4/5/09

திருமா- மன உரம் தந்த அறம்…



மிகத் துயரமான சூழலில் அண்ணன் தொல் .திருமாவளவன் அவர்கள் இன்று மூன்றாம் நாள் உண்ணாவிரத அறப்போரை தொடர்ந்துள்ளார். மருத்துவர்கள் அவரது உடல் நலம் மோசமாகி வருவதை சுட்டிக் காட்டிக் கொண்டே இருக்கின்றனர். வருகின்ற கட்சித் தொண்டர்களுக்காக மேடையில் உரையாற்ற வேண்டிய கட்டாயம் வேறு அவருக்கு.

நேற்றிரவு பேசிய பேரா.சுப.வீ கூட திருமாவை அடிக்கடி பேச வைக்க வேண்டாம் என்று கேட்டுக் கொண்டார். இந்த நிலையில் இன்று ஊடகங்களில் வெளிவந்த முதல்வர் கலைஞரின் அறிக்கையும், சற்று முன் வந்த மேனன் சந்திப்பிற்கு பிறகு சிங்கள பேரினவாத அரசின் வெளியுறவு அமைச்சரின் பேட்டியும் கவனிக்க வேண்டியவைகளாக உள்ளன.

முதலாவது கலைஞரின் அறிக்கை. வழக்கம் போல பழமையான புள்ளி விபரங்களும்,சோர்வளிக்க கூடிய செய்திகளையும் தாங்கி வந்திருக்கிறது. எப்போதும் சொல்லும் போராட்டக் குழுக்களுக்கு இடையே நிலவிய பகைமையை பற்றி இப்போது மீண்டும் பாடி இருக்கிறார் கலைஞர். அங்கே நொடிக்கு நொடி உயிர் போய் கொண்டு இருக்கிறது. இங்கே பழைய பல்லவிகள்…விளக்கங்கள்..வில்லங்கங்கள்..

கலைஞர் அவர்களே..

உங்களிடமிருந்து இது போன்ற அறிக்கைகளை ஏராளம் படித்து விட்டோம் நாங்கள். தமிழின தேசியத் தலைவர் மேதகு.பிரபாகரன் அவர்கள் உங்களிடம் நிதி உதவி பெற மறுத்ததை மீண்டும் சுட்டிக் காட்டி உள்ளீர்கள்.

சரி ..இந்த அறிக்கைக்கு என்ன நேரடியான பொருள்..?

மேதகு.பிரபாகரன் அவர்கள் மீது தங்களது கோபம் குறைய வில்லை என்று நாங்கள் எடுத்துக் கொள்ளலாமா..? .கோபமும், வருத்தமும் கொள்ள வேண்டிய நேரமா…இது..

குவியல் குவியலாக மக்களை கொன்று குவித்து வரும் சிங்கள பேரினவாத அரசிற்கு எதிராக நாம் ஒன்றுமே செய்யாமல் ,நம் இனப்படுகொலையை ஆதரிக்கும் முகமாய் கள்ள மெளனத்துடன் கைக்கட்டி நிற்கிறோமே… இந்த ஈனச்செயலை புரியும் நம்மீது நம் ஈழச் சகோதரர்கள் வருத்தம் கொள்ள மாட்டார்களா..? பழைய வரலாறு,புள்ளி விபரங்களை பேச வேண்டிய நேரமா இது,…

தமிழினப் போராளியாக ,ஒன்று பட்ட தாயக தமிழகத்தின் ஒருமித்த குரலாய் இன்று சாகும் வரை உண்ணா விரதம் மேற்கொண்டு தன்னை வருத்தி, தனது இயலாமையை ஆற்றாமையை ,அர்ப்பணிப்பு உணர்வினை காட்டிக் கொண்டு நிற்கும் திருமாவின் உடல் நிலை மோசமாகிக் கொண்டுக் கொண்டிருக்கும் இச்சூழலில் இப்படிப்பட்ட அறிக்கைகள் முதல்வரிடமிருந்து தேவைதானா..?

ஒரு வார்த்தை..ஒரே ஒரு வார்த்தை..போரைநிறுத்து என்கிற ஒரு வார்த்தையை உதிர்க்க கூட மனமில்லாமல் தமிழினப் படுகொலையை ஆதரித்து நிற்கும் மத்திய அரசை பேச வைக்கும் மந்திரம் அறியாதவரா நம் முதல்வர்..?

கண்ணுக்கு எட்டிய தொலைவில் நம் தொப்புள் கொடி உறவுகள் உதிர்வதை காண்பதை நம்மால் இன்னும் சகித்து கொண்டு மானாட மயிலாட ஆடிக் கொண்டிக் கொண்டு இருக்கிறோம்..உலகிலேயே இனப்பற்று இல்லாமல் வேரற்று வீழப் போகும் இனம் தமிழினமாக இருப்பது தமிழ் குடியின் மூத்தக் குடி கலைஞருக்கு தெரிய வில்லையா..?

