7/15/10

அலைக்கழிப்பின் இறுதி.


துடித்து வெடித்த நொடிக்குள் கிழித்த காற்றை

அருந்திற்று அம்பு.

அம்பின் துளிர்ப்பில் அதிரட்டும் இலக்கு.

இருட்டின் பெருவெள்ளத்தில் நகரும் சுடராய்

அலைந்தது இலக்கு.

எய்யப்பட்ட அம்போடு பயணம் போன பார்வையும்

சற்று முன்னதாகவே சென்று குத்திற்று இலக்கில்.

இலக்கின் அலைக் கழிப்பில் நிதர்சனத்தின் ஆட்டம்.

அம்பின் நுனியில் நம்பிக்கையின் சுமை.

விசுவாசத்தின் பெருக்கில் கரைந்தது திசைகளின் சுழற்சி.

நகராமல் ..விலகாமல் நடு உச்சத்தில் பெருகிற்று வெப்பம்.

நொடியை பிரித்து கசக்கி முகர்ந்தது வெறியேற்றிய வேகம்.

மூர்க்கத்தின் துளியில் துவங்கிற்று முடிவிற்கான துவக்கம்.

நெருங்கிய இடைவெளி இழைக்குள் நுழைந்த காற்றின் கேசம்

அறுப்பட்டு சிதறிற்று காண்.

தொட்ட துளியில் இலக்கின் புள்ளியில் உறங்கியது வில்லாளனின் குறி.

அம்பின் நுனி துளைத்து கிழித்தத் துளியில் இன்னமும் மிச்சமிருக்கும் இலக்கு.

துளைத்த கணத்தில் ஆடி அதிர்ந்தது வில்.

1 comment:

  1. கனமான பொருளை விட்டுச் செல்கின்றன வார்த்தைகள்.

    ReplyDelete