அய்யா பசும்பொன் முத்துராமலிங்கனார் சிலைக்கு இடது சாரிகள் மரியாதை செய்கிறார்கள். அவரின் சிலைக்கு புதிய தமிழகம் கிருஷ்ணசாமி மாலை அணிவித்து மரியாதை செய்கிறார். திமுக,அதிமுக, காங்கிரஸ் உட்பட பல கட்சிகள் நேரடியாகவே கலந்துக் கொள்கின்றன. வருடா வருடம் பசும்பொன்னுக்கு வைகோ போகிறார். விசி மதுரை விமானநிலையத்துக்கு பசும்பொன் முத்துராமலிங்கனார் பெயர் சூட்டி வலியுறுத்தி தீர்மானம் இயற்றிய கதையும் உண்டு. இறந்து மண்ணாய் கரைந்தவர்கள் கொண்டிருந்த பகைமையை அடுத்த அடுத்த தலைமுறைகளுக்கு கடத்தி வரும் அரசியல் யாரையும் மீட்க அல்ல. அனைவரையும் புதைகுழியில் போட்டு அழிக்க.
செத்துப் போன பகையில் தான் அரசியல் பிழைப்பு இருக்கிறது என்று நம்புபவர்களுக்கும், முரண்கள் கலையாமல் குடிசைகளும், உயிர்களும் கொளுத்தப்பட வேண்டும் என்று நினைப்பவர்களுக்கும் வேண்டுமானால் பசும்பொன்னும், பரமக்குடியும் வெவ்வேறானதாக இருக்கலாம். எங்களைப் பொறுத்தவரை அவர்கள் இருவரும் தமிழ்ச் சமூகத்தின் தவிர்க்க முடியா இரு சக்திகள். அவர்களை நாங்கள் புறக்கணிக்காமல் அணுகுவதன் அடிப்படையே அவர்கள் பின்னால் நிற்கும் கோடிக்கணக்கான மக்களை தமிழ்த்தேசியத்தின் பாற் ஈர்க்கும் அரசியல் சார்ந்தது.
மக்கள் திரள் மிக்க தமிழ்நாட்டின் இரு பெரும் சமூகங்கள் காலங்காலமாக முரண் பட்டு நிற்பதை தணிக்க வேண்டிய வரலாற்றுக் கடமையும் எங்களுக்கு உண்டு . எனவே தான் அந்த பொறுப்புணர்வோடு நாங்கள் இதை அணுகுகிறோம். கடந்த முறைகளில் நாங்கள் அவ்விடங்களுக்கு சென்ற போது மக்கள் சீமானைப் பார்த்தவுடன் பிரபாகரன் வாழ்க என்று முழக்கமிட்டது போன்ற சம்பவங்களும் நடந்தன. சமூகம் அவர்களை நேசிக்கிறது. சாதிக்குழுக்களாய் பிரிந்துக் கிடக்கிற தமிழ் இனத்தின் இரு பெரும் சமூகத்தினரை புறக்கணித்து விட்டு அல்லது புறம் தள்ளி விட்டு ..தனியே நின்று எதனையும் வெல்ல முடியாது . மக்களிடையே கலந்துதான் பொதுக்கருத்தொன்றை சரியான கருத்துக்களாக மாற்ற வேண்டும். இணையத்தில் இருமிக் கொண்டும் தும்மிக் கொண்டும் இருப்பவர்கள் அவர்களது தட்டச்சுப் பலகையை வேண்டுமானால் தட்டிக் கொண்டு இருக்கலாம். இவர்களை தாண்டிதான் சமூகம் இருக்கிறது. சொல்லப்போனால் இந்த வருடம் பசும்பொன்னிற்கோ,பரமக்குடிக்கோ சீமான் செல்ல கூட இல்லை. ஆனால் அய்யா முத்துராமலிங்கனாரின் குருபூசை நிகழ்வுகளுக்கு வருடாவருடம் தவறாமல் செல்பவர்களை நாசூக்காக விட்டு விட்டு அய்யா இமானுவேல் சேகரன் குருபூசை நிகழ்வில் இதுவரை எட்டி பார்க்காதவர்களை கூட கண்டுக் கொள்ளாமல் விடுத்து , நாம் தமிழர் மீது மட்டும் பாய்ந்து பாய்ந்து தாக்குவதன் அரசியல் காழ்ப்புணர்ச்சியானது.
இதன் பின்னால் எந்த தத்துவார்த்த அரசியல் வெங்காயங்களும் இல்லை. தனிப்பட்ட எரிச்சலும், வன்மமும்தான் இருக்கின்றன. பழமை வாதங்களுக்கு நியாயம் கற்பிப்பதல்ல எமது பணி. ஆனால் சமூகம் இவ்வாறாகத்தான் இருக்கிறது. இதை ஒரு நொடிக்குள் மாற்ற நாங்கள் மந்திரவாதிகள் அல்ல. எடுத்துக்காட்டாக பசும்பொன்னுக்கு செல்கிற யாரும் அய்யா இமானுவேல் சேகரன் நினைவிடத்திற்கு சென்றதில்லை. எட்டிக்கூட பார்த்ததில்லை. ஆனால் நாங்கள் தான் இரு இடங்களுக்கு சென்று மக்களை சந்தித்தோம். அது ஒரு விதமான நல்லிணக்க நடவடிக்கை. இது போன்ற நல்லிணக்கம் தான் அடிப்படையில் தேவைப்படும் மாற்றம். தமிழனுக்காக அரசியல் பேசப்படுவதும் , தமிழினத்திற்குள்ளாக இருக்கும் சாதிய முரண்கள் களையப்படுவதற்கு சாதகமான இது போன்ற விவாதப்பரப்புகள் ஏற்படுவதும் நாங்கள் மாற்றமாகவே பார்க்கிறோம். சாதியற்ற சமூகம் அடைய சாதியான மக்களைத்தானே நாடவேண்டியிருக்கிறது..?
No comments:
Post a Comment