முதிர்வின் நட்பு நடமாடும் குளத்தருகே
பாசிகளோடு சிந்திக் கிடந்த
பசுமையான சில சொற்களை பார்த்ததாக
அப்பா சொன்னார்.
தத்தி தவழ்ந்து வந்து கட்டி அணைத்து கன்னம்
பதித்த மழலை ஒன்று மஞ்சள் சொல்லொன்றை
மகிழ்வுடன் பரிசளித்துப் போனது.
கடந்துப் போன காலமொன்றை இழுத்து வந்த
நினைவு ஒன்று , பெருமூச்சோடு செம்பருத்தி பூவில் இருந்து
உதிரும் சிவந்த சொல் ஒன்றை கையளித்துப் போனது.
இடையறா முயக்கத்தின் வெளிச்சத்தில்
காம கடும் புனல் தருணமொன்று ..கிறங்கிய சொல் ஒன்றில்
நிலவின் துளி ஒன்றை நிறுத்தி வைத்துப் போனது.
பொழிந்த மழையின் கசிவாய் நகரும் காற்றின் சிறகொன்று
யாருக்கும் தெரியாமல் சிலிர்ப்பின் சொல்லுக்கடியில்
ஊதா நிறமொன்றை ஒளித்து வைத்துப் போனது.
இழுத்து உருவேற்றி கட்டிய வில்லொன்றின் குறியாய்
இலக்கின் இதயம் நோக்கி பாயும் சொல்லொன்றை எய்து
விட்டுப் போன மனைவியின் நிழலில் தணல் ஒன்றின் நிறம் கண்டேன்..
பின்னிரவு சாலையில் வெளிச்சப் பெருக்காய் கசியும் விளக்கொன்றின்
தனிமைத் துயரின் மிச்சத்தில் வெளிறிய பழுப்பின் வாசம் அறிந்தேன்..
முள்வேலிக்குள் முடங்கிக் கிடக்கும் உறவொன்றின் துயரப் பெருக்கில்
விடியாத இரவொன்றின் நிறம் எடுத்தேன்..
நிறம் சேர்த்த தூரிகையில் வரைய தொடங்கினேன்..
இந்த யுகத்திற்கான இறுதி ஒவியமொன்றை..
முடித்து பார்த்து அதிர்ந்தேன்.
வெள்ளைத் தாளின் வெறுமை கண்டு.
அதிர வைக்கிறது எழுத்துக்கள் -
ReplyDeleteமுடித்து பார்த்து அதிர்ந்தேன்.
ReplyDeleteவெள்ளைத் தாளின் வெறுமை கண்டு.//
நச்!
மணி, நீங்க எப்போல இருந்து இப்படியெல்லாம் எழுதுவீங்க. ச்சே, இத்தனை நாளா உங்க எழுத்துகளை மிஸ் பண்ணிட்டேனே...