தீர்மானகரமானது எதுவெனில் நாளும் முதிர்ந்து வரும் போராட்ட மன உறுதி, நடக்கின்ற இழிவுகளுக்கும் ,அழிவுகளுக்கும், ஒடுக்குமுறைகளுக்கும் எதிரான புரட்சிகர மாறுதல் தேவை எனும் உணர்வு, மற்றும் அது இயலும் என்னும் நிச்சயப்பாடு இவை தான் “- ரெஜி டெப்ரே (புரட்சிக்குள் புரட்சி என்ற நூலிருந்து...)
முள்ளிவாய்க்கால் அவலத்தில் பெருகிய தமிழனின் குருதியின் ஈரம் தமிழக வீதிகளில் மூண்டெழுந்த இளையோர்களின் விழிகளில் வன்மமாய் படர்ந்தது. கடந்த 2 மாதங்களுக்கு முன் தமிழ்ச்சமூகத்திற்குள் ஆழமாய் வேரூன்றி படர்ந்திருக்கும் சாதீய முரண்களை முற்றிலும் கடந்து விட்டு தமிழர்களாய் கரம் கோர்த்து தமிழக அனைத்துக் கல்லூரி மாணவர்கள் தம் இனத்திற்காக களத்தில் நின்றது வரலாற்றுப் பெருமிதம் வாய்ந்தது. உண்மையில் சாதிகள் அற்ற இன ஓர்மை உடைய ஒரு போராட்ட வெளியை தமிழக அனைத்துக்கல்லூரி மாணவர்கள் ஏற்படுத்தினார்கள். எம் தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் தமிழக மாணவர்களின் கரங்களில் புகைப்படமாக, உடைகளில் போராட்ட அடையாளமாக,உரத்து முழங்கிய முழக்கங்களில் துளிர்த்த ஆவேசமாய் மாறி நின்றார்.தலைவரின் மகன் பாலச்சந்திரனின் உணர்வுகளை சுமந்த விழிகள் தமிழக இளையோர்களை இயக்கும் சக்தியாக மாறிப் போயின..
ஆனால் இக்காட்சிகள் கடந்த சில நாட்களாக மாறியிருக்கின்றன.. தமிழ்த் தேசிய இனம் தனது விடுதலைப்பாதையில் விரைந்து பயணிக்க தடையாக சாதீயம் என்கிற சமூக முரணே முதன்மையான காரணியாக விளங்குகிறது என்பதை தான் அண்மையில் அதிகரித்திருக்கும் சாதீய மோதல்கள் காட்டுகின்றன. தமிழர் என்கிற தேசிய இனத்திற்குள்ளாக இரண்டு சாதிகளுக்குள் நிகழும் முரண் ஒட்டு மொத்த இனத்தின் எழுச்சியை மட்டுப்படுத்துவதோடு மட்டுமில்லாமல் வீழ்த்தவும் முயல்கிறது. மேலும் இவ்வாறு நிகழும் சாதீய மோதல்கள் தமிழ்த்தேசிய உணர்ச்சியின் தோல்வியாக விவரிக்கப்படுவதன் அரசியலும் மிக நுட்பமானது. இரண்டு சாதிகளுக்கு இடையே நிகழும் மோதல்களால் கண்டிப்பாக பலன் அடைகிற பாத்திரத்தினை தமிழ்த்தேசியர்கள் வகிக்கவில்லை என்பது உண்மை என்பதோடு சாதீய உணர்வை தூண்டி மோதல்களை உருவாக்கி அதனால் ஏற்படும் அதிர்வுகளால் தன் அரசியல் பிழைப்பு வாத இருப்பினை தக்க வைத்துக்கொள்ள சாதீய அரசியல் கட்சிகளும், சாதீய சங்கங்களும் முயல்கின்றன என்பதும் நம் கருத்தில் கொள்ள வேண்டிய செய்தியாக இருக்கின்றன. இன்னும் ஆழமாக கவனித்தால் சாதீய சங்கங்களும், அதனைச் சார்ந்த அரசியல் கட்சிகளும் சமூகத்தில் வாழ்வதற்கான சக்தியை இதுப் போன்ற சாதீய மோதல்கள் மூலம் தக்க வைக்கின்றன.
தம் இனத்திற்காக சாதிகள் கடந்து சாதிக்க துடித்த ஒரு இனத்தின் மக்கள் தங்கள் சாதிகளுக்காக போர்க் கோலம் பூண்டு நிற்கிறார்கள். மாமல்லபுரத்தில் நடந்த வன்னியர் இளைஞர் பெருவிழாவினை ஒட்டி மரக்காணம் உள்ளீட்ட பகுதிகளில் நிகழ்ந்த சாதீய மோதல்கள் தமிழக மண்ணை அமைதியற்ற நிலமாக மாற்றி இருக்கின்றன. அங்கு ஆண்ட சாதி என்றும், உயர்ந்த சாதி என்றும் உதிர்க்கப்பட்ட வார்த்தைகள் உறுதியாக கண்டிக்கத்தக்கது. சகத் தமிழனை இழிவாக நிறுவ முயலும் ஆதிக்க சாதி உளவியல் தமிழ்த்தேசிய ஒர்மைக்கு எதிரானது. ஒன்று பட்ட இனத்திற்குள் குண்டு வைக்கின்ற வேலையை செய்கின்றன. அறிவியல் வளர்ச்சி விண்ணைத் தொட்ட இக்காலத்திலும் ஆதிக்க சாதி உணர்வினால் சக மனிதனை இழிவாக நடத்துவதும், தரக்குறைவாக நினைப்பதும் நாம் பேண விரும்பும் தமிழிய பெருமைகளுக்கு எதிரானதாக இருக்கிறது.இந்நிலை இழிநிலையிலும் இழிநிலையானது.
