழிவு. இந்த இழிவும் ,அழிவும் ஏற்பட்டு விடக் கூடாது என்கிற காரணத்தில் தான் தேசியத் தலைவர் பிரபாகரன் போராடினார். மறுக்கப்பட்ட தாயக விடுதலைக்காகவும், இழைக்கப்பட்ட இனப்படுகொலைக்கும் எதிராகத்தான் இன்றளவும் தமிழக வீதிகளிலும், உலக வீதிகளிலும்..எண்ணற்ற இளைஞர் கூட்டம்..தன் வாழ்க்கை, தன் சுகம் மறுத்து வீதிகளில் போராடுகிறார்கள்.
அவநம்பிக்கை ஒளி அளித்து இனத்தை ,இனத்தின் விடுதலையை முடிக்க சிங்கள பேரினவாதம் முனைந்திருக்கிறது. எத்தனையோ காட்சிகள் தொடர்ந்து அரங்கேறுகின்றன..உளவியல் உறுதி ஏற்பட்டு விட கூடாது சாகசங்கள் புரியப்படுகின்றன. இந்த உளவியல் தாக்குதலையும் தமிழ்த்தேசிய இனம் வெல்லும்.
இனப்படுகொலைக்கு எதிராக,மறுக்கப்பட்ட தாயக விடுதலைக்காக போராடியவர்கள், போராடுபவர்கள் போரின் மீது விருப்பம் கொண்டவர்கள் அல்லர். மாறாக இது சிங்கள பேரினவாதம் திணித்த போர். போர் கொடுமையானது தான். அதை விட கொடுமையானது அடிமைகளாக வாழ்வது. எல்லாவற்றையும் விட கொடுமையானது’எல்லாம் முடிந்து விட்டது’ என்றெண்ணி அனைத்தையும் சகித்து கொண்டு வாழ்வது. மெளனமாய் நிற்பது. அவநம்பிக்கையோடு அடங்குவது.. இதுதான் விகடன் விளைவிக்க விரும்புகிறதா..?
மேலும் ஒரு பெண் போராளியின் துயரம் மிகுந்த பதிவாக முடியும் அந்த பேட்டியில் .. அந்த துன்பத்திற்கான தீர்வாக காட்டப்படுவது எதுவுமில்லை என்பது மட்டுமல்ல..ஈழத் துயரத்தின் காரணமாக விளையும் அரசியலையும் தமிழ்நாட்டில் உள்ள தலைவர்கள் கை விட்டு விட வேண்டும் என்பதுதான். ஈழத்தின் துயரமும், இனப்படுகொலைகளும் இன்று ஒரு குறிப்பிட்ட நிலத்தின் அரசியலாக இருந்த நிலை மாறி , உலகத்தின் கண்களை திறந்திருக்கின்றன. ஈழத்தின் துயரம் தோய்ந்த முடிவு பக்கத்து நிலமான தமிழ்நாட்டில் கூட அரசியலாக மாறாமல் போனால் அதை விட பின்னடைவு என்னவாக இருக்க இயலும்..? .மனித உரிமை,இனப்படுகொலை போன்ற பொதுவான அம்சங்கள் உலகச் சமூகம் அனைத்திற்கும் தொடர்புடையது தானே..
முடிவாக விகடன் இந்த பெண் போராளியின் பதிவு மூலம் நிறுவ விரும்புவது ஈழத்தின் அவலம் மட்டும் தான் என்றால் இந்த எதிர்வினையே தேவையற்றது. ஆனால் வேரோடும், வேரடி மண்ணோடும் ஈழ விடுதலைப் போராட்டம் பிடுங்கி எறியப்பட்டு விட்டது என்கிற பிரகடனம் தான் இதில் மிக முக்கிய அம்சமாக வெளிபடுகிறது. இந்த பிரகடனம் இன்றளவும் இனப்படுகொலைக்காக, போர் குற்றங்களுக்காக, தனி ஈழத்திற்காக, பொதுவாக்கெடுப்பிற்காக எடுக்கப்படும் முன்னெடுப்புகளை பலவீனப்படுத்துவதோடு வீழ்த்தவும் முயல்கிறது.
எக்காலமும் சிங்கள பேரினவாதத்தின் முகம் ‘எல்லாம் முடிந்து விட்டது’ என்றெண்ணி சிரிப்பினை சிந்த வைக்க எம்மால் முடியாது. கடைசித் தமிழன் இருக்கும் வரை ஈழம் சாத்தியமே என்ற செய்திதான் உலகத் தமிழினத்தின் ஒற்றை பிரகடனம்.இதுதான் நாம் கற்றுக் கொள்ள வேண்டிய பாடம்.
இதுவெல்லாம் விகடனுக்கு புரியும். இருந்தும் ஏன் இந்த வில்லங்க வேலை ..? யாருக்கு தெரியும்..? சிங்கள ரத்னாக்கள் புன்னகைக்கிறார்கள்.
-மணி செந்தில்
No comments:
Post a Comment