ஒரு கற்பனைக்கு வைத்துக் கொள்வோம். இந்த நேரம் ஜெயலலிதாவின் ஆட்சி நடைப் பெற்றுக் கொண்டு இருந்தால் கலைஞர் வீதியில் இறங்கி போராடி இருப்பாரே…இந்நேரம் முரசொலிக் கடிதங்கள் தமிழுணர்வையும், தன்மானத்தையும் பறை சாற்றி இருக்குமே…?

கலைஞர் அவர்களே…

இந்த பதவி…இந்த நாற்காலி …அனைத்தும் 5 வருடங்களுக்குதான்.. ஆனால் காலங் காலமாய் உங்களுக்காக மனதில் உயர்ந்த இடம் வைத்துக் கொண்டு ..உங்களது ஆறுதலுக்காக காத்திருக்கும் ஈழத் தமிழர்களை சிங்கள இன வெறியன் ராஜபக்சேவின் காலடியில் பலியாக்குவதற்காகவா இந்த அரசியல் விளையாட்டுக்கள்..?

வேதனையும்..கண்ணீரும் மிகுந்து நிற்கிற நம் சகோதரர்களை நட்டாற்றில் முழ்கடித்து விட்டு நம்மால் நிம்மதியாக வாழ முடியுமா..?

மத்திய அரசில் தனக்கு வேண்டிய பதவிகளை கேட்டு வாங்கிக் கொண்ட கலைஞரால் ..இன்று மத்திய அரசை பணிய வைக்க முடியவில்லை..

கலைஞர் அவர்களே…

உங்களைப் பற்றி எழுதிக் குவித்த ஞாநி,சோ,சுப்ரமணிய சுவாமி வகையறாக்களுக்கு எதிராக நாங்கள் தான் போர்க் குரல் எழுப்பினோம்..உங்கள் நாக்கை அறுப்பேன் என்று காவிக் கொடி தூக்கிய சாமியார் சாக்கடைகளுக்கு நாங்கள்தான் எதிர்ப்பை காட்டினோம்.. அந்த நள்ளிரவு கைதின் போது எங்கள் குடும்பத்து மூதாதையை கைது செய்வதாக கருதிக் கொண்டு நாங்கள் தான் போராட்ட களத்தில் நின்றோம்..

அப்போது இந்த ஈவிகேஎஸ்.இளங்கோவனோ..தினமலர் பத்திரிக்கையோ…உங்களுக்கு யாருமில்லை.. இந்த அப்பாவித் தமிழர்களை தவிர…

கிளிநொச்சி வீழ்ந்தது என்று அட்டகாசமாக சிரித்துக் கொண்டு செய்தி வெளியிட்ட ,உங்களை …உங்களது குடும்பத்தினரை ஆபாசமாக வசை பொழியும் தினமலரின் விழாவில் உங்களால் கலந்துக் கொள்ள முடிகிறது. உங்கள் ஆதரவின் தயவில் அவன் அண்ணன் திருமாவின் உண்ணா விரதத்தை நாடகம் என்று செய்தி போடுகிறான்..

பதவி இன்று வரும் ..நாளை போகும்… உங்களுக்கு ஒன்று என்றால் …காங்கிரஸ் காத தூரம் ஓடி விடும் ..அன்றும் இந்த தொல்.திருமாவும், ,அப்பாவித்தமிழனும் தான் வீதிக்கு வந்து நிற்பார்கள்…


இன்று சிங்கள பேரினவாத அரசின் வெளியுறவு துறை மந்திரியை நம் கேரளத்து மேனன் சந்தித்து முடித்த பிறகு அவர் ராஜீவ் –ஜெயவர்த்தனே ஒப்பந்தப் படி அனைத்து நடைபெற ஆவண செய்ய ,வேலைகள் நடப்பதற்காக, பணிகள் நடக்க இருப்பதாக மிக முக்கிய அறிவிப்பை வெளியிட்டு உள்ளார்..

மக்களை கொன்று தீர்த்து விட்டு..ராஜீவ்-ஜெயவர்த்தனே ஒப்பந்தம் நிறை வேற்றப்படும் என்பதுதான் இதன் பொருள்..

கலைஞர் அறிக்கையில் சொல்லியவாறு சிவசங்கர மேனன் ‘சாதித்து’ காட்டி விட்டார்.

இந்த நிலையில் தொல்.திருமாவின் உணர்வுப் போராட்டம் நாம் இன்னும் உயிருடன் இருப்பதற்கான ஆதாரமாக விளங்குகிறது. தொல். திருமா ஏற்றி இருக்கும் இந்த உணர்வுத் தீயை நாடெங்கும் பரவச் செய்வதுதான் நம் இனக் கடமையாக இருக்கிறது..

தமிழினமே..

இனியாவது விழித்துக் கொள்.
விழிகளை காத்துக் கொள்…

No comments:

Post a Comment