தமிழக மண்ணை தாண்டினால் சபரிமலையில் தமிழன் முகத்தில் வெந்நீரை ஊற்றி துரத்துகிறான் கன்னடன். ஈழத்தில் கொத்து கொத்தாய் தமிழர்களை கொன்று குவித்தான் சிங்களன். தமிழனின் வயிற்றில் அடிக்க முல்லை பெரியாறு அணையை உடைக்க காலம் கணித்துக் கொண்டிருக்கிறான் மலையாளி. கூடங்குளம் அணு உலை திறந்து தமிழ்நாட்டினை சுடுகாடாக்க முடிவு செய்து விட்டான் வடவன். மூன்று தமிழர்களின் கழுத்தில் இறுகிக் கொண்டிருக்கும் தூக்குக்கயிறு என்று உயிர் பறிக்குமோ தெரியவில்லை. தமிழர்களை வீழ்த்த, அழிக்க எதிரிகள் அனைவரும் ஒன்று சேர்ந்து..ஒத்த அலை வரிசையில் ஒன்றாக நிற்கும் போது தமிழன் தனக்குள்ளே சாதியாக அடித்துக் கொண்டு சாகின்றான். இவன் ஆண்ட சாதி, இவன் அடங்கிய சாதி என்று கணக்கு வைத்தா தமிழனின் முகத்தில் வெந்நீர் ஊற்றுகிறான் கன்னடன்..? இசைப்பிரியா இந்த சாதியவள் என்று அடையாளம் கண்டு அழித்தான் சிங்களன்..? . எதிரிகள் தெளிவாக இருக்கின்றார்கள். எனதருமை தமிழினம் இழிவாக கிடக்கின்றது.
சாதியின் பெருமிதத்தினை நிறுவி பராமரிக்க லட்சக்கணக்கில் மக்களை திரட்ட முடிந்த ஒரு கட்சியால் ..லட்சக்கணக்கில் நம் தொப்புள் கொடி உறவுகள் ஈழத்தில் கொன்று குவிக்கப்பட்ட போது பலன் தரக்கூடிய முன்னெடுப்புகளை ஏன் எடுக்க முடியவில்லை என்கிற வினாவிற்கு இங்கு யாரிடத்திலும் பதிலில்லை. சகத் தமிழனின் குடிசைகளை கொளுத்துவதில்..சொத்துக்களை சூறையாடுவதில், கட்டப்பஞ்சாயத்து செய்து காசு பார்ப்பதில் இவர்களுக்குள்ள அக்கறையை , ஆர்வத்தினை என்றாவது இந்த இனம் செழிக்க,வளர காட்டி இருக்கிறார்களா என்றால்..இல்லை.
பெருமைகள் பல வாய்ந்த தமிழ் மரபில் சாதிக்கான இடம் சரித்திரத்தில் எங்கும் இல்லை.வந்தேறி மரபான ஆர்ய வருணாசிரம தத்துவத்தால் தொழில் பிரிவுகளாக வேர்விட்ட சாதீயம் இன்று தமிழ்ச் சமூகத்தின் நிரந்தர பிரிவுகளாக மாற்றப்பட்டதன் விளைவே இன்றளவும் சகத்தமிழனாலேயே தமிழனின் குருதி தமிழக மண்ணில் சிந்துகிறது. 50 ஆண்டுகளாக ஆட்சிப் பொறுப்பில் இருக்கும் சாதீய ஒடுக்குமுறைக்கு எதிராக தோன்றிய திராவிட தத்துவம் வழி வந்த ஆட்சியாளர்கள் தனது அரசியல் லாபங்களுக்காக சாதீய பிளவுகளை தமிழக மண்ணில் தக்க வைத்துக் கொண்டிருக்கின்றார்கள். சாதி கடந்து தமிழர்கள் ஒன்று பட்டு நின்றால் தெலுங்கனும்,கன்னடனும் திராவிடத்தின் பெயரினால் இங்கே அரசியல் பிழைப்பு நடத்த முடியாது என்பதில் திராவிட அரசியலாளர்கள் தெளிவாக இருக்கின்றார்கள். சாதி என்கிற பிளவு இருந்தால்தான் தங்கள் பிழைப்பும் ஒடும் என்பதில் சாதீய சங்கத்தினரும், அதனைச்சார்ந்த அரசியல் கட்சியினரும் கவனமாக இருக்கின்றார்கள். எப்போதெல்லாம் இந்த இனம் ஒன்று பட்டு வீதிக்கு வருகின்றதோ..அப்போதெல்லாம் சாதீய பெரு நெருப்பினை ஊதி ஊழித்தீயாக மாற்றுகின்ற வேலையை திட்டமிட்டு சாதீய அரசியல்வாதிகள் செய்கின்றனர். தமிழர்களாக இச்சமூகம் திரண்டு விடக்கூடாது என்கிற பணியை சாதீயவாதிகள் தொடர்ந்து செய்து வருகின்றனர். இதில் எந்த பங்கும் வகித்திராத தமிழ்த்தேசியர்கள் மேல் தேவையில்லாமல் விமர்சனங்களை சிலர் எழுப்புவது உள்நோக்கமுடைய அரசியல் நடவடிக்கையே.
