4/5/09

கலைப் போராளி சீமான் கைது...




அய்யா கலைஞர் அவர்களே..

கடுமையான விமர்சனங்களுக்கு பிறகும் நான் உங்களை ஆதரித்தே வந்திருக்கிறேன். உங்களை இழிவுப் படுத்தி எழுதும் கரங்களோடு நானே வலுக்கட்டாயமாக சண்டை போட்டு வந்திருக்கிறேன். ஆனால் தங்களது சமீபத்திய தமிழின எதிர்ப்பு செயல்பாடுகளால் தலையை தொங்கப் போட்டு அமர்ந்திருக்கிறேன்.
என்ன நேர்ந்தது தங்களுக்கு..?
காங்கிரஸின் காதல் உங்களுக்கு அவ்வளவு முக்கியமாக போய் விட்டதா என்ன..?
இன்று கூட ஈழத் தமிழர்களின் அரசியல் தலைநகர் கிளிநொச்சியை கைப்பற்ற பாகிஸ்தான்,சீனா உள்ளிட்ட நாடுகளோடு இந்தியாவும் இலங்கைக்கு நிபுணத்துவ கருத்துக்களை வழங்கியுள்ளதாக சன் தொலைக்காட்சி தெரிவிக்கிறது . மறுபக்கம் காலணா பெறாத காங்கிரஸிற்காக இனமான சுயமரியாதை வீரர்கள் அண்ணன் கொளத்தூர் மணி,அய்யா பெ.மணியரசன் , கலைப்போராளி அண்ணன் சீமான் ஆகியோரை தமிழின உணர்வு என்ற ஒரே காரணத்திற்காக கைது செய்கிறீர்கள் . இது தான் தாங்கள் எங்களுக்கு அளிக்கும் வெகுமதியா..?

மழையில் கைக் கோர்த்து நின்றும் அங்கு குண்டு மழை நிற்க வில்லை. தீர்மானம் போட்டும் அங்கே நம் சகோதரிகளின் மானத்திற்கு உறுதி இல்லை. அனைத்து கட்சி கூட்டங்கள் கூடியும் அவலங்கள் தீர வில்லை. ஆனால் வீரச் சமர் புரியும் நம் சகோதரர்களின் உயிரை பறிக்க நம் இந்தியா இன்னமும் நிபுணர்களை அனுப்பிக் கொண்டு இருக்கிறது. குண்டூசி முனையளவு கூட மத்திய அரசை நகர்த்த முடியாத நமக்கு ….அண்ணன் சீமானை கைது செய்ய மட்டும் முடிகிறது,
கேவலம்..இன்னும் நம்மால் பிரணாப் முகர்ஜியை கூட அசைக்க முடியவில்லை.
காரணம்..மிகவும் சொற்பம்.. அரசியல்.
சோவும், சுப்பிரமணிய சாமியும் ,ஜெயலலிதாவும் மகிழும் படி காங்கிரஸ் ஆட்சி நடத்தும் தலைவா….
இன்னும் கைது செய்யவும்…அடக்கி ஒடுக்கவும் ஏராளம் இருக்கின்றனர்..நாட்டில்..
கைது செய்யுங்கள். சிறைகள் நிரம்பட்டும்…

No comments:

Post a Comment