தமிழர் என்பது வெறும் இனத்தை சுட்டும் ஒரு சொல்லல்ல. மாறாக அது ஒரு பிரகடனம். தமிழன் என்று தன்னை அறிவிக்கிறவன் சுய சாதி மறுப்பாளானாக, மத மறுப்பாளானாக விளங்குகிறான். அனைத்து விதமான ஒடுக்குமுறைகளுக்கும் எதிரான உளவியலை தமிழ்த்தேசிய உணர்வே சாத்தியப்படுத்துகிறது.தமிழர் களில் யாரும் உயர்ந்தோரும் இல்லை. தாழ்ந்தோரும் இல்லை. இந்த அளவுக்கோலை மீறி யோசிக்கும் யாரும் தமிழர்களே...ஏன்..மனிதர்களே இல்லை.
ஒடுக்கப்பட்ட தமிழர்களுக்கு ஆதரவாக, ஆதிக்கச் சாதி உளவியலுக்கு எதிராக களத்தில் முதன்மையாக நிற்பவர்கள் தமிழ்த்தேசியர்களே. சாதீய முரண்களால் மிகுந்த பின்னடைவினை சந்திப்பது தாம் அனைவரும் ஒரினம் என்ற உளவியல். இந்த உளவியல்தான் தமிழ்த்தேசிய உணர்வின் அடிப்படையாக இருக்கிறது. மாவீரன் முத்துக்குமாரும், தங்கை செங்கொடியும், அண்ணன் அப்துல் ரவூப்பூம் சுய சாதி ,மத உணர்ச்சியை தகர்த்து இனம் வாழ விழுந்த விதைகளாய் வரலாற்றில் சாட்சிகளாய் .. தமிழ்த்தேசியர்களின் இலக்கணமாய். காணக்கிடைக்கிறார்கள். சாதி என்கிற உணர்வினை உருத்தெரியாமல் அழித்தொழிக்க வேண்டுமானால் நாம் தமிழர் என்கிற உணர்வினை ஒவ்வொரு தமிழனும் பெற்றாக வேண்டும்.இது ஒன்றே கடந்த வரலாறு கற்பித்த விளைச்சலாக இருக்கிறது . தர்மபுரி,மரக்காணத்தில்,பாப்பா பட்டி ,கீரிப்பட்டி, திண்ணியத்தில் எரிந்த குடிசைகளும்.. அடைந்த இழிவுகளும்..ஈழத்தில் எரிந்த உடல்களும்..அடைந்த அழிவுகளும் வெவ்வேறானவை அல்ல.. எரித்த சிங்களனும்..இவர்களும்.. வெவ்வேறானவர்கள் அல்ல என்ற புரிதலோடு சாதீயத் தகர்ப்பினையும் தனது இன விடுதலைக்கு ஒப்பான இலட்சியமாய் சுமந்து...பயணிக்கும் நாம் தமிழர்களின் அரசியல் பாதை உண்மையில் புரட்சிக்கரமானது. அதுவே சாதீயத்தை ஒழிக்கும் கருவியை சாத்தியப்படுத்துவது.
”சாதிமத பேதங்கள் மூட வழக்கங்கள்
தாங்கிநடை பெற்று வரும் சண்டையுலகிதனை
ஊதையினில் துரும்பு போல் அலைக்கழிப்போம்: பின்னர்
ஒழித்திடுவோம்; புதியதோர் உலகம் செய்வோம்” –பாவேந்தர் பாரதிதாசனார்.
நாம் தமிழர்.
புதியதோர் உலகம் செய்வோம்
ReplyDeleteஎதிரியினால் அழிந்ததற்கும் மேலாக தமிழன் அழிந்தது ஒற்றுமையற்ற செயலாலும் சாதிய சண்டைகளினாலுமே. ஈழத்துப் போராட்ட களத்திலே முதல் களையப்பட்டது சாதிய பிரச்சனையே. எம் தலைவர் அதில் வெற்றியும் பெற்றார். இனியாவது இத்தனை அழிவுகள் ஏற்பட்ட பின்னாவது தமிழன் தன்மை உணர்ந்து ஒன்றுபடுவானா?
ReplyDelete